செவ்வாய், 1 நவம்பர், 2016

பொது சிவில் சட்டம் .. குஷ்பு கொழுத்தி போட்ட தலாக் சட்ட வெடி

மின்னம்பலம்,காம் :அதிரடியான கருத்துகளை முன் வைத்துவிட்டு பெரும்
சர்ச்சையில் அடிக்கடி சிக்கிக்கொள்பவர் குஷ்பு. ஆனால், அவர் ஒருபோதும் தான் முன்வைத்த கருத்தை திரும்பப்பெற்றதில்லை. கடும் மிரட்டல்களும், எதிர்ப்பலைகளும் தோன்றியபோதும் உறுதியாக நின்று அதை சமாளித்தவர். இந்நிலையில், பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பேசியதாக குஷ்பு மீண்டும் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறார். இதில் குஷ்பு இஸ்லாமிய சமூகத்தில் பிறந்தவர் என்பதும், பொது சிவில் சட்டத்தை அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முத்தலாக் முறையை ஒழிப்பது உள்ளிட்ட நோக்கத்தோடு இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வர மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளை அறிவதற்காக சட்ட ஆணையம் கேள்வித்தாள் தயாரித்துள்ளது.
இந்நிலையில், இந்த முயற்சிக்கு இந்தியா முழுவதும் அரசியல் கட்சியினரிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான குஷ்பு, பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். குஷ்பு, சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ‘பொது சிவில் சட்டம் அவசியமே. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தவுடனே பொது சிவில் சட்டம் கொண்டு வராமல், உ.பி. தேர்தலை முன்வைத்து பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது அரசியல் நோக்கமே’ என்று பேசியுள்ளார்.
இந்த பேட்டி இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கோபத்தை உருவாகியுள்ளது. இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் அப்துல்ரஹீம், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசருக்கு குஷ்புவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள், குஷ்பு தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அவர், “பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. குஷ்பு ஆதரிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து” என்று கூறினார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “பொது சிவில் சட்டம் வேண்டாம் என்பவர்கள் பெண்ணுரிமைக்கு எதிரானவர்கள். குஷ்பு ஆதரித்திருப்பது வரவேற்கத்தக்கது. மாற்றுக்கட்சிகளில் இருந்தாலும் அவர் வரவேற்றிருப்பது நல்ல வி‌ஷயம். ஆனால், பாஜக அரசு கொண்டு வருவதால் அந்த சட்டத்தை விமர்சனம் செய்வது நல்லதல்ல. குஷ்புவைப் பொருத்தவரை இஸ்லாமிய சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர். பெண்களின் நிலையை நன்றாக உணர்ந்தவர். பொது சிவில் சட்டம் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். எனவே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எல்லோரும் வரவேற்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா அவர்களிடம் கருத்து கேட்டோம். “நாங்கள் இதுகுறித்து குஷ்புவிடம் பேசினோம். அவர் மொத்தமாக பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கவில்லை. பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படும் முத்தலாக் முறையை அவர் மறுக்கிறார். இப்படி பெண்களுக்கான உரிமை மறுக்கப்படும் விஷயங்கள் இஸ்லாத்தில் மட்டுமல்ல; இந்து மதத்திலும் இருக்கிறது. ஏதோ ஒரு காலத்தில் இருந்த சில பழக்க வழக்கங்கள் இன்றைக்கும் நீடிப்பதால் பெண்களின் சம உரிமையை மறுக்குமானால் அதை மாற்றியமைக்க வேண்டும் என்று பெண் உரிமை அடைப்படையில்தான் குஷ்பு பேசுகிறார். மூன்று முறை தலாக் சொன்னால் விவாகரத்து ஆகிவிடும் என்று ஆண்களுக்கு இருக்கும் உரிமை பெண்களுக்கு இல்லை. ஆண்கள் மட்டுமே சிந்திக்கக் கூடியவர்களாகவும் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்களாகவும் இருந்த காலகட்டத்தில் அந்த மதம் அவர்களுக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கிறது. இன்று இஸ்லாமியப் பெண்கள் எல்லோரும் படித்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள். இந்நிலையில்தான் குஷ்பு, சல்மா போன்றவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தபோதும் அதை மறுக்கிறார்கள். முத்தலாக் முறையை மறுப்பது வேறு; பொது சிவில் சட்டம் என்பது வேறு. எல்லா மதத்திலும் சீர்திருத்தம் வர வேண்டும். பொது சிவில் சட்டம் என்றால் அது ஏதோ இஸ்லாமிய மதத்தை சீர்திருத்த வேண்டும் என்பது போன்ற தோற்றத்தை பாஜக கொடுக்கிறது. இந்து மதத்திலும் அடிப்படையில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. இன்றும் எத்தனையோ கோயில்களுக்குள் தலித்துகள் நுழைய முடிவதில்லை. அம்பேத்கர் காலத்திலேயே அரசியல் நிர்ணய சபையில் இதை மிகுந்த தயக்கத்தோடுதான் அரசியல் நெறிமுறை வழிகாட்டுதலாக அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்காலத்தில் நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும் என்று சொல்லப்பட்டது. தேவைப்பட்டால் அனைத்து மதங்களிலும் சீர்திருத்தத்தை கொண்டு வரும் வகையில் இதை பரிசீலிக்கலாம். ஆனால், இந்த முத்தலாக் முறையை மட்டும் வைத்துக் கொண்டு இந்து மதத்தில் எல்லோரும் சம உரிமையோடு உள்ளது போலவும் இஸ்லாம் மதத்தில்தான் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவது போலவும் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் பாஜக பிரச்சாரம் செய்வதை அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: