திங்கள், 5 ஆகஸ்ட், 2019

வேலூரில் பணத்தோடு நின்ற கண்டெய்னர்!

ல்நக்கீரன் -ராஜ்ப்ரியன் : கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூருவில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் பணம் அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த கண்டெய்னர் வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை தாண்டி வந்தபோது, அருகே சென்ற தனியார் பேருந்து உரசியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் பேருந்து ஓட்டுநருக்கும் - கண்டெய்னர் ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அந்த இடத்தில் வழிப்போக்கர்கள் கூடியதால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. இந்த பிரச்சினையின் போது அந்த வழியாகச் சென்ற வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர், தனது வாகனத்தை நிறுத்தி விசாரித்ததில், கண்டெய்னரில் பணம் இருக்கும் தகவலால் ஆய்வு நடத்த உத்தரவிட்டார். இந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சண்முகசுந்தரம் நேரில் வந்து விசாரித்து, ரிசர்வ் வங்கி பணம் தான் என்பது ஆவணங்கள் கூறியதால், அந்த கண்டெய்னரை சென்னைக்கு அனுப்பி வைத்தார். வேலூர் தொகுதியில் வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில், பணத்தோடு ஒரு கண்டெய்னர் நின்றதால், அதனை அதிகாரிகள் ஆய்வு செய்ததால் வேலூர் முதல் சென்னை வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: