வியாழன், 29 ஆகஸ்ட், 2019

ட்ராபிக் போலீசின் அடாவடி ..கேன்சரால் பாதிக்கப்பட்ட ரமணா பட இயக்குனர் வீட்டிற்கு நேரில் சென்று வருத்தம் தெரிவித்த காவல் துறை!


s7.tv - niruban : திருமலை, ஆதி, சுள்ளான் போன்ற திரைப்படத்தை இயக்கிய
இயக்குனர் ரமணா நேற்றைய முன்தினம் தனது பேஸ்புக் பக்கத்தில் தனக்கு நேர்ந்தவற்றை நீண்ட பதிவாக பதிவிட்டிருந்தார்.அந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பேசுபொருளாக மாறியது இதனையடுத்து கிழக்கு காவல் உதவி ஆணையாளர் இயக்குனர் ரமணா வீட்டிற்கு நேரில் சென்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ரமணா பேஸ்புக்கில் பகிர்ந்த பதிவில்,
கண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதில் பல நேர்மையான அற்புத மனிதர்களையும் தனிப்பட்ட முறையில் எனக்கு மிக நெருங்கிய பரிட்சியமும், நட்பும் உண்டு. ஆனால்...
இன்று மேலே படத்திலுள்ள, நான் சந்தித்த நேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் K. குமரன், காவலர் M. ராமர் இருவரும் அந்த கண்ணியமான நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல் ஒரு சராசரி மனிதப்பிறவியாகக்கூடக் கருதத்தகுதியற்றவர்கள்.

இன்று காலை நான்,என் மனைவி, மகள் உட்பட காரில் சென்றபோது சாந்தோமில் என் வீட்டருகில் காவல்துறை சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்துக்கொண்டிருந்தது.
சாலை விதிகளை மீறும் வழக்கம் எனக்கு எப்போதும் இல்லாத காரணத்தால் நான் சாலை விதிகளுக்குட்பட்டே என் வாகனத்தைத் திருப்பினேன். மிதமான வேகத்தில் வந்த என்னை வழியில் அங்கிருந்த காவலர் M. ராமர் வழிமறித்து காரை நிறுத்தச்சொல்லி நான் விதியை மீறித் திரும்பியதாகச் சொல்லி அபராதம் கட்ட சொன்னார். ஆனால், விதியை மீறாததால் நான் அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர் என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி எனது லைசன்சை காண்பிக்கச்சொல்லி வாங்கி அங்கு அபராதம் விதித்துக்கொண்டிருந்த உதவி ஆய்வாளர் K. குமார். அவர்களிடம் தந்து எனக்கு அபராதம் விதிக்கச் சொன்னார்.
அதற்கு நான் அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்டுவதற்காகக் காவலரிடம் என் லைசன்சை தரவில்லை, எனக்கு வாகனம் ஓட்ட தகுதி இருப்பதற்கு அத்தாட்சியாக மட்டுமே தந்ததாகவும் கூறி அபராதம் கட்ட மறுத்தேன்.
அப்போது அந்த மனித பண்பாளர் உதவி ஆய்வாளர் திரு. K. குமார். அவர்கள் என்னைப் பார்த்து, ஏய்.. தள்ளி நின்னு பேசுடா.. மேல எச்சில் படப்போகுது... உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்... என்று கூற கேன்சரால் பாதிக்கப்பட்டதை அறிந்தும் அவர் அப்படிப் பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
ஒரு கேன்சரால் பாதித்தவனை அரசாங்கத்தின் காவல்துறையில் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இப்படி மனிதானமற்ற முறையில் பேசியது வேதனைக்குறியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட. அதைவிடக் கொடுமை. அழைத்துவந்த காவலர் M. ராமரிடம், "பாதியிலயே சாவப் போறவனயேல்லாம் என்கிட்ட கூட்டிக்கொண்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற..?" என்று கூற, நான் அவரிடம் "நீங்கள் அப்படிப்பேசுவது தவறு என்று உதவி ஆய்வாளரிடம் சுட்டிக்காட்ட, அதற்கு, அப்படித்தாண்டா பேசுவேன்... நீ என்ன பெரிய மயிரா..? என்ன புடுங்குறியோ போய் புடுங்கு..." என்று தன் பதவியையும் பொறுப்பையும் உணராமல் கீழ்த்தரமாக பேச, கோபத்தால் நானும் அவரை என்னை அவர் கூறிய அதே வார்த்தைகளால் அவரைத் திருப்பித்திட்ட...வாக்குவாதம் நீடிக்க... பக்கத்தில் முதல் கூறிய வட்டத்தில் மற்ற உதவி ஆய்வாளர் பதவி வகிக்கும் ஒருவர் உண்மையை உணர்ந்து என்னை சமாதானப்படுத்தி அங்கிருந்து அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தார்.
அங்கு நிலவிய சூழலால் நானும் காரை எடுத்துக்கொண்டு நகர, சற்று தூரம் வந்தவுடன் என் ஒரிஜினல் லைசன்ஸ் அந்த கண்ணியமற்ற காவல் அதிகாரியிடம் இருப்பதை உணர்ந்து மீண்டும் அவ்விடத்திற்கு நான் காரை திருப்ப முயல, என் மகள் தர்ஷினி வேண்டாம்பா... நீங்க மறுபடியும் போகவேண்டாம். நான் சென்று வாங்கி வருகிறேன் என்று கூற, மேலும் சூழலை சிக்கலாக்க விரும்பாமல் மகளை லைசன்ஸ் வாங்க அனுப்பினேன்...
ஆனால் அந்த K. குமார் என்ற உதவி ஆய்வாளர் பெண் என்ற காரணத்தாலும் அவளின் அமைதியான குணத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவளை வேண்டுமென்றே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, ”உன் அப்பன் என்னை எதிர்த்து பேசியதால் அபராதம் கட்டினால்தான் லைசன்சை தருவேன்” என்று நிர்ப்பந்தித்ததால், என் மகள் நான் மீண்டும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு என் குரல் மற்றும் உடல் நிலையை மோசமாக்கிக் கொள்ள விரும்பாமல் எனக்கு தெரிவிக்காமல் அபராத்தை செலுத்தி என் ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றுக்கொண்டுவந்து தந்தாள்.
அவள் அபராதம் செலுத்தியது எனக்குத் தெரியாத காரணத்தால் நான் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின்பே அவள் அவள் அபராதம் கட்டி லைசன்ஸை வாங்கி வந்ததை வருத்தத்துடன் கூறினாள்.
அரசாங்கத்தின் விதிமுறைகள், ஆணைகள் மக்களை நெறிப்படுவதற்காக இருக்கவேண்டும். மாற்றாக இதுபோன்ற மனிதானமற்ற மோனமான ஈனச்செயலில் இடுபடும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாய் இருப்பது வேதனை. குறிப்பாக கேன்சர் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவாரென்றால்... சராசரி வெகுஜனத்திடம் அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது.
உயிருடனும், வாழ்வுடனும் போராடிக்கொடிக்கும் எங்களைப்போன்ற கேன்சர் போராளிகளுள் யாரிடமும் அனுதாபத்தை எதிர்பார்ப்பதில்லை... ஆனால், இவர்களைப் போன்றவர்கள் கருணையுடன் நடத்தவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் பாதியில் சாகப்போகிறவன்... என்றும் கண்ணியமில்லாத வார்த்தைகளைச் சராசரி மனிதர்களிடம் அதிகாரத் திமிரில் பயன்படுத்திக் காயப்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
செய்வார்களா...?
வேதனையுடன்
ரமணா
பின் குறிப்பு :- எனது இந்தப் பதிவில் என் கருத்தில் நியாயம் இருப்பதாய் நண்பர்கள் நீங்கள் கருதினால் இப்பதிவை உங்கள் பக்கத்தில் பகிரவும்.
உங்களின் பகிர்தலால் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனை யார் மூலமாவது அம்மனிதர்களைச் சென்றடைந்து குறைந்தபட்சம் அவர்களிடத்தும் சக மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம் மனிதத்தன்மையுடன் மாறாதா என்ற நப்பாசைதான்.
நம்பிக்கைதானே வாழ்க்கை.
நட்புடன்
ரமணா

இந்த பதிவு சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியது இதனையடுத்து நேற்று மீண்டும் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார் அதில்,
நெஞ்சார்ந்த நன்றிகள்...
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
என்ற சொல்லாடலுக்கான பொருளை செயலில் காண்பித்து, நேற்று எனக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்பவத்திற்கு, என் முகநூல் பதிவிற்கு, என் உணர்விற்கு மதிப்பளித்து என் பதிவை பகிர்ந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் அத்தனை முகநூல் நண்பர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்கும், எனக்கு ஆறுதலும், துணையும் நின்ற என் நண்பர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்... அதன் பலனாக,
இன்று முண்ணனி தமிழ் தொலைக்காட்சி செய்திகளிலும், இணையதளத்திலும் பல ஊடக நிறுவனங்கள் எனக்கு நேர்ந்த நிகழ்வை என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்புசெய்தது.... அதன் விளைவாக
இன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள்
திரு. கிருஷ்ணமூர்த்தி
( Asst. Commr of police / Traffic investigation/ East range )

திருமதி K. ஷோபனா
( Inspector of police / Adayar -Mylapore / Traffic investigation wing / East range )

இருவரும் எந்தன் வீட்டுக்கு வந்து மிகுந்த அக்கறையும் பொறுப்புடனும் நடந்த சம்பவத்தை விசாரித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார்கள். மேலும்,
திரு. பெரோஸ் கான் அப்துல்லா
( Deputy commissioner of police / East Dist . Traffic )
என்னுடன் தொலைபேசியில் பேசி நடந்தவற்றை கேட்டறிந்தார்.
இந்த நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ உதவியாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும், ஊடகம், மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள். என தெரிவித்திருந்தார்

கருத்துகள் இல்லை: