வியாழன், 9 ஜூலை, 2020

எடப்பாடியை ஏமாற்றிவிட்டாரா ராஜேந்திரபாலாஜி?

எடப்பாடியை ஏமாற்றிவிட்டாரா ராஜேந்திரபாலாஜி?மின்னம்பலம் : பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மீண்டும் ஒரு சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறார். நேற்று (ஜூலை 8) ஆவின் நிறுவனம் சார்பில் 5வகையான புதிய பால் பொருட்களை தமிழக முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, ஆவின் டீ மேட் பால், பண்படுத்தப்பட்ட பால் ஆகிய ஐந்து பொருட்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
ஆனால், இந்த ஐந்து பொருட்களில் நான்கு பொருட்கள் ஏற்கனவே ஆவினால் விற்கப்பட்டு வருவதுதான் என்றும், இதில் புதிதாக தொடங்க என்ன இருக்கிறது என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ. பொன்னுசாமி வெளியிட்டுள்ள செய்தியில்,

“ஏற்கனவே பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டி அழகு பார்த்து விட்ட பிறகும் மீண்டும் புத்தாடை அணிவித்து அக்குழந்தை புதிதாக பிறந்திருப்பதாக கூறுவது போல் அமைந்திருக்கிறது தமிழக பால்வளத்துறையின் செயல்பாடுகள். நேற்று தமிழக முதல்வர் அறிமுகப்படுத்திய ஐந்து பொருட்களில் நான்கு பால் பொருட்கள் (மோர், லஸ்ஸி 2 வகை, 90நாள் கெட்டுப் போகாத பால்) ஏற்கனவே வணிக சந்தையில் உள்ளவையே. மோரிலும், லெஸ்ஸியிலும் ஃப்ளேவரை மட்டும் மாற்றிவிட்டு புதிதாக விற்பது போல கொண்டு வருகிறார்கள். இது போல்தான் ஏற்கனவே வணிக சந்தையில் இருந்த ஆவின் சிறிய பாக்கெட்டை (10.00ரூபாய்) புதிதாக விற்பனைக்கு கொண்டு வருவது போல் கடந்த 2017ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அறிவிப்பு கொடுத்து மூக்குடைபட்டார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
அது போலவே தற்போதும் விற்பனையில் உள்ள லஸ்ஸி, மோர், 90நாட்கள் கெட்டுப் போகாத பால் போன்ற பால் பொருட்களுக்கு புத்தாடை அணிவித்து அவை புதிதாக பிறந்திருப்பதாக கூறி இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் சிறப்பான முறையில் செயல்படுகிறது என்பது போன்ற மாயத் தோற்றத்தை மக்களிடையே உருவாக்க முயன்றுள்ளனர். மேற்கண்ட பால் பொருட்கள் வணிக சந்தையில் ஏற்கனவே இருப்பதை தமிழக முதல்வருக்கு அது குறித்த உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினார்களா..? இல்லை திட்டமிட்டு மறைத்து விட்டனரா..? எனத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “முதல்வர் அவர்கள் அறிமுகம் செய்துள்ள ஆவின் டீ மேட் பால் முற்றிலும் மக்களையும், வணிகர்களையும் ஏமாற்றும் செயலாகும்.
ஏனெனில் தற்போது விற்பனையில் உள்ள ஆவின் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் (கொழுப்பு சத்து 6.0% திடசத்து 9.0%) அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 1 லிட்டர் 51 ரூபாய். அதுவே மாதாந்திர அட்டைதாரர்களுக்கு 1 லிட்டர் 49 ரூபாய் மட்டுமே.
ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆவின் டீ மேட் பால் கொழுப்பு சத்து 6.5% திடசத்து 9.0% எனவும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 1லிட்டர் 60 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் 0.5% கொழுப்பு சத்தை மட்டும் அதிகரித்து விட்டு 1 லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 11 ரூபாய் வரை அதிக விலை நிர்ணயம் செய்துள்ளனர். அதே சமயம் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு லிட்டர் பாலினை (1TS×2.66) 32 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. அப்படியானால் 0.5TSக்கு 1.50 வரை அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்யலாம்.
ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆவின் டீ மேட் பாலில் ஏற்கனவே விற்பனையில் உள்ள கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பாலினை விட 0.5%மட்டும் (0.5TS-1.33) கூடுதலாக்கி விற்பனை விலையில் 1லிட்டருக்கு 11.00ரூபாய் வரை அதிகரித்திருப்பதை பார்க்கும் போது தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக பால் விற்பனை விலையை கொண்டு வர திட்டமிட்டுள்ளனரோ என்கிற பெருத்த சந்தேகம் எழுகிறது” என்றும் பொன்னுசாமி என தெரிவித்துள்ளார்.
“சென்னை மாநகரில் உள்ள சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் மற்றும் மொத்த விநியோகஸ்தர்கள் ஆவின் டீ மேட் பாலினை அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கே பால் முகவர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். சில இடங்களில் மட்டும் சில சலுகைகளை வழங்குகின்றனர். அப்படியானால் ஆவின் டீ மேட் பாலினை என்ன விலைக்கு ஆவின் நிர்வாகம் வழங்குகிறது என்கிற வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. இது மக்களையும், பால் முகவர்களையும், சில்லறை வணிகர்களையும் ஏமாற்றி கொள்ளையடிக்கும் திட்டத்துடனே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே தமிழக அரசு புதிய வகை ஆவின் பாலிற்கு நியாயமான அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட், மொத்த விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் விலையில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டுள்ளார் பொன்னுசாமி.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: