புதன், 8 ஜூலை, 2020

உமா பாரதியை அவமதிக்கும் பாஜக பார்பனர்கள் ..

Periyartv : உமாபாரதி அவமதிக்கப்படும் பின்னணி என்ன?
பாபர் மசூதி இடிப்பில் எத்தனை பார்ப்பனத் தலைவர்கள் நீதிமன்றமும், காவல் நிலையமும், வீடுமாக அலைந்துள்ளனர் என்று கணக்கிட்டால் விடை பூஜ்ஜியம்தான். உமாபாரதி பாபர் மசூதி இடிப்பின்போது தந்தையின் தோள்மீது ஏறிவிளையாடும் சின்னப்பெண் போல் முரளிமனோகர் ஜோஷியின் தோளில் உப்புமூட்டையாக ஏறிக்கொண்டு பாபர் மசூதி இடிப்பில் மகிழ்ந்து கூச்சலிட்டவர். அப்போது அவர் முகத்தில் காணப்படும் குதூகலம் சொல்லி மாளாது, ஆனால் அதன் பின்னால் என்ன நடந்தது?
அதன் பிறகு அவரது அரசியல் வாழ்க்கை செல்லாத காசாக மாறிப்போனது. உண்மையில் பாபர் மசூதி இடிப்பின் போது அதிகம் பேசப்பட்டவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி. அதற்கு அடுத்த இடத்தில் உமாபாரதி. இன்று பாஜக பெரும் பலத்துடன் ஆட்சியில் இருப்பதற்கு காரணம் பாபரி மசூதி இடிப்புதான். அந்த மதவெறியை முதலீடாக வைத்துதான் இன்றுவரை அவர்கள் அரசியல் அச்சாணி சுழன்றுகொண்டு வருகிறது.

பாபர் மசூதி இடிப்பில் மட்டுமல்ல, ஒடிசா பாதிரியார் குடும்பத்தோடு எரித்துக் கொலை செய்யப்பட பஜ்ரங் தள் அமைப்பின் தலைவராக இருந்த பிரதாப் சந்திர சரங்கி போன்ற பார்ப்பனர்கள் இன்று மத்திய அமைச்சர வையில் கேபினெட் தகுதி அமைச்சராக உள்ளனர். ஆனால், உமாபாரதி இன்று பாஜக துணைத்தலைவர் பதவியில் ஏதோ பெயரளவிற்கு அமர்த்தப் பட்டுள்ளார்.
அங்கு தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவிற்கே மதிப்பில்லாத போது, துணைத்தலைவருக்கு மதிப்பிருக்குமா என்ன? டில்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு காணொலியில் மோடியும் அமித்ஷாவும் ஜே.பி.நட்டாவும் நடந்து வருகிறார்கள், ஜே.பி.நட்டா மோடிக்கு பின்புறம் நடக்கிறார். அமித்ஷா வேகமாக வந்து நட்டாவின் கையைப் பிடித்து இழுத்து மேடையில் ஏறவேண்டாம் என்று சைகை காட்டிவிட்டு, அமித்ஷா மோடி மட்டுமே மேடையேறி கையசைத்து வாக்கு சேகரித்தனர். ஜே.பி.நட்டா பரிதாபமாக அவர்களின் பின்னால் சிறிது தூரம் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தார். அங்கு தலைவர்களுக்கே இந்த நிலைதான்.
சுஷ்மா சுவராஜ்மீது ஊழல் வழக்கு, நீரவ் மோடியை வெளிநாடு கொண்டு செல்ல உதவிய வழக்கு மற்றும் அந்நியச்செலவாணி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்டு. இவரது குடும்பத்தினர்தான் நீரவ் மோடியின் குடும்ப வழக்குரைஞர்கள். ஆனால் சுஷ்மா சுவராஜ் மரணிக்கும் வரை கேபினெட்அமைச்சராகவே இருந்தார். மற்றோர் எடுத்துக்காட்டு - எந்த ஒரு மக்கள் தொடர்புமே இல்லாமல் தொலைக் காட்சித் தொடரில் பிரபலமான ஸ்மிரிதி இரானி 2014 தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக்கி பாஜகவின் பெரிய தலைவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார் மோடி. அப்போது உமாபாரதிக்கு இணை அமைச்சர் பதவிதான், தன்னுடைய 25 வயதிலிருந்து துறவியாகி மதக்கோட் பாடுடைய இயக்கத்தில் இருந்து, அந்த இயக்கத்தின் அறிவுறுத்தலின்படி பாஜகவில் இணைந்து பாஜகவை இந்த அளவு வளர்த்து ஆளாக்கிய முதன்மையானவர்களுள் ஒருவராக கருதப்பட்ட உமாபாரதி எந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்து எடுக்கும் கிராமம் குறித்த ஒரு திட்டத்தை மோடி 2014-ஆம் ஆண்டு அறிவித்தார். இன்றுவரை எத்தனைக் கிராமம் மோடியின் இந்த அறிவிப்பால் முன்னுக்கு வந்துள்ளது என்று ஒரு வெள்ளை அறிக்கை இன்னும் வரவில்லை. ஆர்.டி.அய் கேள்விகள் இன்றளவும் அலுவலகத்தில் உறங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் மோடி இரண்டாம் முறையும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட்டார். ஆனால், இரண்டாம் முறை தத்து எடுக்கும் கிராமம் குறித்த அறிவிப்பு வரவில்லை. 2017-ஆம் ஆண்டு உமாபாரதி தத்து எடுத்த கிராமத்திற்கு குடிநீர் தொடர்பான திட்டத்திற்குப் பணம் ஒதுக்கி அதைத் துவக்கி வைக்கச்சென்றார், ஆனால், அந்த கிராமத்தின் தலைவர் உள்பட அந்த கிராமத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் அனைவருமே அவர் வரும் நாள் பார்த்து உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டார்களாம், காரணம் அவர் குடிநீர் தொட்டி திறந்து வைக்கும் இடம் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் உள்ளது. உமாபாரதி அங்கு வரும்போது பார்ப்பனராக உள்ள ஊர் முக்கிய பிரமுகர்கள் பிற்படுத்தப் பட்டவர்கள் வாழும் பகுதிக்குச் செல்லவேண்டும். இதைத் தவிர்க்க ஒட்டுமொத்த பார்ப்பனர்களும் ஏதோ ஒரு முக்கிய நிகழ்விற்கு (?) சென்று விட்டார்கள்.
உமாபாரதிக்கே இந்த நிலைமை! அடுத்த நாள் என்ன ஆனது? அவர் திறந்துவைத்த தண்ணீர் தொட்டிக்கு நீர் கொண்டு செல்லும் மோட்டார் வேலை செய்யவில்லை; நீர்வரத்துத் தடை பட்டது; இன்றுவரை சரிசெய்யவில்லை. உமாபாரதி கலந்துகொண்ட கல்வெட்டைக்கூட அங்கு இருந்து அகற்றிவிட்டார்கள். இது குறித்து செய்தி சேகரிக்கச்சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டார். இந்த செய்தி அனைத்தும் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் அரசியலுக்காக எனது பெயரைக் களங்கப்படுத்த பரப்புகிறார்கள் என்று ஒரே வார்த்தையில் மிகவும் மனவேதனையோடு கூறிவிட்டுச் சென்றுவிட்டார் உமாபாரதி.
இன்றும் லலித்புர் பாவ் கிராமத்தில் சிதைந்த நிலையில் 4 ஆண்டு களுக்கு முன்பு உமாபாரதி திறந்துவைத்த தண்ணீர் தொட்டி உமாபாரதிக்கு ஏற்பட்ட அரசியல்நிலைபோல் சிதிலமடைந்து காட்சி தருகிறது
அதைவிட பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் கடந்த ஆண்டு தீர்ப்பு வந்தது. இதைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையில் உமாபாரதி பெயர் இடம் பெறும் என்று பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் பெயர் அதில் இடம்பெறவில்லை. தலைவராக மோடியும் அயோத்தியில் உள்ள சில சில்லரை சாமியார்களும்தான் அதில் உறுப்பினராக உள்ளனர். உமாபாரதி முன்பின் யோசிக்காமல் முன்கோபத்தோடு பேசுபவர், மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு பாஜக பொதுக்கூட்டத்தில் இவர் கலந்துகொள்ள சென்றபோது மேடையில் இடம் இல்லை என்றகூறி நிகழ்ச்சி நடத்துநர்கள் மேடைக்கு கீழே ஒலிபெருக்கி அமைப்பாளர் அமர்ந்திருந்த ஸ்டூலை எடுத்துவந்து உட்காரக் கூறினார்கள். இதனால் கோபமடைந்த உமாபாரதி நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று படபடப்பாக பேசிவிட்டு சென்றுவிட்டார். இந்த அவமானம் நடந்தபோது அவர் மத்திய அரசின் இணை அமைச்சராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது,
ராமர் கோவில் கட்டும் அறக்கட்டளையில் இவர் பெயர் இடம் பெறவில்லையே ஏன் என்று ஊடகவியாளர் கேட்ட போது இவர் கூறியது, Ôஎன்னை சாகச்சொல்கிறீர்களா?Õ என்றார். காரணம் பாஜகவில் உள்ள அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்டவர்களில் மிகவும் பிரபலமான பிற்படுத்தப்பட்ட தலைவர் மேலும் பெண் வேறு ஆகையால்தான் இந்த அவமானங்கள்.
ஒரு கட்டத்தில் செல்வி உமாபாரதி சொன்னதுண்டு. 'பா.ஜ.க. என்றால் பிராமணக் கட்சி' என்று. உ.பி. கல்யாண்சிங்கும்கூட அப்படி சொன்னதுண்டு, பிஜேபியின் தேசிய தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன்கூட அப்படித்தான் சொன்னார்.
செல்வி உமாபாரதியின் இன்றைய பரிதாப நிலையை எண்ணினால் அதற்குப் பின்னணி காரணம் அவர் ஒரு பார்ப்பனர் அல்லர் என்பதுதான்.
நரேந்திரமோடி பிரதமராக இருக்கிறாரே - அவரும் பிற்படுத்தப்பட்ட வர்தானே என்று கேட்கலாம்; சங்பரிவார்க்குச் சரியான போர்க் கருவி அவர்தான் என்று தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் இருத்தியுள்ளனர்.
அதில் ஏதாவது முடக்கு செய்வாரேயானால், உமாபாரதியின் இந்த இடத்திற்குத்தான் தள்ளப்படுவார் என்பது மட்டும் உண்மை

கருத்துகள் இல்லை: