வெள்ளி, 26 மே, 2017

அமைச்சரவையில் மேலும் இரண்டு பேருக்குப் பதவி!

தமிழக அமைச்சரவையில் மேலும் இரண்டு பேருக்கு வாய்ப்பு அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதையடுத்து, விரைவில் அமைச்சரவையில் மாற்றம் நடைபெறும் என்று தெரியவருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, கடந்த 22ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று அதிருப்தி அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் சிலர் தலைமை செயலகத்துக்குச் சென்று சந்தித்து தங்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று வலியுறுத்தினர். தொகுதி பிரச்னைகள் குறித்து முதல்வருடன் அவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்பட்டாலும் உண்மையில் அவர்கள் தங்களுக்கு முக்கிய பதவி கேட்டே சென்றனர். அதேபோல், அதிமுக-வில் உள்ள எஸ்.சி.எஸ்.டி. இன எம்.எல்.ஏ-க்களும் ஆலோசனை நடத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியாக மாறியது.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக அமைச்சரவையை மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. தற்போது, முதல்வர் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் அவரையும் சேர்த்து 31 பேர் மந்திரிகளாக உள்ளனர். அரசியலமைப்பு சட்டப்படி ஒரு மாநிலத்தில் இருக்கும் மொத்த எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கையில் 15 சதவிகிதம் வரை அதிகபட்சமாக அமைச்சர்களாக நியமனம் செய்யலாம். அதன்படி, தமிழக அமைச்சரவையில் மொத்தம் 35 பேர் மந்திரிகளாக முடியும்.

ஆனால், தற்போது 31 பேர்தான் அமைச்சர்களாக உள்ளனர். இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் மூன்று பேருக்கு வாய்ப்பு அளிக்க எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதில், ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ. தங்கதமிழ் செல்வன் மற்றும் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது  .மினம்பலம்

கருத்துகள் இல்லை: