வியாழன், 9 ஜூலை, 2020

தீவிர கண்காணிப்பில் தங்கமணி

தீவிர கண்காணிப்பில் தங்கமணிமின்னம்பலம் : தீவிர கண்காணிப்பில் தங்கமணி தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கொரோனா நோய்த்தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (ஜூலை 8) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்களில் முக்கியமானவரான தங்கமணிக்கு தொற்று ஏற்பட்டிருப்பது அதிமுக வட்டாரங்களிலும் அரசு வட்டாரங்களிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தங்கமணிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம்.
"அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டம் முழுதும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை ஊரடங்கு நேரத்தில் வழங்கினார். அதற்கு தனது மகன் தரணியை தான் பொறுப்பாளராக பார்த்துக் கொள்ளச் செய்தார். படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கட்சிக்காரர்களும் அரசு அதிகாரிகளும் தங்கமணியை தொடர்ந்து சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் அவரது மருமகளுக்கு தொற்று ஏற்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்ததாக அவரின் மகன் தரணிக்கும் தொற்று ஏற்பட அவரும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் இருக்கிறார்.
இந்த நிலையில்தான் தற்போது அமைச்சர் தங்கமணிக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அமைச்சர் தங்கமணிக்கு ஏற்கனவே நுரையீரல் சம்பந்தமான சில பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில் கொரோனா தொற்று அவரது குடும்பத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரும் தீவிர கவனம் எடுத்து தங்கமணியின் சிகிச்சை பற்றி விசாரித்திருக்கிறார். மும்பையிலிருந்து சில சிறப்பு மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் தங்கமணி" என்கிறார்கள்.
கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, "மின்சார வாரிய தலைவர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட விக்ரம் கபூர் டெல்லி தொடர்புகள் அதிகம் உள்ளவர். அவர் தமிழ்நாடு மின்சாரத் துறையில் நடக்கும் சில விஷயங்களைப் பற்றி மத்திய அரசுத் தரப்பிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் மத்திய மின்சார துறை அமைச்சர் ராஜ்குமார் சிங் நேற்று தமிழ் நாட்டுக்கு வருகை தந்தார். இந்த வருகையின் போது அவர் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்திப்பதாக இருந்தது. அப்போது விக்ரம் கபூர் கூறிய சில புகார்களை பற்றியும் தங்கமணியிடம் மத்திய இணை அமைச்சர் விசாரிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியானதால் அமைச்சர் தங்கமணி மத்திய மின் துறை அமைச்சரை சந்திக்க இயலாமல் போய்விட்டது" என்கிறார்கள்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: