வெள்ளி, 20 ஜூலை, 2018

கமலஹாசனின் அழைப்பை நிராகரித்த ஆசிரியர் பகவான் ..

tamiloneindia திருவள்ளூர்: ஆசிரியர் பகவானை தமிழகம் அவ்வளவு சீக்கிரம்
மறந்திருக்காது. மறக்கவும் முடியாது. பள்ளி-மாணவர்களிடையே மறுமலர்ச்சியையும் கல்வித்துறையிலேயே மாற்றத்தையும் ஏற்படுத்தியவர். பணிமாறுதலை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் நடத்திய உணர்ச்சி பிழம்புகள், நாடு முழுவதும் தெறித்து விழுந்தது. அதற்காக பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், மகிழ்ச்சிகளும், நாட்டின் நாலாபுறமுமிருந்தும் ஆசிரியர் பகவானுக்கு வந்து சேர்ந்தன.
வயது வித்தியாசம் இல்லாமல், பதவி, அந்தஸ்து பார்க்காமல், அனைத்து துறைகளிலிருந்தும் பகவானுக்கு நன்மதிப்பு வார்த்தைகள் குவிந்தன.
அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனும் ஆசிரியரை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவிக்கலாம் என்று நினைத்தார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்துகொள்ள வேண்டும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்களும் பத்திரிகையாளர்களுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி, அழைப்பு விடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களும் ஆழ்வார்பேட்டை அலுவலகத்துக்கு சென்றனர்.
ஆனால் யாருக்காக பாராட்டை தெரிவிக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டதோ அந்த ஆசிரியர் பகவான் அங்கு வரவில்லை. இதனால் ஒன்றும் புரியாமல் பத்திரிகையாளர்கள் விழித்தனர். சிறிது நேரத்தில் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் கூறினர். ஆனாலும் எதற்காக ஆசிரியர் பகவான் இந்த கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை,
கமலஹாசனின் வாழ்த்துக்களை பெற ஏன் வரவில்லை என்பதை அறிய பகவானுக்கே போன் செய்து பத்திரிகையாளர்கள் விவரம் கேட்டனர்.

அதற்கு ஆசிரியர் பகவான், "கமலஹாசன் என்னை கவுரப்படுத்த உள்ளதாகவும், அதற்காக நான் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள். ஆனால் நான் மறுப்பு தெரிவித்தேன்.

 காரணம், நானோ ஒரு அரசு பணி ஊழியர். கமலஹாசனோ ஒரு கட்சியின் தலைவராக உள்ளார். கட்சியில் இருக்கும் அவரை அரசு பணியில் இருக்கும் நான் சந்தித்தால் சரியாக இருக்காது. அதனால்தான் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை" என்றாராம்.

பகவான் செய்தது சரியே "
ஒரு ஆசிரியரை மாணவர்கள் போகவிடாமல் செய்வதில் தெரிகிறது அவர் ஓர் நல்லாசிரியர் என்று" - இவ்வாறு ஆசிரியர் பகவானுக்கு கமலஹாசன் ஏற்கனவே டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
எனினும் நேரில் அழைத்து பாராட்டு தெரிவிக்க கமலஹாசன் எண்ணியும், அக்கூட்டத்தில் பகவான் பங்கேற்கவில்லை.
அதற்கு ஆசிரியர் சொன்ன காரணம் நியாயமானதே.. சரியானதே.. ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. இதன்மூலம் மிகச்சிறந்த ஆசிரியர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் ஆசிரியர் பகவான்

கருத்துகள் இல்லை: