சனி, 6 மார்ச், 2021

பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு - நடந்தது என்ன?

பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு - நடந்தது என்ன?
daylithanthi  :சென்னை,தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தனர். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு முடிந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. தரப்பில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் பா.ஜ.க. சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள அறிக்கை வெளியானது. அதில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தமாகியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

நள்ளிரவில் கையெழுத்து

அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மூன்று கட்டங்களாக நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வாரம் சென்னை வந்த போது நட்சத்திர விடுதியில் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

அப்போது பாஜகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்க அமித்ஷா வலியுறுத்திய நிலையில், பேச்சுவார்த்தை இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்றது. இதற்கிடையே, வேட்பாளர் நேர்காணல் என அதிமுக வேகம் எடுத்ததால் பாஜக தொண்டர்கள் சற்றே குழம்பி போனார்கள். இந்த நிலையில், நள்ளிரவில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து சத்தமில்லாமல் தொகுதி உடன்படிக்கையும் அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அந்த உடன்படிக்கையில் அதிமுக சார்பில் ஓபிஎஸ்- இபிஎஸ் கையெழுத்திட்டுள்ளனர்.பாஜக சார்பில் பிரசாரத்தில் இருந்ததால் எல்.முருகன், சி.டி ரவி பேக்ஸ் மூலம் கையெழுத்திட்டுள்ளனர்.

30 தொகுதிகள் வரை பாஜக கேட்டதாகவும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் 20 தொகுதிகள்தான் என அதிமுக கடைசி வரை கறார் காட்டியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை: