புதன், 3 மார்ச், 2021

திமுகவிடமே இரண்டு சீட்டை திருப்பித் தரும் மமக?

திமுகவிடமே இரண்டு சீட்டை திருப்பித் தரும் மமக?

minnambalam : வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி கடந்த மார்ச் 1ஆம் தேதி அக்கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.   வருத்தமான முகத்தோடு வெளியே வந்த மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா செய்தியாளரிடம் பேசுகையில், “நாட்டின் நலன் கருதியும் தமிழகத்தின் நலன் கருதியும் தியாக மனப்பான்மையோடு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்” என்று கூறினார்.

மனித நேய மக்கள் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஐந்து இடங்களில் போட்டியிடுவதாக ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதன் பிறகு நான்கு இடங்களை மட்டும் தனக்கு வைத்துக்கொண்டு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியை திமுகவிடம் திரும்பக் கொடுத்த வரலாறு மனிதநேய மக்கள் கட்சிக்கு இருக்கிறது.

இந்நிலையில் இந்த தேர்தலில் வெறும் இரண்டு சீட்டுகளுக்கு திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா என்ற ஆதங்கமும் கோபமும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிகார பூர்வமான பேஸ்புக் பக்கத்தில், அறிவாலய வாசலில் ஜவாஹிருல்லா பேட்டிக்கான பின்னூட்டங்களாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தொண்டர்கள், நிர்வாகிகளின் கடும் எதிர்ப்பை உணர்ந்த ஜவாஹிருல்லா நேற்று முழுவதும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பலரும் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

“நாம் 2016 சட்டமன்றத் தேர்தலின்போது மக்கள் நல கூட்டணியில் இருந்து வந்த அழைப்பையும் தவிர்த்து திமுக கூட்டணியிலே நீடித்தோம். தொடர்ந்து திமுக கூட்டணியின் பல்வேறு போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் பங்கெடுத்து இருக்கிறோம். காவிரி உரிமைக்கான நடைபயணத்தில் ஸ்டாலினோடு பேராசிரியர் ஜவாஹிருல்லா தொடர்ந்து நடந்து அதன் காரணமாகவே அவருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வளவு தூரம் திமுகவோடு நாம் பின்னிப்பிணைந்து அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட நிலையிலும் மனிதநேய மக்கள் கட்சிக்கு வெறும் இரண்டு சீட்டுகள் தான் என்பது தொண்டர்களையும் சமுதாய மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் அமையாது.

மேலும் நம்மை விட இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியை பலம் மிகுந்த கட்சியாக திமுக அங்கீகரித்து அவர்களுக்கு மூன்று இடங்களை கொடுத்துள்ளது, நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் நாம் ஒரு தொகுதி கேட்டபோது, ‘ சட்டமன்ற தேர்தலில் சேர்த்து தருகிறோம்’ என்று ஸ்டாலின் கூறியிருந்தார். அதன் பிறகான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் நாம் போட்டியிட்ட தொகுதியை நமக்குக் கொடுக்கவில்லை திமுக. அப்படி சேர்த்து தருவது என்பது இந்த இரண்டு இடங்கள் தானா என்ற கேள்வி மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் கப் அண்ட் சாசர் சின்னத்தில் போட்டியிட்டோம். ஆனால் இந்த முறை உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கிறது திமுக.

இது மட்டுமல்ல இப்போது கிடைத்திருக்கும் இரண்டு சீட்டுகளில் யார் யார் நிற்பது என்ற கேள்வியும் எழுந்து அதன் விளைவாகவும் பல சிக்கல்கள் கட்சிக்குள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. எனவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டை திமுகவுக்கே திரும்பக் கொடுத்தததைப் போல, இம்முறை இந்த இரண்டு தொகுதிகளையும் திமுகவிடம் திரும்பக் கொடுத்து விட்டால் என்ன, நமக்கு வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் நாம் தனியாகவே போட்டியிட்டால் என்ன என்று ஆலோசனையும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் மத்தியில் நேற்று இரவு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இன்று காலையும் ஆலோசனை தொடர்கிறது” என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்.

கருத்துகள் இல்லை: