செவ்வாய், 2 மார்ச், 2021

தனிச்சின்னத்தில் போட்டி- வைகோ அறிவிப்பு.. வரும் சட்டமன்ற தேர்தலில்!

வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டி- வைகோ அறிவிப்பு
maalaimalar : சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல்கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகின்றன தி.மு.க.வை பொறுத்தவரை, அந்த கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. நேற்று 2-வது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தி.மு.க உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் சந்தித்து, அவசர ஆலோசனை நடத்தினர். மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக அனைத்து தொகுகளிலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடும். மதிமுக தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். எத்தனை தொகுதிகள், பொது சின்னம் என வியூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். 8 தொகுதிகள் வெற்றி பெற்றாலே உரிய அங்கீகாரம் கிடைத்துவிடும். நல்லதையே எதிர்பார்ப்போம். திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவது அவர்களுடைய உணர்வு, நியாயம். மதிமுகவின் தேர்தல் அறிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். அதன்பிறகு தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும்” என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: