வியாழன், 19 நவம்பர், 2020

பூங்கோதை ஆலடிஅருணா தற்கொலை முயற்சி .. ஆலங்குளம் தி.மு.க எம்.எல்.ஏ - கடையம் கூட்டத்தில் நடந்தது என்ன?

பி.ஆண்டனிராஜ் -  vikatan : பூங்கோதை எம்.எல்.ஏ முன்னாள் அமைச்சரும் ஆலங்குளம் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான பூங்கோதை மன அழுத்தம் காரணமாக தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர், மருத்துவரான பூங்கோதை ஆலடிஅருணா. தென்காசி மாவட்ட தி.மு.க-வில் பல்வேறு கோஷ்டிகள் செயல்பட்டு வரும் நிலையில், எந்த அணியிலும் சேராமல் தனித்துச் செயல்பட்டு வருபவர். தென்காசி மாவட்ட தி.மு.க செயலாளரான சிவபத்மநாதனுக்கும் பூங்கோதைக்கும் எப்போதுமே ஒத்துப் போகாது. அதனால் தனது தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் கட்சி சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மாவட்டச் செயலாளரை அழைப்பதில்லை. தன் தம்பி எழில்வாணனுடன் சில வருடங்களாகப் பேசிக் கொள்வதில்லை. அதனால் எழில்வாணன், மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதனுடன் சேர்ந்து பூங்கோதையை எதிர்த்து ஆலங்குளம் தொகுதிக்குள் அரசியல் செய்து வந்தார்.

கடந்த வாரம் ஆலங்குளத்தில் மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் கட்சிக் கூட்டத்துக்கு எழில்வாணன் ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டம் நடந்த இடத்தின் முன்பாக பூங்கோதை, தன்னுடைய படம் போட்ட பேனரை வைக்கச் செய்தார். கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார்.

ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட கடையம் பகுதியில் நேற்று (18-ம் தேதி) கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு பூங்கோதைக்கு அழைப்பு கிடையாது. என்றாலும் தன் தொகுதிக்குள் கட்சி சார்பாக நடக்கும் நிகழ்ச்சி என்பதால், அவர் அந்தக் கூட்டம் நடந்த அரங்கத்துக்குச் சென்றார்.

கடையத்தில் நடந்த தி.மு.க கூட்டம்
கடையத்தில் நடந்த தி.மு.க கூட்டம்

கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அவரை மேடையில் அமர அனுமதிக்காததால், மேடையின் எதிரில் பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அவரது ஆதரவாளர்கள் இதுபற்றி கூட்ட ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தச் சமயத்தில் கடையம் ஒன்றிய நிர்வாகிகள் சிலர் அவரை கூட்டத்தை விட்டு வெளியே செல்லுமாறு கோஷமிட்டுள்ளனர். அதனால், அவமானம் அடைந்த அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இது தொடர்பாக அவர் கட்சி மேலிடத்திலும் புகார் செய்துள்ளார். ஆனால், கட்சித் தலைமை நடந்த சம்பவத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல், அவரையே கண்டித்ததாகத் தெரிகிறது.

மருத்துவ அறிக்கை
மருத்துவ அறிக்கை

அதனால், அதிருப்தி அடைந்த பூங்கோதை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால், மயக்கம் அடைந்த அவரை இன்று நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுயநினைவு இல்லாத நிலையில் அழைத்து வரப்பட்ட நிலையில், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: