செவ்வாய், 23 மே, 2017

கூகுள் வெற்றிக்கும் யாஹூ வீழ்ச்சிக்கும் காரணம் இதுதான்! அத்தியாயம் 9

karthikeyan:.vikatan.: கூகுள் யாஹூகூகுள் பிறந்தபோது அது ஒன்றும் புதிய ஐடியா அல்ல. அவர்களுக்கு முன்னால் இருபதுக்கும் மேற்பட்ட தேடுபொறி இணைய தளங்கள் இருந்தன. அதில் Altavista, Ask, Lycos, Yahoo குறிப்பிடத் தகுந்தவை. அதிலும் Yahoo பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தது. பிறகு எப்படி கூகுள் வெற்றி பெற்றது?
இதைத் தெரிந்துகொள்ள அன்றிருந்த மற்ற தளங்கள் என்ன செய்தன என்பதைப் புரிந்துகொள்ளவேணும். யாஹூ உள்பட எல்லோரும் கலை, அறிவியல், விளையாட்டு, அரசியல், சினிமா என்று இணையதளங்களை வகைபடுத்தி அதற்குள் ஒவ்வொன்றாக கிளிக் செய்து உள்ளே உள்ளே சென்று நீங்கள் விரும்பிய தளத்தை அடையுமாறு செய்திருந்தார்கள். இடையில் நீங்கள் பத்து பதினெட்டு கிளிக்குகள் செய்ய வேண்டும். சர்ச் பாக்ஸ் இருந்தாலும் அதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் வகைபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அவர்களின் சர்ச் பாக்ஸ்-ம் அவ்வளவு துல்லியமான முடிவுகளைத் தரவில்லை.

கூகுள் தங்கள் தேடுபொறியின் அல்காரிதத்தை கூர்மை படுத்தினார்கள். கேட்டகிரி-ஐ தூக்கினார்கள். தேடுபொறியின் சர்ச் பாக்ஸ்தான் ஒரே வழி என்றாக்கியது. இதுதான் Usability என்கிற பயன்திறன் கூகுளின் அல்காரிதம் இணையதள முகவரியை மட்டும் வைத்து ரிசல்ட் கொடுக்கவில்லை. இணையதளங்களின் உள்ளே இருந்த கண்டென்ட்களைப் படித்து தனது Indexல் வைத்துக்கொண்டது. ஆகவே தேடுபொறியில் இட்ட கட்டளைக்குத் தகுந்தவாறு கண்டென்ட்களை ஆராய்ந்து அந்தத் தளங்களை வரிசைபடுத்திக் காட்டியது.
கசமுசா என்றிருந்த தளங்களுக்கு மத்தியில் மிக எளிய வடிவமைப்பு மக்களை கவர்ந்தது. லோகோ அதற்கு கீழே ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் (Textbox) அதற்கு கீழே ஒரு பட்டன். அவ்வளவுதான் மொத்த தளமும்.
ஐஸ்கிரிம்க்கு ஜெர்ரி வைத்தது மாதிரி “Feeling Lucky” என்று ஒரு துணை பட்டன். அதாவது துல்லியமான ரிசல்ட்டை கணித்து நேரே அந்த தளத்திற்கே கொண்டு சென்றுவிடும். இந்த ஒரு பட்டன் செய்த வேலை கூகுளை இன்னும் மேலே கொண்டுசென்றது. ஒருவர் இந்த பட்டனை கிளிக்கி அவர் விரும்பிய தளத்தைச் சென்றடைந்தார் என்றால் அடுத்து பேக் செல்லமாட்டார். ஆக மக்கள் இந்த கீ-வேர்டு கொடுத்தால் இந்தத் தளம்தான் சரியான விடை என்பதைக் கூகுள் உறுதிசெய்து கொள்ளும்.
கூகுள் இதை பேடன்ட் செய்துவைத்துக் கொண்டது. அதனால் யாஹூ உள்ளிட்ட பிற தளங்கள் அதை முயற்சிக்கவில்லை. ஆனால் தேவையில்லாத பிற லிங்க்குகளை நீக்கி இருக்கலாம். அதைச் செய்யவில்லை. மாறாக நிறைய புதிய சேவைகளை அறிமுகப்படுத்தினார்கள். அது அவர்களுக்குப் பயன்கொடுக்கவே செய்தது. அந்தச் சேவைகள் எல்லாவற்றையும் அவர்களின் முகப்பு தளத்தில் கொடுத்தார்கள். வடிவமைப்பில் கோட்டைவிட்டார்கள்.
எளிமையாகச் சொல்கிறேன். மனித உடம்பிற்குள் ஆயிரம் உறுப்புகள் இருக்கின்றன. அவை அத்தனையும் கண்ணாடிபோல வெளியில் தெரிந்தால் நன்றாக இருக்குமா..? அது தேவையா..? அல்லது தோலினால் போர்த்தப்பட்டு தேவையான உறுப்புகள் மட்டும் தெரிவது சிறந்ததா? அதைத்தாம் கூகுள் செய்துகாட்டினார்கள்.
கூகுள்
‘கூகுள்’ அங்கிருந்து பயன்திறனை கச்சிதமாகப் பிடித்துக்கொண்டார்கள். அவர்களின் எல்லா தயாரிப்புகளிலும் எளிமையான வடிவமைப்பைத் தொடர்ந்து உறுதிசெய்து கொண்டே இருந்தார்கள். ஆனாலும் யானைக்கும் அடி சறுக்குமல்லவா.. கூகுளிற்கும் சறுக்கியது ஆர்குட் வழியாக.
ஆர்குட் வந்த புதிதில் பலரும் இணைந்தார்கள். ஆர்குட்டை ஜிமெயில் கணக்குடன் இணைக்க இன்னும் எளிமையாக எல்லோரையும் சேர்த்தது. எல்லோரும் அதிலேயே பலியாக கிடந்தார்கள். எல்லாம் ஃபேஸ்புக் வரும் வரை தான். பேஸ்புக் வந்தபிறகு ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன’ கதையாக ஆர்குட் மாறியது. காரணம் பேஸ்புக் மிக எளிமையான வடிவமைப்பினால் நேரடியாக மக்களுடன் பேசியது. தனிநபர் தகவல்களின் பாதுகாப்பை உறுதிசெய்தது. அதேசமயம் ஒரு செய்தியை லைக் என்ற ஒரு பட்டன் மூலம் பலரிடம் கொண்டு சேர்த்தது. வடிவமைப்பில் குழப்பிக்கொள்ளவே இல்லை.அதில் அவர்கள் கெடுபிடியுடனே இருந்தார்கள். ஆனால் இணையதளம் லோடு(Loading) ஆகும் வேகத்தில் பிச்சு உதறினார்கள. இருந்தபோதும் இன்றும் பேஸ்புக்கில் நிறைய குறைகள் இருக்கின்றன. உங்களது பழைய பதிவுகளை தேடி எடுப்பது சிரமம். இதெல்லாம் எளிய வடிவமைப்பிற்கு முன் எதுவுமே இல்லை என்று அந்தச் சிரமத்தையும் மக்கள் பொருட்படுத்தவில்லை.
பேஸ்புக் பரவலாக வந்தபிறகு ஆர்குட் என்னவோ செய்துபார்த்தார்கள். அவர்களை அறியாமலேயே யாஹூ செய்த அதே தவறுகளைச் செய்தார்கள். எளிய வடிவமைப்பு காணாமல் போனது. ஆனாலும் பிரேசிலிலும் இந்தியாவிலும் இது பெருவாரியான மக்களை சேர்ந்திருந்தது.
ஆனால் அமெரிக்க மீடியாக்கள் பேஸ்புக்கை புகழ்ந்து எழுதும்போதெல்லாம் ஆர்குட்டை கழுவி ஊற்றினார்கள். Google Standard-ஐ இது கேலிக்குரியதாக மாற்றியது. இதற்குமேல் இதை விட்டுவைத்தால் நம்ம பேரை கெடுத்துடும் என்று 2014இல் மூடுவிழா நடத்தியது கூகுள். அப்போது இதற்கு மாற்றாக கூகுள் ப்ளஸ் கொண்டுவந்தார்கள். லைக் பட்டனிற்கு பதிலாக + பட்டன் கொண்டுவந்தார்கள். ”நல்லாத்தான் இருக்கு ஆனால், லேட்டுப்பா” என்று மக்கள் ஒதுக்கிவிட்டார்கள். ட்விட்டரையும் ஜிமெயில் டிசைனை சேர்த்து கூகுள்-பஸ் என்ற மைக்ரோ பிளாகிங் தளத்தைக் கொண்டுவந்தார்கள். அதுவும் தோல்வி. அடுத்தடுத்த தோல்விகளிலிருந்து ஆண்டிராய்ட் என்ற சூப்பர் டூப்பர் வெற்றிதான் கூகுளைக் காப்பாற்றியது.
இந்தச் சமயத்தில் யாஹூவின் மேனேஜ்மென்ட்டில் நிறைய மாற்றம் நிகழ்ந்தது. கடைசி முயற்சியாக கூகுளிலிருந்தே ஒரு முக்கியமான ஆளைக் கைப்பற்றி தலைமை செயல் அதிகாரி பதவிகொடுத்துப் பார்த்தார்கள். அவர்தான் கூகுள் தளத்தின் வடிவமைப்பாளர் மரிசா மேயர். கூகுளின் பயன்திறன் கொண்ட எளிய வடிவமைப்பிற்கும் இவ்வளவு பெரிய வெற்றிக்கும் காரணம் என்று அறியப்பட்டவர். ஆனால் கண் கெட்டபிறகு சூரிய வணக்கம் செய்து என்ன பயன்? அவரால் பெரியளவில் எதையும் மாற்றமுடியவில்லை. யாஹூவின் வடிவமைப்பில் ஒன்றைத் தூக்கினால் இன்னொன்று அடிவாங்கியது. இடியாப்பம் போல எது தலை எது வாலென்று தெரியாத அளவிற்கு சிக்கலாக இருந்தது. மரிசா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் அலுவலகம் வருவார் அந்தளவுக்கு சின்சியர் என்ற பெயரைத் தவிர்த்து யாஹூவில் அவரால் பெயரைச் சம்பாதிக்க முடியவில்லை. இதற்கு மேல் விட்டுவைக்க முடியாது என்று கிடைத்தவிலைக்கு 4.5பில்லியன் டாலர்களுக்கு வெரிசானிடம் விற்றுவிட்டார்கள் அதன் இயக்குனர்கள்

கருத்துகள் இல்லை: