செவ்வாய், 17 ஜூலை, 2018

நாகராஜன், செய்யாதுரைக்கும் முதல்வருக்கும் தொடர்பு!

நாகராஜன், செய்யாதுரைக்கும் முதல்வருக்கும் தொடர்பு!மின்னம்பலம் : வருமான வரிச் சோதனையில் சிக்கியுள்ள நாகராஜன், செய்யாதுரைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு உள்ளதாக ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
தமிழக அரசுக்கு எதிராகப் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அறப்போர் இயக்கம் முன்வைத்து வருகிறது. அதிமுக ஆட்சியில், தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து, 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுக்குள் 3,025 கோடி ரூபாய் ஊழல், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெற்று இருக்கிறது என்று அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியிருந்தது.
இந்த நிலையில், தமிழகச் சாலைப் பணி ஒப்பந்ததாரரான நாகராஜன், செய்யாதுரைக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்றுவரும் வருமான வரிச் சோதனையைக் குறிப்பிட்டு முதல்வருக்கும் செய்யாதுரைக்கும் தொடர்பு உள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “நாகராஜன், செய்யாதுரை ஆகியோரின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். இவர்கள் யார், முதல்வருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து காப்பலூர் வரையுள்ள இரண்டு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றுவதற்காக ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பாலாஜி டோல்வேஸின் உரிமையாளர்கள் யார் என்றால் சுப்ரமணியன் பழனிசாமி மற்றும் நாகராஜன், செய்யாதுரை ஆகியோர். தற்போது இந்த நாகராஜன், செய்யாதுரை ஆகியோர் வீடுகளில்தான் சோதனை நடைபெற்று வருகிறது.
பாலாஜி டோல்வேஸின் பங்குதாரர்கள் சேகர் ரெட்டி, சுப்ரமணியன் பழனிசாமி , நாகராஜன், செய்யாதுரை ஆகியோர். சுப்ரமணியன் பழனிசாமி என்பவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி ஆவர்.
சேகர் ரெட்டி, சுப்ரமணியன் பழனிசாமி , நாகராஜன், செய்யாதுரை ஆகியோர் சேர்ந்துதான் தற்போது நெடுஞ்சாலையில் ஒப்பந்தங்களை எடுத்து வருகின்றனர். சேகர் ரெட்டி வீட்டில் ஏற்கனவே வருமான வரித் துறை சோதனை நடைபெற்றுள்ளது, தற்போது நாகராஜன், செய்யாதுரை வீட்டில் நடந்து வருகிறது.
2016ஆம் ஆண்டு தேர்தலில்போது எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அஃபிடவிட்டில் தனது மருமகள் திவ்யா, ஆண்டாள் பேப்பர் மில்ஸ் யூனிட் 2ல் ரூ.1 கோடியே 12 லட்சம் வரை பங்குகள் வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். ஆண்டாள் பேப்பர் மில்ஸ் வருடாந்திர அறிக்கையில், சுப்ரமணியன் பழனிசாமியின் மகள்தான் திவ்யா என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சம்பந்திக்கே ஒப்பந்தங்களை அளித்து வருகிறார். பாலாஜி டோல்வேஸ், எஸ்.பி.கே. நிறுவனங்களுக்குப் பல ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்த ஊழல்களை விசாரிக்க முடியாத அளவில் லோக் ஆயுக்தா உள்ளது. தற்போது விசாரித்துவரும் வருமான வரித் துறை ஆதாரங்களை மாநில அரசுக்கு வழங்கும். மாநில அரசு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விசாரிக்க அனுப்பலாம். எந்த ஊழல்களாக இருந்தாலும் முதலில் லோக் ஆயுக்தாதான் விசாரிக்க வேண்டும் என்பது மசோதாவில் இல்லை.
தொடர்ந்து கோடி கோடியாக ஊழல் செய்வதற்காகவே லோக் ஆயுக்தாவை ஜோக் ஆயுக்தாவாக மாற்றியுள்ளனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: