சனி, 23 ஜூன், 2018

சுப்புலட்சுமி ஜெகதீசன் : எட்டுவழி சாலையை கைவிடும் வரை போராட்டம் ஓயாது!

“மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் சேலம் சென்னை பசுமை எட்டு வழிச் சாலையை அமைய விடமாட்டோம். இந்தத் திட்டம் ரத்தாகும் வரை தொடர்ந்து திமுக போராடும்’’ என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியிருக்கிறார்.
எட்டு வழிச் சாலை அமைக்கும் பணிக்காக மக்களை துன்புறுத்தும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இன்று சேலத்தில் சேலம் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பேர் கலந்துகொண்டார்கள்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படி நடந்த இந்த ஆர்பாட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்,

“தமிழ்நாட்டையே இப்போது ஆபத்து சூழ்ந்துள்ளது. தென்மாவட்டத்தில் கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் என்ற திட்டம், இப்போது சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் எட்டு வழிச் சாலை என்ற பெயரில் மக்கள் நிலங்களையும், இயற்கை வளங்களையும் அழிக்க முயற்சி நடக்கிறது.
சேலத்துக்கு இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. ராமநாதபுரத்தில் அதானி சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கிறார். அதை விற்பதற்காக ஈரோடு, சேலம் வழியாக கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு உயர் அழுத்த டவர்களை பதிக்கப் போகிறார்கள். அதுவும் விவசாய நிலங்களின் மீதுதான். இதனால் விவசாயம் பாழாகும், அந்த இடங்களில் மக்கள் வசிக்க முடியாது. ஆடு, மாடுகள் மேய முடியாது. தரைக்குள் கேபிள் அமைத்துக் கொண்டு போ என்றால் கேட்க மறுக்கிறார்கள். இங்கே எட்டுவழிப் பாதை என்று நிலங்களைப் பிடுங்குகிறார்கள். தமிழக மக்கள் எங்கே போவது?
கேரளாவும், கேரள முதல்வரும் புத்திசாலிகள். அந்த மின்சாரம் செல்லும் டவர்களை கேரளாவுக்குள் அனுமதிக்கவில்லை. வனத்துக்குள் வருகிறபோது வன விலங்குகள் பாதிக்கப்படும் அதனால் மண்ணுக்கு அடியில் கேபிள் மூலம் கொண்டுவா, இல்லையென்றால் எனக்கு மின்சாரம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் கேரள முதல்வர். அவர் மக்களுக்கான முதல்வர். ஆனால் நமது முதல்வரோ கமிஷன் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் கொண்டு போ என்கிறார்.
இந்த எட்டுவழிச் சாலை என்பது மலைகள் வழியாகவும், ரிசர்வ் காடுகள் வழியாகவும், விளை நிலங்கள் வழியாகவும் செல்கின்றது. கேரள முதல்வரோ வன விலங்குகள் கூட பாதிக்கப்படக் கூடாது என்று கருதுகிறார். தமிழக முதல்வரோ மக்களே பாதித்தாலும் என்ன என்று இருக்கிறார். மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு சிறந்த உதாரணம் எடப்பாடி ஆட்சிதான்.
விவசாயிகள் யாரும் கவலைப்படாதீர்கள். இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டோமென்று அறிவிக்கும் வரை நமது போராட்டம் ஓயாது’’ என்று முடித்தார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.

கருத்துகள் இல்லை: