திங்கள், 18 ஜூன், 2018

காலாவை தூத்துக்குடியில் என்கவுண்டர் செய்த ரஜினிகாந்த்!

மின்னம்பலம் : சாதியக் கட்டுமானத்தால் சரிந்த காலா! இராமானுஜம்- மினி தொடர்:
காலாவின் வியாபாரப் பயணம் - 19
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகருக்குப் பின் சாமானிய மக்களிடமும் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்தவர் ரஜினிகாந்த்.
சாதிய அடையாளம், அரசியல் கட்சி சார்பு என இவை இரண்டையும் தன் படங்களில் முன்னிலைப்படுத்தாமல் இருந்தவரையிலும் அனைத்துச் சமூக மக்களும் விரும்பும் கதாநாயகன் என்னும் நாற்காலி ரஜினிகாந்த் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு எடுத்தாலும் அதனை அதிமுக அனுதாபிகள் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.
அரசியல் கட்சி தொடங்குவேன் என ரஜினிகாந்த் அறிவித்த பின் ரஜினி படம் பார்க்கும் பார்வையாளர்கள் ஆதரவு தளம் குறைந்தது.
தமிழக மக்கள் சார்ந்த பிரச்சினைகள், மக்கள் போராட்டங்களில் ரஜினிகாந்த் கருத்தை மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கியபோது அவரிடம் மௌனமே பதிலாக இருந்துவந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறை நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி எந்தக் கருத்தும் கூறாமல், காவல் துறைக்கு ஆதரவாக, அதிகாரவர்க்க சார்பு நிலையை ரஜினிகாந்த் எடுத்தபோது அவரது இமேஜ் டேமேஜ் ஆனது.

இந்த நிலை தூத்துக்குடி மக்கள் போராட்டத்திலும் தொடர்ந்ததால் காலா படத்தின் வசூல் சென்னையைத் தவிர்த்து அனைத்து இடங்களிலும் பாதித்தது. அது சேலத்திற்கும் பொருந்தியது.
சமூகக் கட்டுப்பாடுகள் பெரிதும் கடைப்பிடிக்கப்படும் மாவட்டங்கள் நிறைந்த பகுதி சேலம் விநியோக ஏரியா.
கபாலி திரைப்படம் ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவான முதல் படமாகப் பார்க்கப்பட்டதால் அது சாதிய அடையாளத்தைப் பெறவில்லை.
குறிப்பிட்ட சமூக மக்களின் போராட்டப் பதிவு என இயக்குனர் ரஞ்சித் அந்தப் படம் பற்றிப் பொது மேடைகளில் பேசிவந்த சூழலில் தன் குடும்பத் தயாரிப்பில் காலா படத்தை இயக்கும் வாய்ப்பை ரஞ்சித்துக்கு வழங்கினார் ரஜினிகாந்த்.
அரசியல் படமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அது குறிப்பிட்ட சமூகத்தின் படமாகவும் இருந்தது.
காலா ரீலீசுக்கு முன் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காலா வெளியான பின் நம் கட்சியின் ஆதரவு தளம் அதிகரிக்கும்; குறிப்பிட்ட சமூகம் நமது கட்சியின் பின் அணிதிரள்வார்கள் என பகிரங்கமாக ரஜினிகாந்த் பதிவு செய்ததை மாவட்டச் செயலாளர்கள் ரசிக்கவில்லை. அவர்களது ஏரியாக்களில் சமூகக் கட்டுமானங்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பவர்களால் அதனை ஏற்க இயலவில்லை.
ஆடியோ வெளியீட்டில் அரசியல் படம் என்றார். இப்போது சாதியப் படம் என்கிற தொனியில் ரஜினி கூறியது மாவட்டச் செயலாளர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தின் காலா பட ஏரியா விநியோக உரிமைகளை வாங்குவதற்கு சினிமா தொழிலில் இல்லாத புதியவர்கள் முயற்சித்தார்கள். பிற ஏரியாக்களில் பரம்பரை விநியோக நாட்டாமைகள் அதனை தடுத்துவிட்டனர்.
சேலத்தில் 7 G சிவா மூலம் கட்டிட நிறுவனம் ஒன்று 5.5 கோடிக்கு காலா படத்தை வாங்கியது. காலா வென்றாலும் தோற்றாலும் அரசியல் ரீதியாக இந்த உறவு பயன்படும் என்கிற தொலைநோக்குப் பார்வைதான்.
திரையரங்கு உரிமையாளர்கள் ஆதிக்கம் நிரம்பிய சேலம் ஏரியாவில் புதிய படங்களை வாங்கி வெளியிடும் ஒரே விநியோகஸ்தர் தற்போது சிவா மட்டுமே என்பதால் அவர் மூலமாக காலா சேலத்தில் ரீலீஸ் செய்யப்பட்டது.
ரஜினி படங்கள் பெரும் ஓப்பனிங்கைக் கொண்டிருப்பதற்குக் காரணம் அவரது ரசிகர்கள்தான். முண்ணனி நடிகர்களின் படங்களுக்கு சேலம் ஏரியாவில் கொண்டாட்டத்துடன் கூடிய பிரம்மாண்டமான ஓப்பனிங் இருக்கும்.
சிவகார்த்தி, அஜித் குமார் ஆகியோரின் படங்களுக்கு மெழுகுச் சிலை அமைத்து ஆர்பாட்ட அதகளம் செய்தவர்கள் சேலம் சினிமா ரசிகர்கள்.
காலா படத்திற்கு தியேட்டருக்கு வெளியே வினயல் பேனர்கள் பளபளத்தாலும், காலா படம் போன்று செட் அமைத்தும், ரசிகர்கள் ஆரவாரமோ, ஆர்பாட்டமோ காணப்படவில்லை. கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் கூடவில்லை.
அதற்குக் காரணம் சாதிய ஆணவக் கொலைகள் அடிக்கடி நிகழ்த்தப்படும் சேலம் ஏரியாவில் காலா அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டாலும் சேலம் ஏரியாவில் உள்ள பெரும்பான்மைச் சமூகம் காலாவைப் புறக்கணித்தது என்கிறார் தியேட்டர் உரிமையாளர் ஒருவர்.
ஏற்கெனவே ரஜினிகாந்த் நடித்து வெளியான லிங்கா, கபாலி படங்கள் சேலம் ஏரியாவில் வசூல் மூலம் 4 கோடி வருமானத்தைப் பெற்றுத் தந்தன.
காலா 3 கோடி வருமானத்தை அடையத் தடுமாறியது என்கின்றன வசூல் விவரங்கள். தவறான நாளில் காலா ரீலீஸ் செய்யப்பட்டதால் வசூல் மந்தமாக உள்ளது, ரம்ஜான் விடுமுறையில் கல்லா நிரம்பும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டது. அப்படி ஒரு அதிசயம் நிகழவில்லை.
தமிழகத்தில் மினிமம் கேரண்டியில் காலா வியாபாரம் ஆன முதல் ஏரியா சேலம். தற்போதைய வசூல் நிலவரப்படி 3 கோடிவரை விநியோகஸ்தருக்கு நஷ்டம் ஏற்படும் என்பதே வசூல் விவரம் கூறும் தகவல்.
சென்னை நகர வசூல் சாதனையும் பின்ணணியும்…
நாளை...

கருத்துகள் இல்லை: