திங்கள், 18 ஜூன், 2018

வைரமுத்துவுக்கு எதிராக ஆண்டாள் கோஷ்டியும் அம்பேத்கார்வாதிகளும் ஒரே அணியில்? ஏன்?

LR Jagadheesan : ஆண்டாள் பக்தர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டவர்கள்
முன்பு செய்த அதே காரியத்தை இப்போது அம்பேட்காரியர்கள் என தம்மை கூறிக்கொள்வோர் செய்துகொண்டிருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக.
ஆண்டாளை வைரமுத்து அவமதித்துவிட்டதாக அந்தணர்கள் கொந்தளித்ததைப்போல ஆதிதிராவிடர்களை கேவலப்படுத்திவிட்டதாக தலித்துகள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டிலும் உண்மையில்லை. ஆனாலும் இந்த இருதரப்பாரும் அதை ஏற்கப்போவதில்லை. இந்த இருதரப்பாரும் வைரமுத்துவை குறிவைப்பதில் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. அது எங்க ஜாதி சங்கதியை நாங்க தான் பேசுவோம்/பார்த்துக்குவோம். மத்த ஜாதிக்காரங்க அதைப்பத்தி பேசாதீங்க. அதுக்குள்ள வராதீங்க. என்பதே இருதரப்பாரின் அரசியல் அணுமுமுறை.
நல்லது. ஆண்டாளை வைரமுத்து அவமதித்துவிட்டதாக அந்த குதிகுதித்தவர்கள் காலா என்கிற திரைப்படத்தில் ராமகாதைக்கு நேர்ந்ததாக சொல்லப்பட்ட அபகீர்த்தியைப் பற்றி எந்த கொந்தளிப்பையும் ஏன் காட்டவில்லை. ஏனென்றால் அந்த படத்தின் கதாநாயகன் இந்துத்துவர்களின் இஷ்டதெய்வம் ரஜினி. காலா திரைப்படம் கல்லா கட்டாவிட்டால் அவருக்குத்தான் நஷ்டம். தம் இஷ்டதெய்வம் நஷ்டப்பட அவர்கள் விட்டுவிடுவார்களா என்ன?
சிதம்பரம் கோவிலில் தமிழக அரசு வைத்த உண்டியலை அகற்றி தில்லைவாழ் அந்தணர் தில்லுமுல்லு செய்ய வழிசெய்யும் அளவுக்கு “தெளிவானவர்கள்” ஆயிற்றே அவர்கள்?
அடுத்து வைரமுத்து ஆதிதிராவிடர்களை அவமதித்துவிட்டதாக செய்யாத ஒன்றை செய்ததாக கட்டமைத்துப் பொங்கும் அம்பேட்காரியர்கள் தங்களின் புதிய போப்பாண்டவர் cum போராளி ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் துள்ளத்துடிக்க கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி அதற்கு காரணமான காவல்துறையின் கொடூர துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தினாரே அதற்கு எதிராக ஏன் பொங்கவில்லை?
பொங்காதது மட்டுமல்ல ரஜினியின் காலா திரைப்படம் ஆகச்சிறந்த தலித்திய படமென்றும் அதை பார்க்கவேண்டியது அம்பேட்காரியர்களின் அடிப்படை வாழ்க்கை கடன் என்றும் ஏகத்துக்கு களமாடினீர்களே அதென்ன அரசியல் கொளுகை?
எங்கஜாதிக்காரருக்கு இயக்குநர் வாய்ப்பை ஒன்றுக்கு இரண்டுமுறை கொடுத்த ரஜினி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்திப்பேசினாலும் பரவாயில்லை அவர் அப்படி பேசிய ஆறுமணி நேரத்துக்குள் அவரது காலா திரைப்படத்துக்காக சமூக ஊடகங்களில் சதிராடும் போராளிகளாக மாறுவோம் என்பது தான் உங்கள் அம்பேட்காரிய அரசியலா?
இந்த இருதரப்பாரின் அரசியல் அணுகுமுறைகளிலும் அடிப்படை காரணியாக ஜாதி அமைந்திருப்பதும் ஏக இ/ஹிந்தியத்துவம் அதன் இன்னொரு பொதுத்தன்மையாக வடிவெடுப்பதும் இயல்பானதா? இந்த இருதரப்பும் இணையும் புள்ளிகள் அதிகரிப்பதும் எதிர்க்கும் ஆளுமைகள் ஒரே தரப்பாக அமைவதும் யதேச்சையானதா?

கருத்துகள் இல்லை: