புதன், 24 மே, 2017

நீட் தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை.. உயர்நீதிமன்றம் மதுரை கிளை.. திருச்சி மலர்விழி வழக்கில் ..

By: Lakshmi Priya  :மதுரை: நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு நடைபெறவில்லை எனத் தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வு முடிகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்தது. மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறுவதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேசிய தகுதிகாண் தேர்வு எனப்படும் நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று தமிழக விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. மேலும் சட்டசபையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் அன்று சிபிஎஸ்இ விதித்த கெடுபிடிகளால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர். வரும் ஜூன் 8-ஆம் தேதி இந்த தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கேட்கப்பட்ட நீட் தேர்வு கேள்விகள் ஒரே மாதிரியாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
நீதிபதி மகாதேவன் கூறுகையில், இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஎஸ்இ வாரியம் 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில், திருச்சியை சேர்ந்த மலர்விழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடுத்தார். அதில் அவர் நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் இடம்பெற்ற கேள்விகள் ஒரே மாதிரியானதாக இல்லை என்றும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.

பொதுவான வினாத்தாள் வைத்து தேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அந்த வழக்கானது இன்று மதுரை கிளை நீதிபதி முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக சிபிஎஸ்இ, மத்திய அரசு ஆகியன ஜூன் 7-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.  tamiloneindian

கருத்துகள் இல்லை: