வெள்ளி, 20 நவம்பர், 2020

BBC : உதயநிதி திருக்குவளையில் கைது: அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் - திமுக சாலை மறியல்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அனுமதி இன்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் கைதானதை அடுத்து நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து உதயநிதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற திமுகவின் தேர்தல் பிரசாரத்தை திருக்குவளையில் தொடங்கிய சில மணிநேரத்தில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். கொரோனா காலத்தில், தொண்டர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்கு அனுமதி பெறப்படவில்லை எனக் கூறி காவல்துறையினர் உதயநிதியை கைது செய்ததாக கூறப்பட்டது.
திமுக சாலை மறியல்.
படக்குறிப்பு,

திமுக சாலை மறியல்

மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் அவரது இல்லத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய சமயத்தில் உதயநிதி கைதாகியுள்ளார். 100 நாட்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக முன்னதாக உதயநிதி அறிவித்த நிலையில், முதல் நாளே கைதாகியுள்ளார்.

கைதான உதயநிதி ஸ்டாலின் ஊடகத்தினரிடம் பேசியபோது, ''திமுகவின் பிரசாரத்தை முடக்க அரசு முயற்சி செய்கிறது; எத்தனை தடைகள் வந்தாலும் மக்களை சந்திப்போம். காவல்துறையினரின் கெடுபிடிகள் இருந்தாலும் மக்களை சந்தித்தே தீருவேன்,'' என தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயல் என கூறி திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு கண்டனம் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: