செவ்வாய், 20 டிசம்பர், 2016

திருநாவுகரசர் இளங்கோவன் மீது மறைமுக தாக்குதல்

நான் சொல்வது தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்தாக அமையும். அந்த கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்தா, இல்லையா? என்பதை விமர்சிக்கும் அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி, தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் போன்றவர்களுக்கு தான் இருக்கிறது. வேறு யாருக்கும் கிடையாது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் ‘கிறிஸ்துமஸ் விழா’ சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கட்சியின் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, துணைத் தலைவர் எச்.வசந்தகுமார், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாட்ஷா, தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தென்னிந்திய திருச்சபையின் துணை பிரதம பேராயர் தாமஸ் கே.உம்மன், தென்னிந்திய திருச்சபை சினாட் பொருளாளர் ராபர்ட் புரூஸ், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவர் வின்சென்ட் சின்னத்துரை, பேராயர் தஞ்சை டோமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். எம்.எஸ்.திரவியம் நன்றி கூறினார்.


விழாவில், சு.திருநாவுக்கரசர், குமரி அனந்தன், பேராயர் தாமஸ் கே.உம்மன் ஆகியோர் இணைந்து ‘கேக்’ வெட்டினர். பின்னர் ஏழை-எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி-சேலை வழங்கப்பட்டது.

விழாவின் போது திருநாவுக் கரசர் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தனின் மனைவி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். அதேபோன்று என்னுடைய மருமகளும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் தான். பல அரசியல் கட்சி தலைவர்கள் ரகசியமாக ஏசு கிறிஸ்துவை வழிபடுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி நல்ல பணம் வைத்திருக்கும் மக்களை பிரதமர் நரேந்திர மோடி நசுக்கிறார். இந்த பாவம் அவரை சும்மா விடாது.

காவிரி நதிநீர் வராததால் தமிழகம் பாலைவனம் ஆகிவிட்டது. எனவே தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். ‘வார்தா’ புயல் வந்து 15 நாட்களுக்கு பிறகு மத்திய குழுவை அனுப்புவது மத்திய அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது.

போர்க்கால அடிப்படையில் பணிகளை செய்யாமல் காலம் கடந்து செய்வது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சு.திருநாவுக்கரசிடம், ‘ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை தேவை இல்லை என்று நீங்கள் கூறியிருப்பது, யாரையோ காப்பாற்றுவதற்கு என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியிருக்கிறாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

நான் ஜெயலலிதாவுடன் பணியாற்றி இருக்கிறேன். எனவே மனத்துயரத்தில், ஆதங்கத்தில் வெள்ளை அறிக்கை கேட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்து விட போகிறாரா? என்று சொன்னேன். யாருக்கும் முரண்பட்ட பதிலாக சொல்லப்பட்ட கருத்து அல்ல.

ஆஸ்பத்திரியில் உடல்நலம் குன்றி ஜெயலலிதா மரணம் அடைந்தார். ராஜீவ்காந்தி திட்டமிட்டு துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்டார். அதனை தொடர்புபடுத்தி இந்த வழக்கை விசாரிக்காமல் குற்றவாளிகளை தப்பிக்க விட்டுவிடலாமா? என்று, என்ன மனநிலையில் ஒப்பிட்டு கேள்வி கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. அதனால் தான் மனநிலை பாதித்தவர்கள் தான் இப்படி கேள்வி கேட்பார்கள் என்று கூறினேன்.

நான் சொல்வது தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்தாக அமையும். அந்த கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்தா, இல்லையா? என்பதை விமர்சிக்கும் அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி, தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் போன்றவர்களுக்கு தான் இருக்கிறது. வேறு யாருக்கும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை தேவை இல்லை என்று திருநாவுக்கரசர் கூறிய கருத்துக்கு இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து இளங்கோவனை அவர் மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை: