வெள்ளி, 22 ஜூன், 2018

அமித் ஷா 5 நாட்களில் ரூ. 745.59 கோடி ரூபாய் டெபாசிட் ... பணமதிப்பு இழப்பில் ..

அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் அதிக பணம் டெபாசிட்!மின்னம்பலம்: பாஜக தலைவர் அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் பணமதிப்பழிப்பு நேரத்தில் அதிகளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் இந்த பணமதிப்பழிப்பு அறிவிப்பை வெளியிடுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர், மாவட்டக் கூட்டுறவு வங்கிகள் மூலம் கறுப்புப் பணம் பரிமாற்றம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாகக் கருதி ஐந்து நாட்கள் கழித்து நவம்பர் 14, 2016 மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான மனோரஞ்சன் எஸ்.ராய், எந்தெந்த வங்கிகளில் எத்தனை நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டன என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தகவல் கோரியிருந்தார்.
இதற்கு, கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (NABARD) தலைமை பொது மேலாளர் சரவணவேல் ஆர்டிஐ மூலம் தகவல் வெளியிட்டுள்ளார்
அதில், “7 பொதுத் துறை வங்கிகள், 32 மாநிலக் கூட்டுறவு வங்கிகள், 370 மாவட்டக் கூட்டுறவு வங்கிகள், நாடு முழுவதும் 36க்கும் அதிகமான தபால் நிலையங்களில் ரூ.7.91 லட்சம் கோடி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இது ரிசர்வ் வங்கி கூறிய ஒட்டுமொத்த டெபாசிட் தொகையான ரூ.15.28 லட்சம் கோடியில் 52 சதவிகிதமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இயக்குநராக உள்ள அகமதாபாத் மாவட்டக் கூட்டுறவு வங்கியில், 5 நாட்களில் ரூ. 745.59 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017, மார்ச் 31ஆம் தேதிவரை இந்த வங்கியில் ரூ. 5,050 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 2016-2017ஆம் ஆண்டுக்கான வங்கியின் நிகர லாபம் என்பது 14.31 கோடியாகும். வங்கியின் 22 லட்சம் வாடிக்கையாளர்களிடம் இருந்து 122 கிளைகள் மூலம் இந்த பணம் திரட்டப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டில் இந்த வங்கியின் தலைவராகவும் அமித் ஷா இருந்துள்ளார்.
இதற்கு அடுத்ததாக, ராஜ்காட் மாவட்டக் கூட்டுறவு வங்கி 693.19 கோடி ரூபாய் டெபாசிட் பெற்று 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வங்கியின் தலைவர் ஜெயேஷ்பாய் விட்டல்பாய் ரதாதியா. இவர், குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: