திங்கள், 26 ஏப்ரல், 2021

திமுக ஆட்சி அமைந்த பிறகு, எந்தச் சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது - மு.க.ஸ்டாலின்

 தினத்தந்தி :சென்னை,  ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் ஆக்சிஜன் ஆலை அமைப்பது பற்றிய விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக முடிவெடுக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்.
கூட்டத்தில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டுமே அனுமதி, மின்சாரத்தைத் தமிழக அரசு மட்டுமே வழங்க வேண்டும்,
இதை வைத்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடவடிக்கை, எதிலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் செயல்பட அனுமதி வழங்கக் கூடாது,
4 மாதத்திற்கு மட்டுமே தற்காலிக அனுமதி, ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்து தமிழகப் பயன்பாட்டுக்குப் போக வெளி மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் தரப்பில் ஒருமித்த கருத்தாக வெளிப்பட்டது.
அனைத்துக் கட்சிகள் கருத்தை அரசு ஏற்கும் என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, ஆக்சிஜன் உற்பத்திக்காக 4 மாதங்களுக்கு மட்டுமே அனுமதிக்கலாம்,


ஆக்சிஜன் உற்பத்தியை உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்துக் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, எந்தச் சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திமுகவின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இருவரும் பங்கேற்று, திமுகவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானதுதான். திமுக ஆட்சி அமைந்த பிறகும் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: