திங்கள், 6 ஜூலை, 2020

251 பெட்டிகள்; 2.8 கி.மீ நீளம்: இந்திய ரயில்வே புதிய சாதனை!

251 பெட்டிகள்; 2.8 கி.மீ நீளம்: இந்திய ரயில்வே புதிய சாதனை!மின்னம்பலம் : இந்திய ரயில்வே துறை, நான்கு சரக்கு ரயில் பெட்டிகளை ஒன்றிணைத்து, 2.8 கி.மீ நீளமுள்ள ரயிலை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளது. அதிக நீளமுள்ள இந்த ரயிலுக்கு ‘ஷேஷ்நாக்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் இயங்கும் மிகவும் நீண்ட ரயில் இந்த ஷேஷ்நாக். தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் நாக்பூர் பகுதியில் நிலக்கரி உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிச்செல்லும் ரயில் பெட்டிகளை இணைத்து இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இயக்க நான்கு ஜோடி மின்சார இன்ஜின்கள் ரயிலில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலை இயக்குவது தொடர்பான வீடியோக்களையும் புகைப்படங்களையும் ரயில்வே துறை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், இந்தச் சாதனையைப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரயில்வே நிர்வாகத்தால் 2.8 கி.மீ நீளமுள்ள சரக்கு ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு அதிக சரக்குகளைக் கொண்டுசெல்ல இந்த ரயில் பயன்படுகிறது” என்று கூறியுள்ளார். இதேபோல அவர் மற்றொரு ட்வீட்டில், “ஷேஷ்நாக் ரயில் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும். 251 சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயில் நாக்பூர் மற்றும் கோர்பா இடையே இயங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ரயில் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரயில்வே அமைச்சகம், சரக்கு ரயில்களின் இயக்கத்துக்கு அதிக முன்னுரிமை அளித்துவருகிறது. போக்குவரத்து நேரத்தைக் குறைக்கவும் சரக்குகளை அதிகமாக எடுத்துச்செல்லவும் ரயில்வே நிர்வாகம் இந்த முயற்சியை எடுத்துள்ளது. தற்போது இந்த முயற்சி வெற்றி அடைந்துள்ளதால், ரயில்வே நிர்வாகம் இந்த சாதனையைக் கொண்டாடிவருகிறது.
கடந்த ஜூன் 30-ம் தேதி, ரயில்வே அமைச்சகம் 177 கோச்சுகள் உள்ள சரக்கு ரயிலை ‘சூப்பர் அனகோண்டா’ என்ற பெயரில் இயக்கியது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில், “சரக்கு ரயில்களின் போக்குவரத்து நேரத்தைக் குறைக்க நிர்வாகம் பெரிய அளவில் முயற்சி எடுத்துள்ளது. மூன்று ரயில்களின் பெட்டிகளை இணைத்து ,சுமார் 15,000 டன் சரக்குகளை ஏற்றி இந்த ரயில் வெற்றிகரமாக பிலாஸ்பூர் மற்றும் சக்ரதர்பூர் வழியாக இயங்கியுள்ளது” என்று பதிவிட்டுள்ளனர்.
-ராஜ்

கருத்துகள் இல்லை: