திங்கள், 1 மார்ச், 2021

நள்ளிரவில் அமித் ஷா ஒதுக்கிய 2 மணி நேரம்... நடந்தது என்ன?

டிஜிட்டல் திண்ணை: நள்ளிரவில் அமித் ஷா ஒதுக்கிய 2 மணி நேரம்... நடந்தது என்ன?
minnambalam.com மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.அதிமுக கூட்டணியில் முதலில் பாமகவுக்கு என 23 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதியே அறிவிக்கப்பட்டது. அன்று காலையில் பாமகவுக்கு முன்னதாகவே பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி. சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் தனித்தனியே சந்தித்தனர்.

அந்தச் சந்திப்பில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 15 தொகுதிகள் என்று ஆரம்பித்தது அதிமுக. ஆனால், பாஜகவினரோ 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆரம்பித்து 25இல் வந்து நின்றனர். அதனால் அந்த பேச்சுவார்த்தை அப்படியே இருந்தது.

இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு அமித் ஷா சென்னை வந்தடைந்தார். புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் கூட்டங்களில் பங்கேற்பதற்காக அவர் சென்னை வந்தார். நேற்று காலையே அவரை சந்தித்த தமிழக பாஜக தேர்தல் குழுவினர், ‘அதிமுக தரப்பில் இத்தனை இடங்கள் தருவதாகச் சொல்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்துதான் 'நான் இன்று (பிப்ரவரி 28) சென்னை திரும்பியதும் அவர்களை சந்திக்கிறேன், முடித்துவிடலாம்' என்று கூறியிருக்கிறார். தகவல் அதிமுகவினருக்கும் அனுப்பப்பட்டது.

விழுப்புரம் கூட்டத்தை முடித்துக்கொண்டு இரவு பத்து மணிக்கு அமித் ஷா சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றார். அவருக்கு முன்னதாகவே அங்கே ஓ,பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சென்று காத்திருந்தனர். அமித் ஷாவுடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களும் வந்திருந்தனர். கொஞ்ச நேரம் அவர்களோடு பேசிய அமித் ஷா, பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரோடு பேசினார்,

பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு இணையாகவோ அல்லது அதற்கு உள்ளாகவோதான் பாஜகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது, பாஜக 5 தொகுதிகளில்தான் போட்டியிட்டது. சட்டமன்றத் தேர்தலிலும் அதையே நீட்டிக்க நினைத்த அதிமுக தலைமை சட்டமன்றத் தேர்தலில் 18இல் தொடங்கியது. ஏனென்றால் திமுகவைப் போல அதிமுகவும் 170க்கும் மேற்பட்ட இடங்களில் இரட்டை இலை போட்டியிடுவது குறித்து தெளிவாக உள்ளது. பாமகவுக்கு 23 கொடுத்துவிட்டு, பாஜகவுக்கும் 20க்கும் மேல் சென்றுவிட்டால், தேமுதிகவும் 20 தொகுதிகளுக்கு மேல் கேட்கிறது. அப்புறம் தமாகா இருக்கிறது. இதையெல்லாம் கணக்கிட்டால் 60 தொகுதிகளுக்கு மேல் கூட்டணிக்குப் போய்விடும் என்று கணக்கு போடுகிறது அதிமுக.

இந்த நிலையில் அமித் ஷா நேற்று இரவு இருவரையும் சந்தித்தார். அமித் ஷா ஹோட்டலுக்கு 10 மணியளவில் வந்தாலும், அங்கிருந்து இரவு ஒரு மணி நெருக்கத்தில்தான் புறப்பட்டிருக்கிறார். ஓபிஎஸ், இபிஎஸ்ஸோடு அதிமுக தொகுதிப் பங்கீடு பற்றி பேசியிருக்கிறார். பாஜக குழுவினர் தன்னிடம் அளித்த பட்டியலை வைத்துக்கொண்டு 35இல் இருந்து ஆரம்பித்திருக்கிறார் அமித் ஷா. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் மற்ற கூட்டணிக் கட்சிகளின் நிலைமைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ’என்ன சொல்றீங்க? நான்கைந்து தொகுதிகளில் அட்ஜஸ்ட் செய்துகொள்ள மாட்டீர்களா?’ என்று கேட்டிருக்கிறார் அமித் ஷா. இதையடுத்து 20 முதல் 25 இடங்கள் வரை பாஜகவுக்கு அளிக்கப்படலாம் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள் தமிழக பாஜகவினர். ‘அமித் ஷாஜி பேச்சுக்கு அப்பீல் இல்லை’ என்கிறார்கள் தமிழக பாஜக தரப்பில்.

அந்த ஹோட்டலில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் அமித் ஷா தங்கியிருந்தார். அதன் பிறகே டெல்லி புறப்பட்டார். எனவே அமித் ஷா தொகுதிப் பங்கீட்டுக்காக மட்டுமே இவ்வளவு நேரம் பேசியிருப்பாரா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஏற்கனவே தேமுதிக தங்களது தொகுதிப் பிர்ச்சினை பற்றி பாஜக கவனத்துக்கு சில விஷயங்களைக் கொண்டு போயிருக்கிறது. அதையும் தாண்டி அதிமுகவின் கட்சி ரீதியான சில பிரச்சினைகளையும் அமித் ஷா பேசியிருக்கலாம் என்றும் அதிமுக வட்டாரத்திலேயே சொல்கிறார்கள். ஒரு முடிவோடுதான் அமித் ஷா நள்ளிரவு சென்னையை விட்டுப் புறப்பட்டிருக்கிறார்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் சென்றது வாட்ஸ்அப்

கருத்துகள் இல்லை: