ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

இந்தியாவிற்கு கைகொடுக்க முன்வரும் உலக நாடுகள்! சீனா பாகிஸ்தான் பிரான்ஸ் அவுஸ்திரேலியா ..

 நக்கீரன் செய்திப்பிரிவு  :   இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது.
தினசரி 3 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்படுவதுடன், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்றி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வெளியே காத்துக்கிடக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது.
இந்தநிலையில், கரோனாவிற்கு எதிரான போரில், இந்தியாவிற்கு உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. இதுதொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், "மீண்டும் எழுந்துள்ள கரோனா அலையின் எழுச்சியை எதிர்கொண்டு வரும் இந்திய மக்களுக்கு, ஒற்றுமைக்கான செய்தியை அனுப்ப விரும்புகிறேன். யாரையும் விட்டுவைக்காத இந்தப் போராட்டத்தில், பிரான்ஸ் உங்களுடன் (இந்தியர்களுக்கு) இருக்கிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயராக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு உதவ சீனாவும் முன்வந்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. "தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சீன அரசாங்கமும் மக்களும், இந்திய அரசாங்கத்தையும் இந்திய மக்களையும் உறுதியாக ஆதரிக்கின்றனர்.


மேலும், இந்தியத் தரப்பின் தேவைகளுக்கு ஏற்ப ஆதரவையும் உதவிகளையும் வழங்க தயாராக உள்ளனர். இதுதொடர்பாக சீன தரப்பு, இந்திய தரப்புடன் தொடர்பில் இருந்து வருகிறது" என சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
“புதிய கரோனா அலையை எதிர்கொள்ளும் இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு, ஆஸ்திரேலியா ஒற்றுமையை தெரிவிக்கிறது. எங்கள் பிராந்தியத்திற்கு தடுப்பூசி வழங்கிய இந்தியாவின் தலைமைத்துவமும், பெருந்தன்மையும் பாராட்டத்தக்கது” எனக் கூறியுள்ள ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர், கரோனா தொற்றை தோற்கடிக்க, இந்தியாவுடன் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவிற்கு பாகிஸ்தான் உதவ வேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தானியர்கள் ட்விட்டர் வழியாக கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்தநிலையில் இம்ரான் கான், "கரோனாவின் ஆபத்தான அலையை, எதிர்த்துப் போராடி வரும் இந்திய மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்த விரும்புகிறேன். நமது அண்டை நாட்டிலும், உலகம் முழுவதிலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமாக பிரார்த்திக்கிறோம். மனித குலத்திற்கு எதிரான இந்த உலகளாவிய சவாலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராட வேண்டும்" என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: