திங்கள், 6 ஜூலை, 2020

பயிற்சி காவலர்களுக்கு கொரோனா: ...! 1000 மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா

பயிற்சி காவலர்களுக்கு கொரோனா: அதிர்ச்சியில் காவல்துறை!மின்னம்பலம் : கொரோனா வைரஸ் தொற்று காவல் துறையினரையும் அச்சுறுத்தி வரும் நிலையில், தனிமைப்படுத்த இடமில்லாமல் தவித்து வருவதாகக் காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் அய்யனார் என்ற தலைமைக் காவலர் கொரோனா வைரசால் இன்று உயிரிழந்தார், ஏற்கனவே சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி கொரோனாவுக்கு பலியானார். மாநகரில் 1000த்துக்கும் அதிகமான போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 400க்கும் அதிகமானோர் மீண்டுள்ளதாகச் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் சில போலீசார் கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு 5000 ரூபாய் கட்டணம் செலுத்தி வருவதாகச் சென்னை காவல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 4 பெண் காவலர்கள், 6 ஆண் காவலர்கள் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடலூர் மத்தியச் சிறை அதிகாரி ஒருவருக்கு, இரு முறை கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உட்கோட்டம் மயிலம் காவல் நிலைய சரகம் கொள்ளியாங்குணம் பகுதியில் நிரந்தரமான காவலர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது, அதில் தற்போது 329 பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
கடந்த ஜூன் 30ஆம் தேதி, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 13 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில், மூன்று பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 2ஆம் தேதி 326 பயிற்சி பெண் காவலர்கள் மற்றும் 50 ஊழியர்கள், 78 வேலை ஆட்கள் என மொத்தம் 454 பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதில் 57 பயிற்சி பெண் காவலர்களுக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர்களை மருத்துவமனையில் சேர்க்காமல் மயிலம் பயிற்சி பள்ளியில் உள்ள சட்ட வகுப்பு அறைகளில் ஒரு அறைக்கு 15 பேர் என்று நான்கு அறைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பயிற்சி காவலர்களும், அதிகாரிகளும் அச்சத்தில் உள்ளனர். இன்னும் 78 நபர்களின் ரிப்போர்ட் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வணங்காமுடி

கருத்துகள் இல்லை: