வியாழன், 19 நவம்பர், 2020

ஸ்டாலின் உடல்நிலை எப்படி உள்ளது?

minnambalam : கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின்
ஸ்டாலின் உடல்நிலை எப்படி உள்ளது?
வெளியூர் பயணங்கள் செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டார். கடந்த 8 மாதங்களில் தூரத்துப் பயணமாக முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பசும்பொன் மட்டுமே சென்றிருக்கிறார். வழக்கமாக பொதுக் கூட்டங்கள், கலந்தாலோசனைகள், நிகழ்ச்சிகளை காணொலி வாயிலாகவே முடித்துவிடும் ஸ்டாலின், முக்கியம் என்றால் மட்டுமே அறிவாலயம் செல்கிறார்.

வாரத்தில் ஞாயிற்றுக் கிழமையோ அல்லது ஓய்வு கிடைக்கும் ஏதோ ஒரு நாளில் காலை விடிவதற்கு முன்பே கிழக்கு கடற்கரை சாலைப் பகுதிகளில் சைக்கிளிங் கிளம்பிவிடுகிறார். ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் புகைப்படங்கள், சைக்கிளில் வேகமாக செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தன. இந்த நிலையில் சைக்கிளிங் சென்ற ஸ்டாலின் ஒரு கடை முன்பு செல்போன் பார்த்தபடி சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இன்று வெளியாகின. அதில், ஸ்டாலின் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்.

இதன் மூலம் தனக்கு இன்னும் வயதாகிவிடவில்லை என்பதையும், தான் நல்ல ஆரோக்கியத்துடனேயே இருப்பதையும் உணர்த்தியுள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள் திமுகவினர். இதுதொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்தோம்...

“ஸ்டாலின் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக லண்டன் சென்றுவிட்டு வருவது வழக்கம். கொரோனா காரணமாக இந்த வருடம் அவரால் லண்டன் செல்ல முடியவில்லை. ஆனால், ஸ்டாலினின் ரத்த பரிசோதனை உள்ளிட்டவை எடுக்கப்பட்டு லண்டனுக்கு அனுப்பப்பட்டன. அதில், ஸ்டாலின் நலமாக இருக்கிறார், எந்த பிரச்சினையும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஸ்டாலின் சைக்கிளிங் செல்வதோடு மட்டுமல்லாமல் தனது ஆழ்வார்பேட்டை வீட்டில் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்கிறார். இதற்காக நவீன சாதனங்களுடன் உள்ளே ஒரு உடற்பயிற்சிக் கூடமும் உள்ளது. யாரிடமும் பேசாமல் ட்ரெட் மில்லில் நடப்பது உள்ளிட்ட பயிற்சிகளை அங்கு மேற்கொள்கிறார். அந்த அறையில் ஒரு தொலைக்காட்சி மட்டும் இருக்கிறது. அதில், ஏதாவது முக்கிய செய்திகள் வந்தால் மட்டும் சிறிது நேரம் மட்டும் நின்று பார்த்துவிட்டு உடற்பயிற்சியைத் தொடர்கிறார். சுமார் 40 நிமிடங்கள் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சிகளை மேற்கொண்ட பிறகுதான் வெளியே வருகிறார்.

கொரோனாவுக்கு முன்பு பல இடங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். ஆனால், கொரோனா காலத்தில் வெளியூர் சுற்றுப் பயணம் வேண்டாம் என மருத்துவர்களும், குடும்பத்தினரும் அறிவுறுத்தியதால் காணொலி மூலமாகவே நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்கிறார்” என்கிறார்கள்.

எழில்

கருத்துகள் இல்லை: