வியாழன், 8 ஆகஸ்ட், 2019

370 நீக்கம் : அரசியலைத் தாண்டிய வர்த்தகத் திட்டம்!

370 ரத்து: அரசியலைத் தாண்டிய வர்த்தகத் திட்டம்!
; மின்னம்பலம் -மணியன் கலியமூர்த்தி : ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரமான 370 வது பிரிவு நீக்கப்பட்டதாக அறிவித்ததன் எதிரொலியாக மகிழ்ச்சி அடைகிறார்கள் இந்தியாவின் ஒரு பகுதியினர்.
ஆங்கிலேயர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தினால் காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என்றும் மேலும் பத்து மாநிலங்களும் இது போன்ற சிறப்பு அந்தஸ்தைக் கொண்டுள்ளதாக கூறுகிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம் . பெரும்பாலும் வடகிழக்கில் உள்ள மாநிலங்கள் இந்திய அரசியலமைப்பின் 371 வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து கொண்டுள்ளன. பிரிவு 371 ஏ-ஜே பிரிவுகளின் கீழ் கீழ்க்கண்ட மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது
சட்டப் பிரிவு 371 ஏ – நாகாலாந்து
நாகர்களின் மத அல்லது சமூக நடைமுறைகள், அதன் வழக்கமான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் மற்றும் உரிமையும் பரிமாற்றமும் தொடர்பாக நாகாலாந்து மாநிலத்திற்கு நாடாளுமன்றத்தின் எந்தவொரு செயலும் பொருந்தாது என்று அந்த சட்டப் பிரிவு கூறுகிறது. நிலம் மற்றும் அதன் வளங்கள் தொடர்பாக மாநில சட்டமன்றம் தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னரே இது நாகாலாந்திற்கு பொருந்தும் என்று பிரிவு 371-ஏ கூறுகிறது. மாநிலத்தில் நிலமும் அதன் வளங்களும் நாகலாந்து மக்களுக்கே சொந்தமானது, அரசாங்கத்திற்கு அல்ல என்று கூறுகிறது.


சட்டப் பிரிவு 371 பி – அசாம்
பூர்வீக பழங்குடியினருக்கு சுயாட்சி மற்றும் ஆதரவு கொடுக்க, அசாமின் பழங்குடிப் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றக் குழுவின் அரசியலமைப்பு மற்றும் செயல்பாடுகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்க முடியும்.
சட்டப்பிரிவு 371 சி – மணிப்பூர்
மணிப்பூரின் 371 சி பிரிவானது அசாமின் 371 பி போன்றது. மாநில சட்டமன்ற குழுவின் அரசியலமைப்பு மற்றும் செயல்பாடுகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கலாம். ஆனால் மணிப்பூரின் மலைப் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மலைப்பகுதிகளின் நிர்வாகம் தொடர்பாக ஆளுநர் வருடாந்திர அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்கிறது இந்த பிரிவு.
சட்டப் பிரிவு 371 டி –இ- ஹைதராபாத்
ஒருங்கிணைந்த ஐதராபாத் நிஜாம் மற்றும் ஆந்திராவிற்கான சிறப்பு பிரிவு. 1974 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட 371 டி பிரிவானது. மாநில மக்களுக்கு சமமான வாய்ப்புகள் மற்றும் வசதிகளை வழங்குவதோடு மட்டுமின்றி. ‌ வேலைவாய்ப்பு மற்றும் கல்வி விஷயங்களில் அந்த மாநில மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது.
மாநில அரசுகள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற சிவில் பதவிகளுக்கு உள்ளூர் பணியாளர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யலாம் எனவும். ஆந்திராவில் தனித்த அதிகாரமுள்ள ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவலாம் என்று பிரிவு 371 இ கூறுகிறது.

சட்டப் பிரிவு 371 எஃப் – சிக்கிம்
1975 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்ட 371 எஃப் பிரிவு, சட்டமன்றத்தில் 30 உறுப்பினர்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. சிக்கிமில் வெவ்வேறு குழுக்களின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் பொருட்டு, இந்த வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு சட்டசபையில் இடங்கள் வழங்கப்படுகின்றன
சட்டப்பிரிவு 371 ஜி – மிசோரம்
மிசோரத்தின் மத அல்லது சமூக நடைமுறைகள், மிசோ வழக்கமான சட்டம் மற்றும் நடைமுறை முடிவுகளை உள்ளடக்கிய சிவில் அல்லது கிரிமினல் நீதியின் நிர்வாகம், நிலம் மற்றும் அதன் வளங்களை உரிமையாக்கம் மற்றும் பரிமாற்றம் தொடர்பான விஷயங்களில் நாடாளுமன்றத்தின் செயல் பொருந்தாது என்று தெளிவாக குறிப்பிடுகிறது.
சட்டப்பிரிவு 371 எச் - அருணாச்சல பிரதேசம்
மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆளுநருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் இந்த ஏற்பாட்டின் அடிப்படையில் முதல்வரின் முடிவை மீற முடியும் வகையில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சட்டப் பிரிவு 371 ஐ – கோவா
கோவா மாநிலத்தின் சட்டமன்றத்தில் 30 உறுப்பினர்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்கிறது இந்த பிரிவு.
சட்டப் பிரிவு 371- ஜே
பிரிவு 371 ஜே ஹைதராபாத்-கர்நாடக பிராந்தியத்தின் ஆறு பின்தங்கிய மாவட்டங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்குகிறது. இந்த பிராந்தியங்களுக்கு (மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை ஒத்த) ஒரு தனி அபிவிருத்தி வாரியம் நிறுவப்பட வேண்டும் என்பதோடு கல்வி மற்றும் அரசு வேலைகளில் உள்ளூர் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதும் சிறப்பு ஏற்பாடு.
கூடுதலாக, விதர்பா, மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதிகள் மற்றும் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும், சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் குஜராத்தின் பிற பகுதிகளுக்கும் தனித்தனி மேம்பாட்டு வாரியங்களை நிறுவ 371 வது பிரிவு இந்திய ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.
ஆந்திரா, கர்நாடகா, கோவா தொடர்பான சிறப்பு விதிகள் முறையே 371-டி மற்றும் 371-இ, 371 ஜே, 371-ஐ சட்டப் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ளன.

அமித் ஷாவின் கர்ஜனையும் லடாக்கின் யுரேனியமும்
விதிகள் இப்படி இருக்க. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே சிறப்பு அதிகாரம் கொடுத்துள்ளதாக ஒரு மாயை உருவாக்கி. கடந்த 5ம் தேதி நாடாளுமன்றத்தில் கர்ஜனை செய்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
அப்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரப்படுகிறது என்று சற்று உள்நோக்கி பயணித்தால் அதன் விபரீதம் சற்று வீரியமாகவே தென்படுகிறது.
2011ஆம் ஆண்டு புவியியல் ஆய்வுப்படி. காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிக அளவு யுரேனியம். பெரிலியம். தோரியம் மற்றும் தங்கம் போன்ற கனிம வளங்கள் நிறைந்துள்ளதாக புவியியல் ஆராய்ச்சியாளர் உபாத்யாயா கண்டுபிடித்து மத்திய அரசுக்கு தெரிவித்தார். அதிலிருந்தே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மீது தனது கழுகுப் பார்வையை நிலைநிறுத்தியுள்ளது பாரதிய ஜனதா. 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைந்ததும் இதன் முயற்சிகள் தீவிரமாகின.

அங்கு உள்ள கனிம வளங்களை பயன்படுத்த வேண்டும் என்றால் ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு சட்டத்தின்படி வெளி மாநிலத்தைச் சேர்ந்த யாரும் அங்கு உள்ள நிலத்தை மாநில அரசு அதிகாரம் இன்றி பயன்படுத்த முடியாது என்பதை அறிந்து கொண்டே. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்படு வந்த 370 சிறப்பு அதிகாரத்தையும் நீக்கிவிட்டு காஷ்மீரை தனி யூனியனாகவும், அதிக அளவு கனிம வளங்கள் மற்றும் தங்கம் வெள்ளி நிறைந்த மலை பிரதேசமான லடாக் பகுதியை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்து உள்ளது இன்றைய மத்திய அரசு .
லடாக் பகுதியில் அமைய உள்ள யூனியன் பிரதேசத்தின் முழு அதிகாரம் படைத்தவர் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்தான்.
அப்படிப் பார்த்தால் யூனியன் பிரதேசமாக அமைய உள்ள இந்த பகுதிகளில் கனிம வளங்களை சுரண்டுவதற்கும். சுரங்கங்களை தோண்டுவதற்கும். புதிய தொழிற்சாலைகளை தொடங்குவதற்கும் இனி சட்டம் தடையாக இருக்காது என்பதில் ஐயமில்லை.
2018 ஆம் ஆண்டு சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் ஒரு பகுதியான அக்சய் சின் என்ற இடத்தில் மட்டுமே் சுமார் 400 கோடி மதிப்பிலான தங்கம் இருப்பதாக ஆய்வுகள் செய்யப்பட்டு சுரங்கம் தோண்டும் பணியும் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் பகுதியில் இருந்து வெறும் 10 சதவிகிதத்தை மட்டுமே ஆக்கிரமிப்பு செய்த சீனாவிற்கு கிடைத்துள்ள அந்த இடத்தில் 400 கோடிக்கு மேல் அளவு தங்கம் இருந்தால், மீதி 90 சதவிகித இடமான லடாக்கில் எவ்வளவு ஆயிரம் கோடி மதிப்பில் யுரேனியம் மற்றும் தங்கம் இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.
அதுமட்டுமல்லாது பிரதமர் மோடியின் நண்பரான அதானி, ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் கர்மிசாயெல் நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தினை செயல்படுத்தி வருவதும் நன்கு அறியப்பட்ட விஷயம் தான்.
அந்த வகையில் லடாக் பகுதியில் உள்ள கனிம வளங்களை நிச்சயமாக மோடி அதானி நிறுவனத்திடமோ அல்லது ரிலையன்ஸ் அம்பானி நிறுவனத்திடமோ ஒப்படைக்கப்போவது முற்றிலும் மறுக்க ஒரு உண்மை ஆகும்.

கருத்துகள் இல்லை: