வியாழன், 9 ஜூலை, 2020

சாத்தான்குளம்:`சி.பி.சி.ஐ.டி விசாரணையே தொடர வேண்டும்!’- வியாபாரிகள் கோரிக்கை

விகடன் :
மெழுகுவர்த்தி அஞ்சலி`சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் நடவடிக்கைகள் வேகமாக இருப்பதால், சி.பி.சி.ஐ.டி விசாரணையே தொடர வேண்டும்’ என சாத்தான்குளம் வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து ஜெயராஜின் மனைவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அளித்த மனுவை ஏற்று, தாமாக முன்வந்து வழக்கினை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம். இதையடுத்து கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், தமிழக அரசும் இச்சம்பவம் குறித்த வழக்கை உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிட முடிவு செய்து, சி.பி.ஐ விசாரணைக்கு ஏற்கும் வரை சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணை தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதையடுத்து 2 வழக்குகளைப் பதிவு செய்து, கடந்த 1-ம் தேதி விசாரணையைத் துவக்கியது. அன்று இரவே உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் காலை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 3-ம் தேதி காவலர் முத்துராஜையும் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று (8-ம் தேதி) சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமதுரை, வெயில்முத்து, பிரான்சிஸ்தாமஸ் ஆகிய 5 பேரிடமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி கைது செய்யப்பட்டனர். அவர்களில் எஸ்.எஸ்.ஐ பால்துரை மற்றும் காவலர் தாமஸ் ஆகியோருக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மற்ற மூவரும், சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், உயிரிழந்த தந்தை, மகனின் 16வது நாள் நினைவேந்தல் நிகழ்வு சாத்தான்குளத்தில் கடைபிடிக்கப்பட்டது. சாத்தான்குளம் பஜாரில் காமராஜர் சிலை அருகில் வியாபாரிகள், பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர்.


பென்னிக்ஸ், ஜெயராஜ்


பென்னிக்ஸ், ஜெயராஜ்
அத்துடன்,`இவ்வழக்கு விசாரணையை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டியே விசாரணை செய்திட வேண்டும்’ என்ற கோரிக்கையையும் மெழுகுவர்த்தி ஏந்தியபடியே முன்வைத்தனர். இதுகுறித்து வியாபாரிகள் சிலரிடம் பேசினோம், ``சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலால் உயிரிழந்த தந்தை, மகன் வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றியும், சி.பி.ஐ-க்கு இவ்வழக்கை கையில் எடுக்கும்வரை சி.பி.சி.ஐ.டியின் விசாரணை தொடரும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம். அதேபோல, சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் விசாரணையைத் துவக்கிய முதல்நாளிலேயே எஸ்.ஐ., ரகுகணேஷ் அதிரடியாக இரவோடு இரவாக கைது செய்யப்பட்டார்.



அடுத்தடுத்த நாட்களில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், முத்துராஜ் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். தற்போது எஸ்.எஸ்.ஐ., பால்துரை உட்பட 5 பேர் என இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை பென்னிக்ஸின் குடும்பத்தார் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலையில் வழக்கு விசாரணை மேலும் தொடர்ந்தால் ஓரிரு மாதங்களுக்குள் முழு விசாரணையும் முடிந்து விடும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நீதி தாமதிக்கபடமால் கிடைக்கும்.


மெழுகுவர்த்தி அஞ்சலி


மெழுகுவர்த்தி அஞ்சலி
இவ்வழக்கில் 70 சதவீத விசாரணை முடிவடைந்த நிலையில், மீண்டும் சி.பி.ஐ விசாரணையை துவக்கினால், விசாரணை முடிவடைய காலதாமதம் ஆகும். ஏற்கெனவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சி.பி.சி.ஐ.டியிடமிருந்து சி.பி.ஐ வசம் மாற்றப்பட்டது. இரண்டாண்டைக் கடந்தும் அவ்வழக்கின் நிலை குறித்து தெரியவில்லை. இதே போல பல வழக்குகளின் நிலை குறித்து தெரியவில்லை. எனவே, இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டியின் விசாரணையே தொடர வேண்டும். இதுகுறித்து முதல்வருக்கு சாத்தான்குளம் வியாபாரிகள், பொதுமக்கள் சார்பில் மனு அனுப்பியுள்ளோம்”என்றனர்.

கருத்துகள் இல்லை: