புதன், 7 ஆகஸ்ட், 2019

காங்கிரஸுக்குள் குழப்பம்.. காஷ்மீர் விவகாரம்

காஷ்மீர் விவகாரம்: காங்கிரஸுக்குள் குழப்பம்!மின்னம்பலம : ஜம்மு காஷ்மீர் பிரிப்பு, 370 சட்டப் பிரிவு நீக்கம் ஆகியவற்றை காங்கிரஸ் எதிர்த்தாலும் அக்கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலர் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ நீக்குவது, ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பது என இரண்டு அறிவிப்புகளையும் உள் துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் நேற்று முன்தினம் வெளியிட்டார். இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. மாநிலங்களவையில் பேசிய குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ‘அரசியலமைப்பு சட்டம் படுகொலை செய்யப்பட்டுவிட்டது’ என்று விமர்சித்திருந்தனர். மக்களவையிலும் காங்கிரஸ் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் சட்டத்துக்கு எதிராக ஜம்மு காஷ்மீரைப் பிரித்துவிட்டால் நாட்டின் ஒற்றுமை வளராது. மக்களால்தான் நாடு உருவாக்கப்படுகிறதே தவிர நிலப்பரப்புகளால் அல்ல” என்று விமர்சித்திருந்தார். ஆனால், மத்திய அரசின் முடிவுக்கு ஜனார்த்தன் திரிவேதி, பூபேந்தர் சிங் ஹூடா, மிலந்த் மராட்டே, அதிசி சிங் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். காங்கிரஸின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மாநிலங்களவை கொறடாவாக இருந்த புவனேஸ்வர் கலிட்டா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் முதலில் ஜம்மு காஷ்மீர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் காங்கிரஸ் வரலாற்றையாவது தெரிந்து இருக்க வேண்டும். அது தெரிந்திருந்தால் அவர்கள் இதுபோன்று பேச மாட்டார்கள். இதைத் தெரிந்து கொண்ட பிறகு அவர்கள் காங்கிரஸில் தொடர வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் இளம் நிர்வாகிகளுள் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் நேற்று (ஆகஸ்ட் 6) தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை இணைக்கும் முடிவை நான் ஆதரிக்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தின் நடைமுறைகளைப் பின்பற்றியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். அப்படி மட்டும் செய்திருந்தால் எந்தக் கேள்வியும் எழுந்திருக்காது. இருப்பினும் இது நாட்டு நலன் கருதியது என்பதால் ஆதரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் ஒரு நிலைப்பாடு எடுத்திருக்கும் நிலையில், அதற்கு எதிராகக் கட்சியின் முன்னணி நிர்வாகிகளே கருத்து தெரிவித்துவருவது குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது

கருத்துகள் இல்லை: