ஞாயிறு, 30 அக்டோபர், 2016

மதுரை என்றாலே கொண்டாட்டங்கள்தான் .. ஒரு பார்வை !

விகடன்,காம் ;தெருவுக்கு ஒரு கோயில், தினம் ஒரு திருவிழா, வாரம் ரெண்டு சினிமா என,
மதுரையின் அடையாளமே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். இந்த உற்சாகம்தான் மதுரைக்காரர்களை எப்போதும் எனர்ஜியோடு வைத்திருக்கிறது. அதுவே `நாங்க மதுரைக்காரய்ங்கடோய்..!’ என எந்த ஊருக்குச் சென்றாலும் தெம்பாகப் பேசவும்வைக்கிறது. இப்போது எப்படி இருக்கிறது மதுரை?

பிஸியாகிவிட்ட மாசி வீதிகள்!

தி.நகர் ரங்கநாதன் தெருவைப் போன்றது மதுரையின் மாசி வீதிகள். இந்த மெயின் வீதிகளுக்கு இடையில் நவபாத்கானா தெரு, மஞ்சனக்காரத் தெரு, வெண்கலக்கடைத் தெரு, பத்து தூண் என, கிளை வீதிகள் பிரிந்து அங்கேயும் துணிக் கடைகளால் கூட்டம் நிரம்பி வழியும். ஜவுளிக் கடைகள், பாத்திரக் கடைகள், எலெக்ட்ரானிக் கடைகள், கல்யாண சீர்வரிசை கடைகள் என நிரம்பியிருக்கும் இந்த வீதியில், டிரங்குப் பெட்டி, கோரம்பாய், முறம், ஜரிகை விசிறி, உலக்கை, அம்மி என, கிடைக்காத பொருட்களே இல்லை. சௌராஷ்டிரா நெசவாளர்களின் சுங்குடி சேலை மற்றும் வேட்டிகளை வாங்கவும் கூட்டம் மொய்க்கும். சமீபகாலமாக இங்கே வடமாநிலத்தவரின் துணிக் கடைகள் அதிகமாகிவிட்டன.
சமணர் ஸ்பாட்!

சமீபகாலமாக ஊரைச் சுற்றி உள்ள சமணர் மலைகள் வார இறுதி ட்ரக்கிங் ஸ்பாட்டாக மாறிவிட்டன. கிரானைட் கொள்ளையர்களிடம் இருந்து மலைகளைக் காப்பதற்காகவும், அவற்றின் வரலாற்றுப் பெருமைகளை மற்றவர்கள் அறிந்துகொள்ள செய்யவேண்டும் என்றும், பல ட்ரக்கிங் அமைப்புகள் தோன்றி, இன்று இந்த மலைகளுக்கு வெளியூர் ஆட்களும் விசிட் அடிக்க ஆரம்பித்துள்ளனர்.
பிரமாண்டங்களின் என்ட்ரி!

சென்னையின் பிரபல பிரமாண்டமான கடைகளின் வரவால், மதுரை முழுவதும் உள்ள பாரம்பர்யக் கடைகள் பொலிவிழந்து காணப்படுகின்றன. இருந்தும், ஒருசில உள்ளூர் கடைகள் போட்டிபோட்டு தங்கள் வாடிக்கை யாளர்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன.
வண்டிக்கடை சிற்றுண்டி!

பானிபூரி, பஜ்ஜி, சிக்கன், பிரியாணிக் கடைகள், தமிழ்நாட்டின் மற்ற நகரங்களைப் போலவே மதுரையிலும் பெருகிவிட்டன. இருந்தாலும் வண்டிக்கடைகளில் கிடைக்கும் சிற்றுண்டிக்கான மவுசு கொஞ்சமும் குறையவில்லை. குட்டிக்குட்டி பருப்பு வடை, ஆமை வடை, சுழியம், முள்ளுமுருங்கை வடை, வெண்கலப்பானைகளில் சூடான பருத்திப்பால் என ஏராளமான பலகாரங்கள் இன்றும் கிடைக்கின்றன. மாலை வேளைகளில் பழக்கலவை, தென்னங்குருத்து, இளநீர் சர்பத் என சிற்றுண்டிகளுக்குப் பஞ்சம் இல்லை.
டவுன்ஹால் ரோடு கஹான் ஹே!

தங்கும் விடுதிகள், உணவகங்கள், எலெக்ட்ரானிக் கடைகள், துணிக் கடைகள், நவீன பார்கள் என அனைத்தும் அமைந்துள்ள பரபரப்பான பகுதி. கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பகுதி வடமாநில பகுதிபோல காட்சி தருகிறது. செல்போன் கடைகள், அதன் உதிரிப் பாகங்கள் ஹோல்சேல் கடைகள், ஒரிஜினல் மற்றும் டூப்ளிகேட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் கடைகளை, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே நடத்துகிறார்கள்.
எங்கும் ஜிகர்தண்டா! 

ஜான்சி ராணி பூங்கா அருகில்தான் முதல் ஜிகர்தண்டா கடை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இன்றோ, தமிழகம் முழுவதும் ஜிகர்தண்டா கிடைக்கிறது. இருந்தாலும், ஒரிஜினல் சுவைக்கு மதுரைக்குத்தான் வரவேண்டும். இன்று மதுரை முழுக்க தெருவுக்குத் தெரு  ஜிகர்தண்டா கடைகள் முளைத்திருக்கின்றன. விலைகூட 30, 50 என ஏற்றிக்கொண்டே போகிறார்கள். கடற்பாசிகளைக் கலந்து தயாரிக்கப்பட்ட ஜிகர்தண்டா, இன்று பாதாம்பிசினில்தான் அதிகம் தயாரிக்கப்படுகிறது.

கறிவேப்பிலை கறி... வெங்காயக் கறி!

உணவுப் பதார்த்தங்களில் புதுப்புது டிஷ்களைக் கண்டுபிடிப்பதில் கைதேர்ந்தவர்கள் மதுரை மக்கள். அப்படித்தான் 30 வருடங்களுக்கு முன்னர் சிம்மக்கல் கோனார் கடையில் கறிதோசையை அறிமுகப்படுத்தினார்கள். சர்வதேச அளவில் கறி தோசை பரவிவிட்டாலும், ஒரிஜினல் டேஸ்ட் சிம்மக்கல் கோனார் கடையில்தான் கிடைக்கும். மதுரையில் இப்போது கறிதோசை மட்டும் அல்ல, அம்சவள்ளி ஹோட்டல் மெஜுராசிக்கன், கீழவாசல் பர்மா கடை தேங்காய்ப்பால் இடியாப்பம், செல்வி மெஸ் கறிவேப்பிலை கறி, கிராஸ் ரோடு சுப்பு கடை வெங்காயக் கறி, பைபாஸ் ரோடு ஜெ.பி.ஹோட்டல் கிரில்டு சிக்கன், செட்டிநாடு ஹோட்டல் நண்டு கிரேவி, குமார் மெஸ் அயிரை மீன்குழம்பு என ஏகப்பட்ட உணவுகள் ஹிட் அடிக்கின்றன.
இப்போதும் சீரகசம்பாதான்!

மதுரையில் எங்கும் சீரகச்சம்பா பிரியாணிதான் இப்போதும். திருமணங்களிலும் அதேதான். பாசுமதி பிரியாணிக் கடைகள் ஒன்றிரண்டை இப்போதுதான் பார்க்க முடிகிறது. கோரிப்பாளையம் அஜ்மீர் பிரியாணி, சுல்தான் பிரியாணி, மாகாளிப்பட்டி பனைமரத்து பிரியாணிக் கடை, கோரிப்பாளையம் ராவுத்தர் பிரியாணி, வம்சாவழி பிரியாணி, நவாப் பிரியாணி என, பிரியாணிகள் தினுசுதினுசாகக் கிடைக்கின்றன.
மாறும் திரைமுகம்!

மதுரை மக்களின் மகிழ்ச்சி, பொழுதுபோக்கு, தோழமை அனைத்துமே சினிமாதான். மதுரையில் சினிமா பார்க்கச் செல்வது என்பது, திருவிழாவுக்குச் செல்வதுபோல. ரசிகர் மன்றத்தினர் தியேட்டர் வாசலில் நின்றுகொண்டு ஆண்களுக்கு கர்ச்சீப் மற்றும் விசிறிகளும், பெண்களுக்கு குங்குமச்சிமிழ் மற்றும் மை டப்பாவும் இலவசமாகத் தருவார்கள். தீபாவளி, பொங்கலில் புதுப்பட ரிலீஸின்போது படப்பெட்டிகளை யானை அல்லது குதிரை மீது வைத்து ஊர்வலமாகக்கொண்டுவருவார்கள். தங்கள் அபிமான நடிகர்களுக்கு எத்தனை அடியில் கட்அவுட் வைக்கிறோம் என்பதில், ரசிகர்களுக்குள் கடுமையான போட்டி இருக்கும். இன்று, திரையங்குகளில் பிரபல நடிகர் படங்களுக்கு முதல் மூன்று நாட்கள் மட்டுமே கூட்டம் வருகிறது. இருப்பினும், விதவிதமான கிராஃபிக்ஸ்களுடன் நிறைய பேனர்கள் வைக்கிறார்கள்.

உலக சினிமா!


உலகப் படங்கள் இன்று மதுரையில் பல இடங்களில் திரையிடுகிறார்கள். மதுரை அமெரிக்கன் கல்லூரி, லென்ஸ் திரைப்பட இயக்கம், விக்டோரியா எட்வர்டு மன்றம் போன்றவை உலக சினிமாக்களை தொடர்ந்து திரையிட்டு, விமர்சனக் கூட்டமும் நடத்துகின்றன. மேலும், இணையவெளி மூலம் கைகோத்து மாற்றுத் திரைப்படங்கள் குறித்த கருத்தரங்குகளையும் நடத்துகின்றன.

அழியும் திரையரங்குகள்!

சமீபகாலமாக நகரின் புகழ்மிக்கத் திரையரங்குகள் இடிக்கப்பட்டு வர்த்தக நிறுவனங் களாக மாறிவருவதை, மதுரை மக்கள் கண்ணீரோடு பார்க்கிறார்கள். அந்த வகையில்தான் மதுரையின் முதல் திரையரங்கான இம்பீரியல், வர்த்தகக் கட்டடமாக மாறியது. ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையரங்கமான தங்கம் இருந்த இடத்தில், இன்று துணிக் கடை வந்துவிட்டது. வடக்கு மாசி வீதியில் இருந்த பழம்பெரும் திரையரங்கமான சந்திரா, கார் பார்க்கிங்காக மாறிவிட்டது. முனிச்சாலை தினமணி டாக்கீஸ், ஜவுளிக் கடையாக மாறிவிட்டது. மதுரை தெற்கு மாசி வீதியில் 1930-ம் ஆண்டு செளராஷ்டிரா முதலாளிகளால் கட்டப்பட்ட சிடி சினிமா தியேட்டர், இன்று ஜவுளிக் கடை குடோனாக மாறிவிட்டது. சுந்தரம் தியேட்டர் இருந்த இடத்தில் இன்று மெஜஸ்டிக் மால் இருக்கிறது. மதுரையின் முதல் ஏசி தியேட்டரான சக்தி-சிவத்தில், சக்தி மட்டும் இருக்கிறது; சிவம் வங்கியாகிவிட்டது. ராம் விக்டோரியா, ஜெயராஜ், சந்திரா, கதிர்வேல், போன்ற தியேட்டர்களும் இன்று காணாமல்போய் விட்டன.
செளராஷ்டிரா சினிமா!

இங்கு செளராஷ்டிரா மக்கள் அதிகமாக உள்ளதால், அவர்களும் சினிமா எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் படங்களை அலங்கார் திரையரங்கில் அவ்வப்போது திரையிடுவார்கள். லோக்கல் சேனல்களிலும் செளராஷ்டிரா மொழி நிகழ்ச்சிகள் இடம்பெற தொடங்கியுள்ளன.

சுருங்கிய நாடகங்கள்!


தமிழ்நாட்டில் உருவான முதல் நாடகம் மற்றும் திரைப்பட நடிகர்கள் சங்கம், சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ளது. சென்னைக்கு அடுத்து அதிக உறுப்பினர்கள் கொண்ட சங்கம் இதுதான். நாடகக் கலை அழிந்துபோகாமல் இன்றும் காத்துவருகிறார்கள். தென்மாவட்டங்களில் திருவிழாக்களில் நாடகங்களை அரங்கேற்றும் வழக்கம் இப்போதும் இருந்தாலும், சுமார் பத்து மணி நேரம் நடத்தக்கூடிய `வள்ளி திருமணம்', `சத்தியவான் சாவித்திரி' போன்ற நாடகங்களை ட்ரெண்டுக்குத் தகுந்தாற்போல மூன்று மணி நேரத்துக்குள் முடித்துவிடுகிறார்கள்.

வடிவேலுவின் வைகை வாக்கிங்!

மதுரை மாநகரம் வழங்கிய கொடைகளில் ஒன்று வைகைப்புயல் வடிவேலு. கவலைகளையே காமெடியாகச் சொல்லும் ட்ரெண்டை உருவாக்கியவர் வடிவேலு. விரகனூர் பக்கம் ஐராவதநல்லூரில் இருக்கும் அவர் வீட்டில் இருந்து சிறிது தூரம் காலாற நடந்தால் வைகைக்கரை. இன்றும் ஊருக்கு வந்தால் பழைய நண்பர்களோடு வைகைக்கரையில் அமர்ந்துகொண்டு, பழைய கதைகள் பேசி சிரிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் வடிவேலு.

அழகிரி அப்டேட்!

மீனாட்சி அம்மன், மல்லிகைப் பூ, இட்லிக்கு அடுத்தபடியாக மதுரையின் அடையாளமாக இருந்தவர் மு.க.அழகிரி. சுமார் 20 வருடங்கள், மதுரையின் அனைத்து விஷயங்களையும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தவர். அந்தக் காலகட்டங்களில் ‘ஆனா’ பெயரை உச்சரிக்காதவர் குறைவு. இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதை, திருமங்கலம் ஃபார்முலா மூலம் இந்தியாவுக்கே சொல்லிக்கொடுத்தவர். ஃப்ளெக்ஸ் பேனர்களுக்கு வாழ்வுகொடுத்தவர். முன்னர் எல்லாம் அவர் வீடு இருக்கும் டி.வி.எஸ் நகருக்குச் செல்வது என்றால், நான்கைந்து இடங்களில் காவல் துறையின் சோதனைகளுக்குப் பிறகே செல்ல முடியும். வீட்டுவாசலில் ஒரு கும்பல், எப்போதும் காத்துக் கிடக்கும்; அவர் தரிசனத்துக்காக ஏங்கும். ஆனால் இன்றோ, அரசாங்கப் பதவியும் இல்லை; கட்சிப் பதவியும் இல்லை என்பதால், அடிப்பொடிகள் பலர் தங்கள் இடத்தை மாற்றிக்கொண்டார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் வந்து பார்த்துச் செல்கிறார்கள். எஸ்கார்டு போலீஸைத் தவிர வீட்டுவாசலில் எவரும் இல்லை.

டான்ஸ் குரூப்கள்!


30 வருடங்களுக்கு முன்னர் மதுரையில் டான்ஸ் குரூப்கள் அதிகம் இருந்தன. பிரபல நடிகர்கள் கெட்டப்பில் டான்ஸ் ஆடும் புது ட்ரெண்டை உருவாக்கியவர்கள் மதுரை மைந்தர்களே! அபிநயா, நாட்டியா என்ற பெயரில் ஏகப்பட்ட குழுக்கள் உருவாயின. ஆனால், இப்போது போலீஸ் கெடுபிடிகளால் நிகழ்ச்சிகளை முன்புபோல நடத்த வழியின்றி தவிக்கிறார்கள்.

மாறாத மார்க்கெட்
ரிலையன்ஸ், பிக் பஜார் என மதுரையைச் சுற்றி எண்ணற்ற சூப்பர் மார்கெட்கள் வந்துவிட்டன. இருந்தாலும் வாரச் சந்தைகளை மக்கள் இன்னும் கைவிடவில்லை. எல்லீஸ் நகர் செவ்வாய்க்கிழமை சந்தை, பைபாஸ் ரோடு வெள்ளிக்கிழமை சந்தைகளில் மலிவான விலையில் காய்கறி மற்றும் பழங்கள் கிடைக்கும். மாட்டுத்தாவணி பெரிய மார்க்கெட்டில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரம் நடக்கிறது.

பீட்சா பாய்ஸ்!

ராஜாஜி பார்க்குக்கும் எக்கோ பார்க்குக்கும் சென்ற டீன்ஏஜ், இப்போது மில்லினியம் மால், விஷால் மால்களில் டேராவைப் போடுகிறார்கள். அதுமட்டும் அல்லாமல் பிரமாண்டத் துணிக் கடைகளும் நவீன ரெஸ்டாரன்ட்களும் காபி ஷாப்களும் டாப்படிக்கும் ஸ்பாட்களாகிவிட்டன. சாப்பாட்டு விஷயத்தில் சிக்கனமாக இருந்த மதுரைக்காரர்கள், எப்போதாவதுதான் ஹோட்டலுக்குச் செல்வார்கள். இப்போது எல்லாம் கே.எஃப்.சி., மேரி ப்ரவுன், அரேபியன் கபாப் என, பன்னாட்டு உணவகங்களில் குவிகிறது இளைய தலைமுறை. வார இறுதியில், உள்ளூர் மக்களால் ஹோட்டல் நிரம்பிவிடுகிறது.

அரசியல் களம்!


புதிய கட்சியா, கட்சியின் முதல் மாநாடா, சாதி மாநாடா, மதுரையில் தொடங்கினால்தான் ஒர்க் அவுட்டாகும் என்ற சென்ட்டிமென்ட் இன்றும் தொடர்கிறது. அரசியல்வாதிகளில் பல வண்டுமுருகன்களை இங்கு பார்க்கலாம். ஒன்மேன் கட்சிகள் இப்போது அதிகரித்துவிட்டன. மதுரை மக்கள் ரொம்ப நல்லவர்கள், யார் பொதுக்கூட்டம் போட்டாலும் வந்து வேடிக்கை பார்ப்பார்கள். அது நக்கலான பார்வையாகவும் இருக்கும். இதனால்தான் மக்கள் செல்வாக்கு இல்லாமலும்கூட மதுரையில் பல அரசியல்வாதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரை மல்லி!

புவிசார் குறியீட்டில் மதுரை குண்டு மல்லிக்குத் தனி அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். காலையில் தொடுக்கப்பட்ட மல்லிச்சரங்கள் பார்சல் செய்யப்பட்டு, தினமும் சிங்கப்பூருக்கும் மலேஷியாவுக்கும் விமானத்தில் பயணமாகின்றன. தமிழகத்தில் நான்கில் ஒரு பங்கு மல்லிகை சாகுபடி மதுரை வட்டாரத்தைச் சுற்றியே நடக்கிறது. வாசனை திரவியத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துவருகிறார்கள் மதுரை மக்கள். அரசு செய்வதாக இல்லை. 
வைகை எங்கே?
தேனி மாவட்டத்தில் இருந்து கிளம்பி ராமநாதபுரம் வரை செல்லும் வைகை மதுரையில் வறண்டு கிடக்கிறது. மதுரையைக் குளிர்வித்தது வைகை மட்டும் அல்ல... கிருதுமால் நதியும்தான். ஒரு காலத்தில் மதுரையின் தெற்குப் புறத்தில் ஓடி சாயல்குடி வரை சென்ற அதில், இன்று  குப்பைகளையும் கழிவுநீரையும் கலந்ததால், அது ஒரு பெரிய சாக்டையாக மாறி நகருக்குள் நாறிக்கொண்டிருக்கிறது. இதுமட்டும் அல்ல, பல கிளை ஆறுகள், கண்மாய்கள், குளங்கள் மதுரையில் காணமால்போய்விட்டன. சொக்கிக்குளம், பீபிகுளம், தணக்கன்குளம், ஆலங்குளம், கொடிக்குளம், தள்ளாகுளம்... என ஏகப்பட்ட குளங்கள் மதுரையில் இருந்தன. ஆனால், இன்று பெயர்கள் மட்டும்தான் உள்ளன. குளங்களைக் காணவில்லை. 
உரிமைக்குரல்!

 தமிழகத்தின் எங்கு அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் மதுரையில் இருந்துதான் முதல் எதிர்ப்புக் குரல் ஒலிக்கும். ஆந்திராவில் செம்மரக்கடத்தல் என்ற பெயரில் தமிழர்கள் சுட்டுக் கொல்லபட்டபோது மதுரையில் இருந்துதான் சட்டப் போராட்டம் நடத்தினார்கள். பீப்பிள்வாட்ச், எவிடென்ஸ், சமம் குடிமக்கள் இயக்கம், சோக்கோ அறக்கட்டளை, சோசியல் ஜஸ்டிஸ்... போன்ற மக்கள் அமைப்புகள் பல நெருக்கடிகளைக் கடந்தும் முனைப்போடு இயங்குகின்றன!

கருத்துகள் இல்லை: