
மின்னம்பலம்: ஹரியானாவைச் சேர்ந்த 60 வயதான சாமியார் ஒருவர் 120 பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு நேற்று (ஜூலை 20) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாபா அமர்புரி என்ற பில்லு என்கிற அந்த சாமியாரை ஹிசார் அருகே ஃபெடஹாபாத் மகளிர் காவல் நிலையத்தின் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பாபா அமர்புரி ஆன்மிகக் காரணங்களுக்காகத் தன்னை நாடிவரும் பெண்களை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தன்னுடைய செல்போன் மூலம் அதை வீடியோவாகப் பதிவு செய்து சம்மந்தப்பட்ட பெண்களை மிரட்டுவது இவர் வழக்கம் என்று ஃபெடஹாபாத் மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் பிம்லா தேவி கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை இவருடைய உறவினர் ஒருவர் ஃபெடஹாபாத் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து பில்லு கைது செய்யப்பட்டார். இவர் மீது பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பாபா அமர்புரிக்கு பெயில் வழங்கப்பட்டிருக்கிறது. தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், காவல் துறைக்குத் தான் பணம் தர மறுத்ததால் அவர்கள் தன்னை இந்த வழக்கில் சிக்க வைத்திருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக