செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் இனி உலகப் பிரச்சினை: வைகோ மாநிலங்கள் அவையில் ஆவேசம் !வீடியோ

மின்னம்பலம் : இனி காஷ்மீர் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்காது என்று மாநிலங்களவையில் வைகோ தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் எதிர்க்கட்சியினரோடு சேர்ந்து மசோதாவை எதிர்த்து முழக்கம் எழுப்பிவிட்டு, தான் பேச அனுமதிக்க வேண்டுமென மாநிலங்களவைத் துணைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார். உள் துறை அமைச்சர் அமித்ஷா எழுந்து, ‘வைகோவை பேச அனுமதியுங்கள். அவர் கருத்தை நாங்களும் கேட்க விரும்புகிறோம்’ என்றார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய வைகோ, “இந்திய ஜனநாயக வரலாற்றில் 2019 ஆகஸ்ட் 5 ஆம் நாள் இரத்தக் கண்ணீரை வடிக்கச் செய்த நாள். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள். காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள்” என்று குற்றம்சாட்டினார்.
கார்கில் போரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் சரவணன் உள்ளிட்ட இளைஞர்கள் உயிரைத் துச்சமாக மதித்து வீரத்துடன் போராடி இரத்தம் சிந்தி மாண்டனர் என்று சுட்டிக்காட்டிய வைகோ, “பாஜக அரசு கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது.

இங்கே சற்று நேரத்துக்கு முன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார். பா.ஜ.க. உறுப்பினர் அவரைத் தாக்கினர். நசீர் அகமதுவை மாநிலங்கள் அவை காவலர்கள் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு சென்றனர்.
இன்றைக்கு நசீர் அகமதுவை தூக்கி எறிந்தீர்களே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இலட்சக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் எரிமலையின் சீற்றமாகக் கிளம்பிவிட்டார்கள். அவர்களை எங்கே தூக்கி எறிவீர்கள். இரண்டு இலட்சம் படையினரைக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குவித்தபோதே நான் மனம் பதறினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “இனிமேல் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்காது, அனைத்துலக நாடுகளின் பிரச்சினையாகிவிடும். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு திறமையான குள்ளநரி. கொசாவோ பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். சூடான் பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். கிழக்கு தைமூர் பிரச்சினை போல் பிரச்சினை ஆகும். ஐ.நா.மன்றமும், மனித உரிமைக் கவுன்சிலும் தலையிடும்” என்றும் எச்சரித்த வைகோ,
“இந்த மசோதாவைக் கொண்டுவந்தவர்களை வரலாறு மன்னிக்காது.காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறை பாஜக செய்துவிட்டது. இந்த மசோதாவை அடி முதல் நுனி வரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன்” என்று குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை: