புதன், 3 மார்ச், 2021

நீங்கள் ஜெயிலுக்குப் போகப்போகிறீர்களா? எடப்பாடி பழனிசாமியிடம் ஆவேசப்பட்ட அமித்ஷா!

dddd
தாமோதரன் பிரகாஷ் - nakkeeran : அதிமுக - பாஜக இடையே நடந்த பேச்சுவார்த்தையில் அமித்ஷா எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகத் திட்டியுள்ளார். “அடுத்து அமையப்போவது திமுக ஆட்சிதான். நீங்கள் எல்லாம் ஆட்சியில் பல்வேறு தவறுகள் செய்திருக்கிறீர்கள். நாங்கள் இதுவரை ஜெயிலுக்குப் போகாமல் காப்பாற்றி வந்தோம். ஆனால் திமுக ஆட்சி அமைந்தால் நீங்கள் சிறைக்குச் செல்வது தவிர்க்க முடியாது. நான் தினகரனுடன் நேரடியாகப் பேசியுள்ளேன். நாங்கள் தினகரனுக்கு 20 சீட் கொடுக்கிறோம். அந்த சீட்டுகளைப் பாஜகவுக்கு கொடுத்துவிடுங்கள். பாஜக, தினகரனுக்கு சீட் கொடுக்கும். எங்களுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியைக் கொடுங்கள். அதில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜகதான் போட்டியிடும். மொத்தம் 60 தொகுதிகளை எங்களுக்கு கொடுங்கள். நாங்கள் விஜயகாந்த் உட்பட அனைவரையும் உங்கள் கூட்டணிக்கு கொண்டுவந்து தருகிறோம். எங்களது கணக்குப்படி சசிகலாவுக்கு ஐந்து சதவீத வாக்குகள் இருக்கிறது. அந்த ஐந்து சதவீத வாக்குகள் அதிமுகவுக்கு எதிராக போகுமானால், அதிமுக தோற்பது உறுதி” என அமித்ஷா எடப்பாடி பழனிசாமியிடம் நேரிடையாகவே சொல்லியிருக்கிறார். 

 தினகரன் அணியில் இல்லை என்றால் அதிமுக தோற்கும் என்பதும், தினகரனிடம் நேரடியாக நான் பேசினேன், அவர் பாஜக மூலம் சீட் பெறுவதை ஏற்கிறார் என அமித் ஷா சொன்னது எடப்பாடி பழனிசாமியை அதிர வைத்துள்ளது. அமித் ஷாவிடம் பேசிய பிறகு, ஓ.பி.எஸ்.ஸூம் சீனியர் அமைச்சர்களும் தனியாக பேசினார்கள். அதன்பிறகு அமித்ஷாவை தொடர்பு கொண்ட எடப்பாடி பழனிசாமி, தினகரன் அவரது குக்கர் சின்னத்தில் போட்டியிடக் கூடாது. இரட்டை இலை சின்னத்திலோ, தாமரை சின்னத்திலோதான் போட்டியிட வேண்டும் என புதிய நிபந்தனையை சொல்லியிருக்கிறார்கள். அது தொடர்பாக இன்னமும் எந்த முடிவும் ஏற்படாததால் அதிமுக - பாஜக பேச்சுவார்த்தை முடங்கிப்போய் நிற்கிறது என்றன பாஜக வட்டாரங்கள்.

 இந்தப் பேச்சுவார்த்தை விவரங்கள் தொடர்பாக தினகரனிடமும் பாஜக பேசியிருக்கிறது. இதை சசிகலாவை நேரில் சந்தித்து தினகரன் பகிர்ந்துகொண்டுள்ளார் என்கிறது அமமுக வட்டாரங்கள்.

கருத்துகள் இல்லை: