செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

நடிகர் சல்மான் கானின் கார் விபத்து கொலை வழக்கும் காவலர் ரவீந்திர் பாட்டிலின் இறப்பும் ..


சுமதி விஜயகுமார் : Ravindra Patil. காவல்துறையில் கான்ஸ்டபிளாக
பணிபுரிந்தவர். இவருக்கும் திரைப்படங்களில் தவறு செய்பவர்களை பந்தாடும் , 90களில் பெண்களின் heart throbஆக விளங்கிய சல்மான் கானுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கூகிளில் ரவீந்திர பட்டில் என்று தேடினால் அவருடன் சேர்ந்து சல்மான் கான் புகைப்படங்களும் தென்படும். இவர்கள் இரண்டு பேருக்கும் என்ன சம்பந்தம் என்பதை
விளக்குவதற்கு இல்லை இந்த பதிவு. அவர்கள் இருவருக்கும் என்ன வேறுபாடு என்பதை பற்றியது. முதலில் ரவீந்தரின் நேர்மையை பற்றி பார்க்கும் முன்பு சல்மானின் நேர்மையை பார்ப்போம்.

சல்மான் கான் என்றவுடன் கூடவே நமக்கு நினைவு வரும் பெயர்களில் ஒன்று ஐஸ்வர்யா ராய். அவர்கள் இருவரும் காதலித்ததும் பிறகு கருத்து வேறுபாட்டினால் பிரிந்ததும் நாடறிந்தது. அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ஒரு படப்பிடிப்பில் இருக்கும் பொழுது அவரின் மேல் தன் வாகனத்தை ஏற்ற முயன்றதாய் செய்திகளும் உலா வந்தன. அரியவகை மான்களை வேட்டை ஆடியதாய் ஒரு முறை அல்ல மூன்று முறை கைது செய்யப்பட்டு விடுதலை ஆனவர். பசிக்காக திருடியவர்களை தண்டிக்கும் சட்டம் ஒரு போதும் பிரபலங்கள் மீது பாயாது என்பது நமக்கு ஆச்சர்யம் இல்லை. இவை தவிர உரிமம் இல்லாத ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
சல்மானின் நேர்மையை பார்த்து விட்டோம். அடுத்தது ரவீந்தரின் நேர்மையை குறித்து பேச அவர் அவ்வளவு பிரபலம் இல்லாததால் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் நம் கதாநாயகன் சல்மான் கான் அதற்கு உதவுகிறார். 2002ல் நிழல் உலக தாத்தாக்களால் தனக்கு ஆபத்து என்று சல்மான் முறையிட, அவரின் பாதுகாப்பிற்காக மெய் காப்பாளராக நியமிக்கப்பட்டவர் தான் ரவீந்திரர்.
28 செப்டம்பர் 2002. ஊரில் பிழைக்க வழியில்லாமல், யாரோ ஒரு அரசியல்வாதியின் பதவி ஆசைக்கோ இல்லை பெரு முதலாளிகளின் பேராசைக்கோ தன் வாழ்வாதாரத்தை இழந்து இருக்க ஒரு வீடு கூட இல்லாமல் மும்பை மாநகரில் கூலி தொழிலாளியாகவோ இல்லை குப்பை/மலம் அள்ளும் தொழிலாளியாகோ பணி புரிந்துகொண்டிருந்த மக்கள் சிலர் (பலர்?) ரோட்டோரத்தில் படுத்துகிடக்க, முழு குடிபோதையில் தன் வாகனத்தை ஊட்டி வருகிறார் சல்மான் கான். அருகில் அவர் காப்பாளர் ரவீந்திரர். வேக அளவை தாண்டி வாகனம் செலுத்தப்படுகிறது, வேகத்தை குறையுங்கள் என்று பல முறை கூறியும் சல்மான் அதை காதில் வாங்கியவராய் இல்லை .வாகனத்தை அளவு கடந்த வேகத்தில் ஓட்டிவர, அங்கே உறங்கி கே கொண்டிருந்தவர்கள் மீது மோதுகிறது. ஐந்து பேர் மீது கார் ஏற அதில் ஒருவர் இறந்துவிடுகிறார்.
இந்த சம்பவத்தை அடுத்து ரவீந்திரர் சல்மான் மேல் முதல் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தார். தானே சாட்சியாகவும் மாறுகிறார். நேரடி சாட்சியம் இருந்த போதும் வழக்கு பல ஆண்டுகள் நடைபெற 12 மார்ச் 2006 ல் கைது செய்யப்பட்டு 4 அக்டோபர் 2007ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது. சல்மான் இன்னும் உயிரோடிருக்க யாருக்கு தண்டனை வழங்கப்பட்டது? சட்டங்கள் எப்போதும் எளியவர்களுக்கு என்பதை உணராத, பணத்திற்கும் மிரட்டலுக்கும் அடிபணியாத, சுருங்க சொன்னால் பிழைக்க தெரியாத ரவீந்திர பட்டில் 2007ஆம் ஆண்டு 29-30 வயதில் இறந்து போனார்.
FIR பதிவு செய்தலில் இருந்து வழக்கை திரும்ப பெறவும் சாட்சியத்தை மாற்றி சொல்லவும் சல்மான் கான் தரப்பில் இருந்து மட்டுமில்லை, காவல் துறையில் இருந்து மட்டுமில்லை , அவரது குடும்பத்தாரிடமிருந்தும் அழுத்தம் கொடுக்க பட்டது. சல்மானின் ஆதரவாளர்களிடம் இருந்தும், வக்கீலிடமும் இருந்து தப்பிக்க பல காலங்கள் தலைமறைவாய் வாழ்ந்தார். இதனால் நீதிமன்றத்திற்கு செல்லத்தினால் அவர் 2006ல் கைது செய்யப்பட்டார். தன் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது குடும்பத்தாரால் நிராகரிக்க பட்டார். சிறையில் இருந்து வெளிவந்தவர் ஒரு நாள் இருக்க இடமில்லாமல் வீதியில் கிடந்தார். அவரது நண்பர் ஒருவர் அவரின் நிலையறிந்து அவரை மருத்துவமனையில் சேர்த்த பொழுது காச நோயால் பாதிக்கப்பட்டு 2007 இறந்து போனார். 2002ல் இருந்து 2007 வரை அவர் தோற்றத்தில் பல மாற்றங்கள் இருந்தாலும் அவர் ஒற்றை வரியை மட்டும் மாற்றவேயில்லை. 'ஆமாம். சல்மான் கான் தான் குடி போதையில் வண்டியை ஓட்டினார்' என்னும் வரியை மட்டும் இறக்கும் வரையில் சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஒரு நேர்மையான மனிதனின் பின் நிற்காத சமூகத்திற்கு அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்கள் மட்டும் வேண்டும் என்றால் எப்படி கிடைப்பார்கள் என்பது மட்டும் இன்னும் பிடிபடவேயில்லை.
சல்மான் கான்கள் சிறப்பாக வாழ்ந்தும் ரவீந்திர பட்டில்கள் நீதிக்காக சாகும் நாட்டிற்கு மோடி தலைவனாய் இருப்பதே சால சிறந்தது.

கருத்துகள் இல்லை: