ஞாயிறு, 5 ஜூலை, 2020

இளம்பெண் தற்கொலை வழக்கில் தொடர்பு” - 2 பேர் மீது தி.மு.க ஒழுங்கு நடவடிக்கை!

.kalaignarseithigal.com/:  செங்கல்பட்டு அருகே இளம்பெண்ணின் தற்கொலைக்குக் காரணமாக குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து   நீக்கி உத்தரவிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா. இவரது மகள் சசிகலா (26) கடந்த 24ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தனது தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது சகோதரர் செய்யூர் காவல் நிலையத்தில் புகா் அளித்தார். அந்தப் புகாரில், தி.மு.கவை சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகியோர் தன் தங்கையை கொலை செய்து விட்டு நாடகமாடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செங்கல்பட்டு மாவட்டம் நைனார்குப்பம் சசிகலாவை பாலியல் துன்புறுத்தல் செய்து தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்கவேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை தி.மு.க இளைஞரணி வலியுறுத்தும்” என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், பெண்ணின் தற்கொலைக்குக் காரணமான விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக கழகத்தலைவர் வெளியிட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பில், “காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் இடைக்கழிநாடு பேரூர்க்கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.தேவேந்திரன், டி.புருஷோத்தமன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவர்கள் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: