ஞாயிறு, 15 நவம்பர், 2020

சத்யஜித் ரேவின் பெரும் நடிகர் செளமித்ரா சாட்டர்ஜி 85 வயதில் காலமானார்

BBC :பழம்பெரும் வங்காள நடிகர் செளமித்ரா சாட்டர்ஜி கோவிட் தொற்றால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் காலமானார். செளமித்ரா சாட்டர்ஜிக்கு 85 வயது. இவர் உலகின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் சத்யஜித்ரேவுடன் இணைந்து ஆற்றிய பணிகள் பெரிதும் பேசப்பட்டவை. கொரோனா தொற்று கண்டறியப்பட்டபின் செளமித்ரா சாட்டர்ஜி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், நாடக கலைஞராகவும், கவிஞராகவும், கதாசிரியராகவும் அறியப்பட்டவர்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நாட்களில் கொரோனா நெகடிவ் என வந்திருந்தாலும், அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. எனவே அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் சத்யஜித் ரேவின் முக்கிய படைப்பான அபுர் சன்ஸ்கார் (அப்புவின் உலகம்) திரைப்படத்தில்தான் முதன்முதலில் அறிமுகமானார் செளமித்ரா சாட்டர்ஜி.

சத்யஜித் ரேயின் பதேய் பாஞ்சாலி, அபராஜித்தோ, அபுர் சன்ஸ்கார் ஆகிய படங்கள் உலகளவில் பல விருதுகளை பெற்றதும் இல்லாமல், இந்திய சினிமாவை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றவை.

சத்யஜித் ரே மற்றும் சாட்டர்ஜி

பட மூலாதாரம், NEMAI GHOSH -சத்யஜித் ரே மற்றும் சாட்டர்ஜி

அதன்பிறகு சத்யஜித் ரேவின் 14 படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாட்டர்ஜி.

சினிமா துறையில் வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை 2012ஆம் ஆண்டு பெற்றுள்ளார் சாட்டர்ஜி. பிரான்ஸின் உயரிய விருதான லிஜியன் ஆஃப் ஆனர் என்ற விருதை 2018ஆம் ஆண்டு பெற்றார்.

இவர் பள்ளியில் இருக்கும்போது நடிக்கத் தொடங்கினார். பல நாடகங்களில் நடித்துள்ளார். அதன்பின் இவரின் கல்லூரி காலத்தில் தனது நண்பர் ஒருவரின் அறிமுகம் மூலம் சத்யஜித் ரேவின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. அந்த சந்திப்புக்குப் பின் திரையுலகில் கால் பதித்தார் சாட்டர்ஜி.

"என்னை ரே, திரைப்படத்தில் நடிக்கக் கேட்டபோது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனக்கு நாடகத்திற்கு திரைப்படத்திற்கு வித்தியாசம் தெரியவில்லை. திரையில் நான் அதிகப்படியாக நடித்து விடுவேனோ என பயந்தேன்.," என திரை விமர்சகர் மேரி சீட்டன் எடுத்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் சாட்டர்ஜி.

கருத்துகள் இல்லை: