ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது ஏன்?

RISHAD BATHIUDEEN
BBC :அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார். ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் இன்று (ஏப்ரல் 24) அதிகாலை கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தின வெடிகுண்டு தாக்குதலில் தற்கொலை குண்டுத்தாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாகவும், அவர்களுடன் தொடர்புகளை பேணியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக அஜித் ரோஹண கூறியுள்ளார் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் சரத்துக்களுக்கு அமையவே, ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

கொழும்பு - பௌத்தாலோக மாவத்தை பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று, அவரது சகோதரரான ரியாஜ் பதியூதீன், கொழும்பு - வெள்ளவத்தை பகுதியிலுள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக, பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்து விசாரணை நடத்தும் எனவும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அஜித் ரோஹண குறிப்பிடுகிறார்.

எந்தவொரு குற்றச்சாட்டையும் செய்யாத தன்னை, நள்ளிரவு வேளையில் கைது செய்வதானது, அரசியல் பழிவாங்கல் என ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தனது வீட்டிற்கு வருகைத் தந்த சந்தர்ப்பத்தில், தனது பேஸ்புக் ஊடாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை கைது செய்வது, தமது சமூகத்திற்கு எதிரான அடக்குமுறை எனவும், தனது சமூகத்தின் குரலை நசுக்குவதற்கான சதியாக தான் இதனை பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.

தனது சமூகத்திற்காக பேசும், ஜனநாயக ரீதியான கட்சியொன்றின் தலைவரை நள்ளிரவு வேளையில் கைது செய்வதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

கோவிட் தொற்றை காரணம் காட்டி, 200 ஜனாஸாக்களை தகனம் செய்து, அதனூடாக மகிழ்ச்சி கொண்டாடியதை போன்றே, குற்றம் செய்யாத தன்னையும் கைது செய்வதாக அவர் கூறுகிறார்.

கைது செய்வதற்கு நாடாளுமன்ற சபாநாயகரிடம் அனுமதி பெறப்பட்டதா என தனது மனைவி, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கு எந்தவித பதிலையும் அவர்கள் வழங்கவில்லை என ரிஷாட் தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சியாளர்களை அழித்து விடும் என இறைவனிடம் கையேந்துமாறு, தனது ஆதரவாளர்களிடம், ரிஷாட் பதியூதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய, நாடாளுமன்ற தெரிவுக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு, குற்றப் புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரிஷாட் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்நிலையிலேயே, இன்றைய தினம் அவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: