புதன், 20 ஜூன், 2018

காஷ்மீரில் ராணுவ ஆட்சி..? ஓராண்டுக்கு தேர்தல் கிடையாது ... உமர் அப்துல்லா கடும் கண்டனம்

THE HINDU TAMIL : காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘சில வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம், உடனடியாக புதிய அரசு அமைய வாய்ப்பில்லை’ என பாஜகவைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் தலைவர் கவிந்தர் குப்தா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சட்டசபையை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்துக் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி நடத்தின. கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்பால் அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக கட்சி வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்து, கடிதத்தை ஆளுநர் என்.வோராவிடம் அளித்தார்.
மேலும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக்கட்சியும் முன்வரவில்லை இதனால், மாநிலத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்காத சூழலில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

2019-ம் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த பாஜக தலைமை விரும்புவதாகவும், அதற்கு ஏற்ப தற்போது ஆளும் கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் கவிந்தர் குப்தா சில தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறுகையில் ‘‘காஷ்மீரில் உடனடியாக வேறு ஒரு அரசு அமைய வாய்ப்பில்லை. ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குழப்பமான சூழல் உள்ளது. சில வேலைகளை செய்து வருகிறோம். அதை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘காஷ்மீர் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் தற்போது ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதை காரணமாக வைத்துக் கொண்டு கொல்லைபுறமாக இங்கு ஆட்சி நடத்த முயலுகிறது. இதை ஏற்க முடியாது. சட்டப்பேரவையை கலைத்துவிட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். மக்கள் விரும்பும் அரசு காஷ்மீரில் பதவியேற்க வேண்டும்’’ எனக் கூறினார்.
காஷ்மீரில் ஆறு மாதத்திற்கு பின் ஆளுநர் ஆட்சியை நீட்டிக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். தற்போதைய ஆளுநர் ஆட்சி அதிகபட்சமாக டிசம்பர் வரை நீட்டிக்க முடியும். அதன் பிறகு நீட்டிக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவை. டிசம்பருக்கு பிறகு நாடளுமன்ற இடைக்கால ஒப்புதல் பெற்று சில காலம் ஆளுநர் ஆட்சியை நீட்டிக்கவும், பின்னர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் சேர்ந்து காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை: