செவ்வாய், 17 நவம்பர், 2020

சென்னை: கனமழை; வேகமாக நிரம்பிவரும் செம்பரம்பாக்கம்! – அப்டேட் நிலவரம்; தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட்

சென்னையில் கனமழை vikatan.com - துரைராஜ் குணசேகரன் - ராகேஷ் பெ : சென்னையில் கனமழை.சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. ஏரி திறந்துவிடப்பட்டால், சென்னையில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை இன்றளவும் நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். காரணம், அந்த வெள்ளம் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பு அத்தகையது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டது தான் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. கடந்த சில நாட்களாகச் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி, தனது 24 அடியில், தற்போது 21 அடி வரை நிரம்பியுள்ளது. அதோடு, ஏரியின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது. பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குத் திறந்துவிடப்பட்ட நீர் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை வெள்ளம்
சென்னை வெள்ளம்

செம்பரம்பாக்கம் ஏரியைப் பொறுத்தவரை 21 அடியைத் தாண்டியதும் உபரி நீர் திறந்துவிடப்படுவது வழக்கம். தற்போது வினாடிக்கு 390 கன அடி நீர் ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது. 21 அடி எட்டியதும் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்துவிட பொதுப்பணித் துறை ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். மதகுகளின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஏரியில் நீர்வரத்தை வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் கூடலாம் என்பதால், தற்போது ஏரிக்குப் பொதுமக்கள் யாரும் செல்லாத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு, 2015-ம் ஆண்டு நடந்தது போல எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கக் கரையோரத்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதோடு, செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடி நீர் எட்டியதும் அனைவருக்கும் தகவல் தெரிவித்து அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளம் வர வாய்ப்புள்ளதா?

கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்துக்கு முக்கிய காரணம், நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்புகளும், மழை நீர் வடிகால்கள் சரியாக இல்லாததும் தான் என்று கூறப்பட்டது. அதையடுத்து, ஆற்றின் இரண்டு கரைகளிலும் இருந்த பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சென்னை முழுவதும் மழை நீர் வடிகால்கள் கட்டும் பணி தொடங்கியது. 2016 மற்றும் 2017-ம் ஆண்டு அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள், இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அந்த இடங்களில் தற்போது மெல்ல மெல்ல மீண்டும் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. அதோடு, மழைநீர் வடிகால்கள் கட்டும் பணியும் 2018-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், இன்றுவரை அந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னையில் கனமழை
சென்னையில் கனமழை
ராகேஷ் பெ

பெரும் மழை பெய்யும் போது, ஊருக்குள் மழைநீரைத் தேங்கவிடாது செய்வதில் மழைநீர் வடிகால்களுக்குத் தான் முக்கிய பங்கு உள்ளது. ஆனால், தற்போது பல இடங்களில் கட்டியும் காட்டாமலும் இருக்கும் வடிகால்கள் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொசஸ்தலை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

”செம்பரம்பாக்கத்தை பற்றிய பயம் முற்றிலும் தேவையற்றது. இப்போது வெள்ளம் குறித்த பயம் இல்லை. 2015-ம் ஆண்டு நடந்ததை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஒவ்வொரு நிகழ்வையும் 2015 வெள்ளத்துடன் ஒப்பிட வேண்டியதில்லை. எனவே நிம்மதியாகத் தூங்குங்கள். இந்த மழை பாதிப்பில்லாதது” என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சென்னையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் பேசிய போது, “இந்த வருடம் சென்னையில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆறுகள் தூர் வாரப்பட்டுள்ளது, ஆற்றின் இரண்டு பக்க கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நீர் செல்லும் அனைத்து கால்வாய்களும் சுத்தம் செய்து தயார் நிலையில் இருக்கிறது. மழைநீர் வடிகால்கள் சரியாகச் செயல்படுகிறது. தற்போது சென்னையில் பெய்துவரும் கன மழையிலும் பெருமளவு மழைநீர் எங்கும் தேங்காது உடனுக்குடன் வடிந்து விடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அனைத்து வகையான மழைக்கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், அடையாற்றில் எந்த தங்குதடையும் இல்லாது செல்லும். தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்னர் முறைப்படி அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பின்னர் தான் தண்ணீர் திறந்துவிடப்படும். சென்னை மக்கள் வெள்ளம் குறித்த அச்சம் கொள்ளத் தேவையில்லை. தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம். அரசு சொல்லும் அறிவிப்புகளை மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!

இன்று மாலை, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வலுத்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எச்சரிக்கை: –

வெள்ளக் காலங்களில் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள்.

பின்வரும் பொருட்களை தங்களுடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது . மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் ஒரு வாரத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் , எரிவாயு, மண்ணெண்ணெய், மருந்து, பேட்டரிகள், டார்ச்கள், முகக்கவசங்கள்.

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம். அவ்வாறு பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர கனமழை; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தூத்துக்குடியில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் ரெட்அலர்ட் விடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: