வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

அதிமுகவை இறுதி வரை நம்பவைத்த வேலூர்... கோட்டையைக் கைப்பற்றிய திமுக!

வேலூர்: கோட்டையைக் கைப்பற்றிய திமுக!மின்னம்பலம் : வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஆகஸ்ட் 9) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற ஆரம்பித்தது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். அதன்பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பித்தது. காலை 11.30 வரை ஏ.சி.சண்முகமே முன்னிலை வகித்துவந்தார். அதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடிய அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஆனால் அதிமுகவினரின் மகிழ்ச்சியானது சிறிதுநேரம் கூட நீடிக்கவில்லை.
வாணியம்பாடி தொகுதி வாக்குகளை எண்ண ஆரம்பித்ததும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை வகிக்கத் தொடங்கினார். அந்தத் தொகுதியில் மட்டும் திமுகவுக்கு கூடுதலாக சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதும் கதிர் ஆனந்தே முன்னிலை பெற்றார். பிற்பகல் 3.10 மணியளவில் ஏ.சி.சண்முகத்தை விட கதிர் ஆனந்த் 7,585 வாக்குகள் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.


கதிர் ஆனந்த் வெற்றிமுகத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியதுமே திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் கூடி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாட ஆரம்பித்தனர். அதேபோல சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லம் முன்பு கூடிய திமுகவினர், வெற்றி முழக்கங்களை எழுப்பினர்.

திமுக முன்னிலை என்ற செய்தியை கேட்டவுடனேயே அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவந்த அக்கட்சியின் தொண்டர்கள் சிறிதுசிறிதாக கலைந்து செல்லத் துவங்கினர். இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
கதிர் ஆனந்தின் வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்ட நிலையிலும், அவரின் வெற்றி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகத் தாமதமானது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், “மாலை 4.30 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்” என்று ஒலிப்பெருக்கி மூலமாகத் தெரிவித்தார்.
இறுதியாக அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 4,85,340. அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 26,995 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். நோட்டாவில் 9,417 வாக்குகள் விழுந்தன. திமுக 47.3% வாக்குகளையும், அதிமுக 46.51% வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 2.63% வாக்குகளையும் பெற்றது.
இதனையடுத்து வேலூர் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சண்முக சுந்தரத்திடமிருந்து கதிர் ஆனந்த் வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் 59,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: