ஞாயிறு, 30 அக்டோபர், 2016

‘ஜெ’ கைரேகை .... டாக்டர் கையெழுத்து எங்கே? அடுத்த சர்ச்சை!

பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கு, போட்டியிடும் வேட்பாளர்களால் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களில் அதிமுக சமர்ப்பித்த விண்ணப்பங்கள் பல சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. வேட்பாளருக்கு தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னம் ஒதுக்குவதற்காக சமர்ப்பிக்கப்படும் ‘பார்ம் பி’ படிவத்தில் அதிமுக பொதுச்செயலாளரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவும் அதையொட்டி எழும் சட்டரீதியான சிக்கல்களையும் மதியம் வெளியிட்ட (ஜெயலலிதா கைரேகை தேர்தல் ஆணையம்! -
அருண் வைத்தியலிங்கம் http://www.minnambalam.com/k/1477765849) கட்டுரையில் விரிவாக அலசியிருந்தார் வழக்கறிஞர் அருண் வைத்தியலிங்கம். இந்நிலையில் இப்போது தொகுதிக்கான தேர்தல் அதிகாரிக்குச் சமர்பிக்கப்பட்டுள்ள ‘படிவம் ஏ’–யில் நான்கு இடங்களில் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை உள்ளது.
‘படிவம் பி’ என்பது சின்னம் கோருவதற்கானது. ‘படிவம் ஏ’ என்பது கட்சியின் தலைவரோ, செயலாளரோ சின்னம் கோரும் ‘படிவம் பி’–யில் யார் கையெழுத்திட போகிறார்களோ அவரின் பெயருடன் மூன்று மாதிரி கையெழுத்துகளை ‘ஏ’ படிவத்தில் பெற்று அதை ‘படிவம் பி’-யுடன் தேர்தல் அதிகாரிக்குச் சமர்ப்பிக்க வேண்டும். ‘ஏ’ படிவத்தில் எவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதோ, அதே நபர் ‘பி’ படிவத்திலும் கையெழுத்திடுவார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தன் கட்சி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கோரி தாக்கல் செய்த ‘படிவம் பி’-யில் இடது கை பெருவிரல் ரேகை பெறப்பட்ட நிலையில், அதை அத்தாட்சிப்படுத்தும் வகையில் சென்னை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மருத்துவர் பி.பாலாஜி கையொப்பம் இட்டதோடு ஜெயலலிதாவுக்கு ‘டிரஸ்கியாஸ்டமி’ செய்யப்பட்டதால் வலது கை வீங்கி ஒவ்வாமை ஏற்பட்டு கையெழுத்திட முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறியிருந்தார். மருத்துவரின் அத்தாட்சி என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டது இப்போது உறுதியாகி உள்ளது.
அதாவது, 27-10-2016 நாளிட்ட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய கடிதத்தில், ஜெயலலிதா படிவம் ஏ மற்றும் பி–யில் வைக்கப்படும் கைரேகைக்கு ஒரு மருத்துவ அதிகாரி சான்றளிக்க வேண்டும் என்றும் அப்படி அத்தாட்சி இடப்பட்ட படிவங்களை தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனைகளோடு கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான் ‘படிவம் பி’-யில் பெறப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகைக்கு மருத்துவ அதிகாரி பாலாஜி சான்று அளித்திருந்தார். ஆனால், 1968ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தின் 13ஆவது பிரிவில் உள்ள சட்ட ஷரத்துக்களில் கூறியுள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அந்தக் கடிதம் சட்டத்தின் முன்பாகக் கேள்விக்குள்ளாகி உள்ள நிலையில், தற்போது ‘படிவம் ஏ’–யில் அதிமுக பொதுச்செயலாளரின் இடது கை பெருவிரல் ரேகை நான்கு இடங்களில் பெறப்பட்டுள்ளது.
இந்த நான்கு கைரேகைகளுக்கும் மருத்துவ அதிகாரி அத்தாட்சி செய்யவில்லை. இது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து வந்த கடிதத்துக்கு முரணாகவும், அவர் விதித்த நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றாமலும் உள்ளது. தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் பொதுச் செயலாளரால் இப்படியான படிவங்கள் தேர்தல் அதிகாரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவை மேலும் பல சட்டச் சிக்கல்களை உருவாக்கும்.
இம்மாதிரி விஷயங்களில் தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் மனுக்களை வழக்கமாக தேர்தல் ஆணையம் அந்த நிமிடமே பொது மக்கள் பார்வைக்கு வைக்கும். அதில் ஏதேனும் தவறு இருந்தால், அந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள் யார் வேண்டுமென்றாலும் தவறுகளை தேர்தல் அதிகாரியிடம் சுட்டிக்காட்டலாம் என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும். இம்மூன்று தொகுதிகளிலும் வேட்புமனு பரிசீலனை வருகிற 3ஆம் தேதி நடைபெறும் நிலையில், வேட்புமனுவை இறுதி செய்வதற்கு முன்பு அந்தந்த தொகுதிகளில் உள்ள ஏதேனும் வாக்காளர்கள் கூட தங்கள் தேர்தல் அதிகாரியிடம் படிவங்கள் ஏ மற்றும் பி குறித்து கேள்வி எழுப்பலாம். அதன் மீது தேர்தல் அதிகாரி முடிவை அறிவிக்க வேண்டும்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: