வெள்ளி, 20 நவம்பர், 2020

பூங்கோதை ஆலடி அருணா! கட்சிப் பிரச்சினை+ குடும்பப் பிரச்சினை... பகீர் முடிவின் பின்னணி!

கட்சிப் பிரச்சினை+ குடும்பப் பிரச்சினை: பூங்கோதை பகீர் முடிவின் பின்னணி!

minnambalam : தூக்க மாத்திரைகளை உண்டதால், 19 ஆம் தேதி காலை நெல்லை ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் பூங்கோதை இன்று (நவம்பர் 20) காலை அங்கிருந்து தூத்துக்குடி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, விமானம் மூலம் சென்னை அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

18 ஆம் தேதி தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் ஒன்றிய பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பூங்கோதைக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆவேசமாக அங்கிருந்து வெளியேறிய பூங்கோதை அன்றிரவு தூக்க மாத்திரைகளை விழுங்கியிருக்கிறார். காலையில் வெகுநேரம் படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல் இருந்தவரை, குடும்பத்தினர் பார்த்து அதிர்ந்து அதன் பின் நெல்லை ஷிபா மருத்துவமனையில் சேர்த்தனர்.

பூங்கோதை தூக்க மாத்திரை சாப்பிட்டதற்குக் காரணம் கட்சி ரீதியான பிரச்சினை என்றும் குடும்ப ரீதியான பிரச்சினை என்றும் இரு வேறு காரணங்களை கட்சியிலேயே சொல்கிறார்கள்

நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கியது அரசு. ஏற்கனவே நெல்லை மேற்கு என்ற பெயரில் திமுகவின் மாவட்ட அமைப்பு இயங்கி வருகிறது.நெல்லை மேற்கு மாவட்டப் பொறுப்பாளரான பொ. சிவபத்மநாதனுக்கும் பூங்கோதைக்கும் எப்போதுமே சரிவராது என்பதே அங்கே கட்சி நிலைமை. அண்மையில், தென்காசி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி தெற்கு, வடக்கு என இரு மாவட்டமாக்கியது திமுக தலைமை. இதுபற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்னமே, தனது ஆலங்குளம் தொகுதியை சிவபத்மநாதன் தலைமையிலான மாவட்டத்திடம் சேர்க்கக் கூடாது என்று நெல்லை வந்த தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் நேருவிடம், சிவபத்மநாதன் முன்னிலையிலேயே கூறினார் பூங்கோதை. ஆனபோதும் ஆலங்குளத்தை சிவபத்மநாதன் தலைமையிலான தென்காசி தெற்கு மாவட்டத்தில் சேர்த்துவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதன்பின், வரும் தேர்தலில் பூங்கோதைக்கு மீண்டும் ஆலங்குளம் சீட் கிடைக்காது என்று தலைமையிடம் இருந்து நம்பத் தகுந்த தகவல்கள் பூங்கோதைக்குக் கிடைத்திருக்கிறது. இதற்குக் காரணம் மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாதன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கோபமாகவும் ஆவேசமாகவும் கூறிவந்திருக்கிறார் பூங்கோதை. இந்தக் கோபமும் ஆவேசமும் நவம்பர் 15 ஆம் தேதி ஆலங்குளம் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்துக்காக பூங்கோதை ஒட்டிய போஸ்டர்களிலேயே வெளிப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக என்ற பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாதன் படத்தை திட்டமிட்டே தவிர்த்தார். இதனால் பூங்கோதை மீது மாவட்டப் பொறுப்பாளரின் ஆதரவாளர்களும் கோபத்தில் இருந்தனர்.

இந்த நிலையில்தான் 18 ஆம் தேதி கடையம் ஒன்றிய பாக முகவர்கள் கூட்டம் மாவட்டப் பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் நடந்திருக்கிறது. முதலில் மேடைக்கு வராமல் முதல் வரிசையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த பூங்கோதையை மேடைக்கு அழைத்ததும் மேலேறி வந்திருக்கிறார்.

அவரை மேடையில் வைத்துக் கொண்டு பல நிர்வாகிகள் அவர் மீதே புகார் கூறினார்கள். ‘இன்னிக்கு என் வீட்டு துஷ்டிக்கு( துக்கம்) வராத எம்.எல்.ஏ. பூங்கோதை ஆனால் அடுத்த நாளு அதிமுககாரர் வீட்டு துஷ்டிக்கு போய் உக்காந்திருக்காங்க. அதுமட்டுமில்ல...எங்களுக்குனு இதுவரைக்கும் அவங்க என்ன செஞ்சிருக்காங்கனு சொல்லச் சொல்லுங்க. அதிமுககாரனுக்கு அவங்க என்னென்ன செஞ்சிருக்காங்கனு நாங்க சொல்லுறோம்’ என்று வரிசையாக நிர்வாகிகள் பூங்கோதை மீது புகார்களை அடுக்கினார்கள். ‘நான் அன்னிக்கு ஊர்ல இல்லங்க’என்று பதில் கூறினார் பூங்கோதை. ‘ஊர்ல இல்லேன்னா அடுத்த நாள் போயி விசாரிக்க வேண்டியதுதானே?’ என்று நிர்வாகிகள் பதிலுக்குக் கேட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாதன் கேட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது விருட்டென எழுந்த பூங்கோதை, ‘நீதான் இவங்களை எல்லாம் தூண்டிவிட்டு ரவுடி அரசியல் பண்றே...’ என்று சிவபத்மநாதனை நோக்கி முகத்துக்கு நேராகப் பேசினார். கடையம் ஒன்றிய செயலாளர் குமார் சமாதானம் செய்தும் பூங்கோதை கோபத்தை அடக்காமல் மாவட்டப் பொறுப்பாளர் மீது வார்த்தைகளை வீசினார்.

அப்போது சிவபத்மநாதன் எழுந்து,’ஏம்மா... ஊழியர் கூட்டம் நடக்குது. அவங்க சொல்றதைக் கேட்கத்தான் இந்தக் கூட்டமே. கேட்டு பதில் சொல்றதா இருந்தா சொல்லுங்க. இல்லேன்னா இறங்கி போயிட்டே இருங்க. நீங்க போனாலும் கூட்டம் நடக்கும்’ என்று பதில் அளித்தார். மாவட்டப் பொறுப்பாளர் இப்படி கூறியதும் உடனே மேடையில் இருந்து இறங்கி வெளியே போய்விட்டார் பூங்கோதை.

அரங்கத்தில் இருந்து வாசலுக்கு சென்று அவர் நின்று கொண்டிருக்க, அவர் போன பிறகும் கடையம் நிர்வாகிகள் பலர் பூங்கோதை பற்றிய புகார்களை ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் வெளியில் இருந்து கேட்டவர், உடனடியாக உள்ளே வந்து முதல் வரிசைக்கு முன்னால் தரையில் அமர்ந்துகொண்டார். ஒவ்வொரு நிர்வாகியின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு,’மன்னிச்சுக்கங்க... மன்னிச்சுக்கங்க நான் தெரியாம பண்ணிட்டேன்’ என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். ‘ஏம்மா...வெளிய போறீங்க. உள்ள வர்றீங்க. என்ன திட்டம் போட்டு பிரச்சினை பண்ணனும்னே வந்திருக்கீங்களா?” என்று கடையம் ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் வற்புறுத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் அன்று இரவே alprax என்ற தூக்க மாத்திரைகளை சாப்பிட்டிருக்கிறார் பூங்கோதை என்கிறார்கள்.

நம்மிடம் பேசிய தென்காசி திமுகவினர், “பூங்கோதை ஒரு மேல்மட்ட அரசியல்வாதி. லண்டனில் படித்து சர்வதேச வாழ்க்கைத் தரத்தில் வளர்ந்தவர். ஆலடி அருணா இறந்ததால் தலைவர் அப்போது இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இங்கே எந்த நிர்வாகியோடும் இணக்கமாகப் பணியாற்றியதில்லை. இப்போது தனது தொகுதியை தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு மாற்றி அதன் மூலம் மீண்டும் தொகுதியைப் பெற வேண்டும் என்பதற்காக அவர் கடுமையாக முயற்சித்தார். மேலும், ஐபேக் குழுவினருடனும் அவருக்கு பிணக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஐபேக் வாட்ஸ் அப் க்ரூப்பில் இருந்து அவர் முன்பே விலகிவிட்டார். குடும்ப ரீதியாகவும் சில பிரச்சினைகள் அவருக்கு இருக்கிறது. அவரது தம்பி எழில்வாணனே மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாதனோடு சேர்ந்துவிட்டார். அவரும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்” என்கிறார்கள்.

நாம் பூங்கோதை தரப்பினரிடம் பேசினோம்.

“பூங்கோதை ஆலடி அருணா ஒரு காலத்தில் தலைமையிடம் நல்ல செல்வாக்கோடுதான் இருந்தார். அவர் கனிமொழி ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்பட்டு ஒரு கட்டத்தில் ஓரங்கட்டப்பட்டார். வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் அவர் போட்டியிட வேண்டாம் என்று தலைமை சொல்லிவிட்டதாகவும், அவருக்கு சென்னையில் ஆர்.கே.நகரை கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. ஆர்.கே.நகரில் திமுகவின் வெற்றிவாய்ப்பு குறைவு என்பதால் தனக்கு, அத்தொகுதியை வேண்டாம் என்று பூங்கோதை சொல்லிவந்ததாகத் தெரிகிறது. இதற்கிடையில் ஆர்.கே.நகரை உள்ளடக்கிய சென்னை வடக்கு மாவட்டத்துக்கு பூங்கோதையின் அத்தை மகனான இளைய அருணாவை மாவட்டப் பொறுப்பாளராக்கினார் சேகர்பாபு. சில குடும்பப் பிரச்சினைகளும் சேர்ந்து அவரை வாட்டிவந்தன. இந்த நிலையில்தான் தூக்க மாத்திரைகளை விழுங்கியிருக்கிறார். மகப்பேறு மருத்துவரான பூங்கோதை எத்தனையோ பெண்களுக்கு தைரியம் சொல்லி பிரசவம் பார்த்திருக்கிறார். ஆனால் மருத்துவராக இருந்தபோதும் தனக்கே தைரியம் சொல்லிக்கொள்ளாமல் இப்படி செய்துவிட்டார்” என்று வருத்தத்தோடு சொல்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: