சனி, 11 ஜூலை, 2020

சாத்தான்குளம் வீடியோவை நீக்கினார் சுசித்ரா .. போலீசால் மிரட்டப்பட்டார் பாடகி சுசீத்திரா வீடியோ


சிபிசிஐடி போலீசார் விசாரணை - சாத்தான்குளம் வீடியோவை நீக்கினார் சுசித்ரா தினத்தந்தி : சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பாடகி சுசித்ரா தான் பதிவிட்ட வீடியோவை நீக்கி விட்டார்.
சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ், போலீசார் விசாரணையில் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தைத் தாண்டி உலக அளவில் பேசப்பட்டது. பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
இதனிடையே சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை விரிவாக ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார் பின்னணி பாடகி சுசித்ரா. இதையடுத்து ஆங்கில ஊடகங்கள் இச்சம்பவம் குறித்து பேசத் தொடங்கின. சாத்தான்குளம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய சிபிசிஐடி போலீசார், 10 காவல்துறையினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் விடுத்திருக்கும் அறிக்கையில், “பாடகி சுசித்ரா, என்பவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சாத்தான்குளம் நிகழ்வு குறித்த காணொளி முற்றிலும் உண்மைத்தன்மையற்றது.

இது போன்ற காணொளிகளை வெளியிடுவது வழக்கின் புலனாய்வை பாதிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. எனவே பொதுமக்கள் இத்தகைய காணொளிகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தது.
இதையடுத்து தான் பதிவிட்ட வீடியோவை பாடகி சுசித்ரா நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, "சிபிசிஐடி போலீசார் அழைத்தார்கள். போலி செய்திகளை பரப்பியதற்காக கைது செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தினார்கள். எனது வழக்கறிஞரின் அறிவுரைப்படி நான் வீடியோவை நீக்கியிருக்கிறேன். மக்கள் இந்த வழக்கை கவனிக்க வேண்டும். பல தவறான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை: