புதன், 2 நவம்பர், 2016

டோஷ் வங்கி திவால் : வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டு ?

ஜெர்மனியின் டாயிஷே வங்கிஜெர்மனியின் மிகப் பெரிய வங்கியான டாயிஷே வங்கி, 1870-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.6 ட்ரில்லியன் யூரோக்கள் (1,16,80,000 கோடி ரூபாய்). இது ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான (GDP) 3.19 ட்ரில்லியன் யூரோவில் சுமார் 50 சதவீதமாகும். உலகின் முக்கிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த மீப்பெரும் வங்கியே இன்று திவாலாகும் நிலையில் இருப்பதாக முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜெர்மனியின் டாயிஷே வங்கி
2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலக நிதிநெருக்கடியில் பாதிக்கப்பட்ட டாயிஷே வங்கி அதிலிருந்து மீள்வதற்கு இன்று வரை போராடி வருகிறது. அதன் பொருட்டு அவ்வங்கி முறைகேடான நடைமுறைகளைப் பின்பற்றவும் தயங்கவில்லை. டாய்ஷே வங்கி தனது கடன் பத்திரங்களை (mortgage securities) கைமாற்றியதில் செய்த முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரித்த அமெரிக்க நீதித்துறை (Department of Justice -DoJ), 14 பில்லியன் டாலர் (92,400 கோடி ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
முன்னதாக, சென்ற 2015-ம் ஆண்டு வங்கிகளுக்கு இடையிலான கடன் கொடுக்கும் லிபர் (LIBOR- London Interbank Offered Rate), வட்டி விகித நிர்ணய மோசடியில் (Libor Scandal) டாயிஷே வங்கியின் பங்கை விசாரித்த அமெரிக்க நீதித்துறை, 2.5 பில்லியன் டாலர்கள் (16,500 கோடி ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இவ்விரு அபராதங்களும் ஜெர்மனி வங்கியின் மீது விழுந்த பெரிய அடியாகும். குறிப்பாக, அவ்வங்கி இப்போதுள்ள நிலையில் 14 பில்லியன் டாலர் (12.8 பில்லியன் யூரோ) அபராதத்தைக் கட்டினால் அது திவாலாவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த அபராதத் தொகையைக் குறைக்க டாயிஷே வங்கிக்கும் அமெரிக்க அரசுக்கும் நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
ஜெர்மனி அரசும் டாயிஷே வங்கிக்கு மீட்பு உதவிகள் செய்யும் எந்த திட்டமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வங்கியின் சந்தை மதிப்பு பாதாளத்திற்கு சரிந்திருக்கிறது. இது மேலும் நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.
டாயிஷே வங்கி திவாலானால் அது லேமன் பிரதர்ஸ் 2008-ல் திவாலானதைப் போல் ஐந்து மடங்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் சில்வர் டாக்டர்ஸ் இணையதளத்தின் (silverdoctors.com) எடிட்டர்களில் ஒருவரான ஜிம் வில்லி (Jim Willie).
அமெரிக்க தொழிலதிபரும், பொருளாதார வல்லுநருமான ஜிம் ரோஜர்ஸ் (Jim Rogers), டாயிஷே வங்கி திவாலானால் அது உலகநிதி அமைப்பையே சீர்குலைத்து விடும் என்று ரஷ்யா டுடே-வுக்கு (rt.com) அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
ஆக, சுருக்கமாகச் சொன்னால், 2008 பொருளாதார நெருக்கடியிலிருந்தே உலக மக்கள் இன்னும் மீளாத நிலையில் இந்த நிதிச் சூதாடிகள் கட்டும் சீட்டுக்கட்டு பொருளாதார கோபுரம் மீண்டுமெருமுறை சரியக் காத்திருக்கிறது. இம்முறை அடி 5 மடங்கு பலமாக விழுமாம்.
ஒரு ஜெர்மன் வங்கியை அமெரிக்க அரசுஏன்  கைவிடவேண்டும்? அவ்வங்கி திவாலானால் அது அமெரிக்காவிற்கு நிம்மதியை தந்துவிடாது. இவ்விசயத்தில் மேல் நிலை வல்லரசுகளின் முரண்பாடு காரணமாக அதாவது தத்தமது நலனை மனதில் கொண்டும் செயல்படுகிறார்கள் எனலாம். அமெரிக்காவின் நிதி நெருக்கடி காரணமாக இந்த அபராதம் விதிக்கப்படுவதாகவும், ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்ததற்கு போட்டியாக அமெரிக்கா இதைச் செய்திருப்பதற்கு வாய்ப்புண்டு என்றும் கூறுகின்றார்கள்.
தமது இருப்பை தக்கவைக்க, விஸ்தரிக்க முதலாளித்துவ சமூகத்தினுள்ளே இத்தகைய கழுத்தறுப்புச் சண்டைகள் சகஜம். இவற்றின் சுமையை ஏழை நாடுகள் மற்றும் உலக மக்கள் மேல் தள்ளிவிடும். கார்ப்பரேட் நிறுவனங்கள் அவ்வப்போது கொண்டிருக்கும் இணக்கமான உறவு என்பது தற்காலிகமான ஒன்று. முரண்பாடுதான் அவர்களின் அடிப்படை உறவு என்பதை நிரூபிக்கிறது டாய்ஷே வங்கியின் நெருக்கடி!
அமெரிக்க தொழிலதிபர் ஒருவரே இம்முரண்பாட்டை ஒத்துக் கொள்கிறார்.
***
டாயிஷே வங்கி திவாலானால் அது  உலகநிதி அமைப்பையே சீர்குலைத்து விடும் என்கிறார் ஜிம் ரோஜர்ஸ்.
deutsche-bank-fall-chartஆர்.டி(RT) : அமெரிக்கா ஏன் இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித்துள்ளது? விசயங்களை தெளிவுபடுத்த முதலில் அதைப் பற்றி கூறுங்கள்.
ஜிம் : அமெரிக்க அரசு மிக மோசமான கடனில் சிக்கியுள்ளதே முக்கியமான காரணமாகும். அவர்கள் மிகப்பெரிய பற்றாக்குறையில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு பணம் மிக அவசிய – அவசரத் தேவையாக உள்ளது. அவர்கள் எங்கிருந்தேனும் அதைப் பெற முயற்சிக்கிறார்கள். டாயிஷே  வங்கி 14 பில்லியன் டாலர்களை செலுத்த கடமைப்பட்டுள்ளதாக நான் கற்பனையிலும் நினைக்கவில்லை.
ஆர்.டி: அமெரிக்கா விதித்துள்ள அளவு அபராதத் தொகையை கட்ட முடியாது என்று அந்த வங்கி தெரிவித்துள்ளதே… இது எப்படி தீர்க்கப்படும்?
ஜிம் : ஒன்று டாயிஷே வங்கி திவாலாகி, ஒட்டு மொத்த உலகப் பொருளாதார அமைப்பையும் கீழே தள்ளப் போகிறது. அல்லது அவர்கள் குறைவான தொகைக்கு சமரசத்தை வந்தடைவார்கள். டாயிஷே  வங்கி 14 பில்லியன் டாலர்களை செலுத்திதான் ஆக வேண்டுமென்றால், நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டும்.
ஆர்.டி: இந்தக் கட்டத்தில் ஜெர்மனியின் முக்கிய வங்கி எந்நிலையில் இருக்கிறது? மீட்பு நிதியுதவியின்றி (Bail-Out) அதனால் பிழைத்திருக்க முடியுமா?
ஜிம் : நீங்கள் அதன் இருப்புநிலை அறிக்கையை (Balance Sheet) பார்த்தால், மலைக்க வைக்கும் பெரும் கடன் இருப்புநிலை அறிக்கையிலும், அதற்கு வெளியிலும் இருப்பதைப் பார்க்கலாம். அதாவது அவர்கள், கடன்களை நேரடியாக வெளியே சொல்வதில்லை. நிதி ஆதரவு கிடைத்தால் இவ்வங்கி தப்பிப் பிழைக்கும். இல்லையெனில் நாம் அனைவருமே அடுத்த சில ஆண்டுகளுக்கு பெரிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். நான் முன்னயே சொன்னேன் அல்லவா,  நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டும். மேற்கத்திய உலகம், மொத்த உலகமும் அடுத்த சில ஆண்டுகளுக்கு பெரிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். கவலை கொள்ளுங்கள்!
ஆர்.டி: மிகச் சமீபத்தில், ஆகஸ்ட் மாதம் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து செலுத்த தவறிய வரியாக பில்லியன் கணக்கான யூரோக்களை திரும்ப கோரும் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்தது அமெரிக்காவை கடுப்பேற்றியது. தற்போதைய டாயிஷே வங்கியை சுற்றி நடக்கும் பிரச்சினைகள் வாசிங்டனின் பழிவாங்குதல் என பலரும் கருதுகிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
ஜிம் : இந்த அரசுகள் மாறி மாறி பழிவாங்கும் செயல்களை மீண்டும் மீண்டும் அரங்கேற்றுகின்றன. நம் யாருக்குமே இது நல்லதல்ல. ஆனால், அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். நீங்கள் இந்த அதிகாரவர்க்கத்தினருக்கு அதிகாரத்தை கொடுக்கிறீர்கள் – அதைக் பெற்றுக்கொண்டு அவர்கள் அதை இயக்குகிறார்கள். அதிகாரம் ஊழல் படுத்திவிடுகிறது, பல நூறு ஆண்டுகளாக அதுதான் நடந்து வருகிறது.
ஆர்.டி: ஒருவேளை டாயிஷே  வங்கி திவலாகி தோற்றால், அது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக நிதி அமைப்பில் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன?
ஜிம் : ஐரோப்பிய ஒன்றியம் சிதறுண்டு விடும். ஏனெனில், ஜெர்மனியால் இனியும் அதை தாங்கிப் பிடிக்க முடியாது, விரும்பாது. மற்ற பலர் மீட்பு நிதியுதவி (Bail-Out) அளிக்கத் துவங்குவார்கள். ஐரோப்பாவில் பல வங்கிகள் பிரச்சினையில் சிக்கியுள்ளன. டாயிஷே வங்கியின் தோல்வி – அனைத்தின் முடிவாக அமையும்.
1931-ல் ஐரோப்பாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றின் தோல்வி பெரு மந்தமும் (Great Depression), அதன் தொடர்ச்சியாக இரண்டாம் உலகப் போரும் உருவாக வழிவகுத்தது. அதனால் கவலை கொள்ளுங்கள்!
ஜெர்மனி மற்ற நாடுகள் அனைவரிடமும் தங்கள் வங்கிகளுக்கு மீட்பு நிதியுதவி (Bail-Out) அளிக்க வேண்டாம் என்று சொல்லி வருகிறது. அது திடீரென தனது வங்கிகளுக்கு மீட்பு நிதியுதவி அளிக்க வேண்டிவந்தால், அது மற்ற நாடுகளிடம் சினத்தை ஏற்படுத்தும். அரசியல்வாதிகள் கள நாட்களை சந்திக்க நேரிடும்.
செய்தி – தமிழாக்கம்: நாசர்.  வினவு.com

கருத்துகள் இல்லை: