ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

கட்டி முடிக்கப்படாத ஆயிரக்கணக்கான வீடுகள், கடனில் தத்தளிக்கும் மக்கள் - மீண்டெழுமா இந்திய வீட்டு வசதி துறை


நித்தின் ஸ்ரீவத்சவா - பிபிசி இந்தி - ராஜேந்தர் சிங் பூரா : ஆறு மாடி கட்டடத்தின்
மேலே பால்கனியில் அமர்ந்து கொண்டிருக்கும், 52 வயது ஆண் ஒருவர், தனது வளாகத்தில் கட்டி முடிக்கப்படாத கட்டடத்தைப் பார்த்துக் கொண்டே காலை நேர டீ பருகிக் கொண்டிருக்கிறார். டெல்லியின் புறநகரில், வளர்ந்து வரும் நொய்டாவில் அம்ரபாலி வீட்டுவசதி நிறுவனத்தில் அடுக்குமாடி வீடு ஒன்று வாங்குவதற்கு 2012 ஆம் ஆண்டில் பதிவு செய்ததில் இருந்து ராஜேந்தர் சிங் பூராவுக்கு இது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
``எங்கள் பிள்ளைகளுக்கு என்னால் நல்ல கல்வி அளிக்க முடியவில்லை. நடுத்தரக் குடும்பத்தின் வருமானத்தை நீங்கள் அறிவீர்கள். இன்னும் ஒப்படைக்கப்படாத அடுக்குமாடி வீடு ஒன்றில், சேமிப்பு அனைத்தையும் முதலீடு செய்த பிறகு என் குடும்பத்தை நடத்துவதே எனக்கு சிரமமாக உள்ளது. என் செலவுகளைச் சமாளிக்க ஒவ்வொரு மாதமும் நண்பர்களிடம் நான் கடன் வாங்க வேண்டியுள்ளது'' என்று அவர் கூறுகிறார்.
தன்னுடைய முடிவு, மோசமான தவறாகிவிட்ட நிலையில், பாதி முடிக்கப்பட்ட அந்த வளாகத்தில் அடுக்குமாடி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ்வதைத் தவிர போராவுக்கு வேறு வழியில்லை. தனது விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

துரதிர்ஷ்டவசமாக, அம்ரபாலியின் திட்டத்தில் முதலீடு செய்துவிட்டு, பல ஆண்டுகளாக துன்பப்படும் மக்களில் போரா மட்டும் தனிப்பட்ட நபர் கிடையாது. நிறைய பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சில மைல்களுக்கு அப்பால், வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர், ``தன் வாழ்நாள் சேமிப்புகளை இதுபோன்ற திட்டத்தில் முதலீடு செய்ய முடிவு எடுத்த நாளை'' நினைத்துப் பார்க்கிறார்.
ஓய்வுபெற்ற கர்னல் ஜே.பி. ஷர்மாவுக்கு இப்போது அறுபது வயதாகிறது. ``திட்டமிடப்பட்ட ஓய்வுக்கால வாழ்க்கையை வாழ முடிவு செய்து அம்ரபாலி வீட்டுவசதித் திட்டத்தில் 2012ல் நாங்கள் முதலீடு செய்தோம். சோகம் என்னவென்றால், அந்த அடுக்குமாடி வீடு இன்னும் எங்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை. மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்துவதில் இருந்து அந்த நிறுவன அலுவலகத்துக்கு வெளியே தரையில் அமர்ந்து போராடுவது வரை, நாங்கள் அனைத்து முயற்சிகளும் எடுத்துவிட்டோம்'' என்று அவர் கூறுகிறார்.
தீவிர மன உளைச்சல், மன அழுத்தம், ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற குற்ற உணர்வு இந்தியாவில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மோசடி மற்றும் பணத்தை சுருட்டியதால் பல ஆண்டுகளாக இந்த நிறுவனத்தால் வீடுகள் ஒப்படைக்கப்படாத ஆயிரக்கணக்கானவர்களுக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கை கொடுத்தது.
வீடு வாங்குவதற்கு மக்கள் செலுத்திய பணத்தையும், வங்கிக் கடன் தொகை என 500 மில்லியன் டாலர்களை சொந்த சொத்து வளர்ச்சிக்கு பயன்படுத்தியதாக அம்ரபாலி நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுe>இதற்கு பல வங்கிகளும் பொறுப்பாளிகள் என உச்ச நீதிமன்றம் கூறியது - இந்த நிறுவனத்துக்கு அளித்த கடன்களை கண்காணிக்கத் தவறிவிட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. அத்துடன் அரசின் மேம்பாட்டு அதிகாரிகள் சிலரையும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
``அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டம் (பெமா) மற்றும் அன்னிய நேரடி முதலீட்டு (எப்.டி.ஐ.) விதிமுறைகளை மீறி, வீடு வாங்குவதற்கு பதிவு செய்தவர்களின் பணம் வேறு வகையில் செலவிடப் பட்டுள்ளது'' என்று நீதிமன்றம் கூறியது.
அரசால் நடத்தப்படும் என்.பி.சி.சி. (தேசிய கட்டட கட்டுமான கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனம் அம்ரபாலி திட்டங்களை முடித்துக் கொடுப்பதற்கு நீதிமன்றம் அங்கீகாரம் அளித்தது.
கட்டி முடிக்கப்படாத வீடுகளுக்கு அம்ரபாலி நிறுவனத்துக்கு முன்பணம் செலுத்திய ஆயிரக்கணக்கான மக்களுக்கு இது நிவாரணம் தந்தது. அத்துடன் இந்தியாவின் வீட்டுவசதித் துறையில் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
``இரண்டு வழிகளில் இது தனித்துவமானது. முதலீட்டாளர்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தைக் காப்பாற்றுவதற்கு முதன்முறையாக உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. இது அரசின் முயற்சியாக இருந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, நாடு முழுக்க இன்னும் கட்டி முடிக்கப்படாத மற்ற அனைத்து திட்டங்களுக்கும் இது பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.''


கருத்துகள் இல்லை: