திங்கள், 1 டிசம்பர், 2014

காவியத் தலைவன் ! எந்த ஃப்ரேமிலும் காவியத்தலைவனை .....

ஜெயமோகன் காவியத்தலைவனில் எப்படியெல்லாம் தடுமாறியிருக்கிறார் என்பதை பார்க்கும்போது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இதே சினிமாவில் வசனங்களால் அனல் கக்கிய அண்ணாவும், கலைஞரும், கண்ணதாசனும், திருவாரூர் தங்கராசும் எத்தனை மகத்தான எழுத்தாளுமைகள் என்பதை உணரமுடிகிறது.ராஜபார்ட் வேஷம் கட்டும் பொன்வண்ணன், குரு நாசரிடம் கோபித்துக் கொண்டு கிளம்புகிறார். பிருத்விராஜை நடித்துக் காட்டும்படி நாசர் சொல்கிறார். பொன்வண்ணனைவிட பிரமாதமாக பிருத்வி நடிக்கிறார். அடுத்து சித்தார்த்தையும் நடித்துக்காட்ட சொல்கிறார். நம்மூர் நாடக மரபு நடிப்பினை உடைத்து, லேசான மேற்கத்திய தாக்கத்தோடு சித்தார்த் செய்ய காவியத் தலைவன் உருவாகிறான் என்று நம்பிக்கை பிறக்கிறது.
ஆனால், ஒரு ஜமீன் பெண்ணை காதலித்து.. அதை பிருத்விராஜ் நாசரிடம் போட்டுக் கொடுத்து அவரது ராஜபார்ட் வேஷம் பிடுங்கப்பட்டு, மீண்டும் பிருத்விராஜ் ராஜாவாகும்போது.. அட.. இதோ இவன்தான் காவியத்தலைவன் என்று நிமிர்ந்து உட்காருகிறோம்.
இரண்டாம் பாதியில் மீண்டும் சித்தார்த்தின் எண்ட்ரி. கர்ணமோட்சம் நாடகத்தில் கர்ணன் உயிரைவிட்ட பிறகு, திடீரென அர்ஜூன வேஷம் கட்டும் சித்தார்த் மிலிட்டரி மிடுக்கில் நடந்துவந்து, பார்வையாளர்களின் உயிரை உருக்கும் பாடலை பாடும்போது, ‘அடடே.. இவன்தான் காவியத்தலைவன் போலிருக்கு’ என்று ஃபீலிங் வருகிறது.

இப்படியாக படம் முடியும் ஃப்ரேம் வரை காவியத்தலைவனை தேடித்தேடி அலுத்துப் போகிறோம். இரண்டு முக்கிய பாத்திரங்களுமே செத்துப் போகிறபோது யார்தான் காவியம் படைத்து தலைவன் ஆனார்கள் என்கிற குழப்பத்தோடே அரங்கை விட்டு வெளியே வரவேண்டியிருக்கிறது.

எப்படிப்பட்ட படத்தையும் ஏதேனும் ஒரு சினிமா கோட்பாட்டுக்குள் அடக்கிவிடும் திறமை படைத்த விமர்சகர் ராஜன்குறையே, இந்தப் படத்தை எந்த சட்டகத்துக்குள் அடக்குவது என்று திணறிப்போயிருக்கிறார் என்பதை அவரது பேஸ்புக் ஸ்டேட்டஸ் காட்டுகிறது. கடைசியாக தமிழன் அவனாகவே கண்டுபிடித்த ‘ஒரு முறை பார்க்கலாம்’ என்கிற சினிமா தியரிக்குள் இதைப் பொருத்த முயற்சிக்கிறார்.

இலக்கியவாதிகளும், அறிவுஜீவிகளும் புரியாத வார்த்தைகளில் விமர்சனம் எழுதி உங்களை ஏமாற்றப் போகிறார்கள். வசந்தபாலனுக்காகவும், ஜெயமோகனுக்காகவும் அவர்கள் அளிக்கப்போகும் சலுகை இது. உண்மையில் அவ்வப்போது பளிச், பளிச்சென்று சில ஃப்ளாஷ்கள் அடித்தாலும், காவியத்தலைவன் படுமோசமாக தோற்றிருக்கிறது. அரவானுக்கு பரவாயில்லை என்கிற வகையிலான ஆறுதல் மட்டுமே.

படம் வரைய வசந்தபாலன் எடுத்துக்கொண்ட கேன்வாஸ் ஓக்கே. ஆனால் வரைந்திருக்கும் படம்தான் மாடர்ன் ஆர்ட்டுமாக இல்லாமல், மரபு ஓவியமாகவும் இல்லாமல் ஆறாங்கிளாஸ் பையனின் முதல் ஓவிய முயற்சி மாதிரி ஆகிவிட்டது.

டைட்டிலிலேயே ‘வெள்ளையர் காலத்து நாடகக் கம்பெனி’ என்று சொல்லிவிட்ட பிறகும், களத்தை பார்வையாளர்களுக்கு புரியவைக்க இடைவேளை வரை நேரம் எடுத்துக் கொள்கிறார். இடைவேளைக்கு அரை மணி நேரத்துக்கு முன்புதான் கதையே தொடங்குகிறது. சித்தார்த் ராஜபார்ட் ஆனதும், அவருக்கும் இளவரசிக்குமான காதல், சித்தார்த் மீதான பிருத்விராஜின் பொறாமை, போட்டுக் கொடுத்தல், குரு சாபம், இளவரசி மரணம், குருவுக்கு சிஷ்யனின் சாபம், குருவின் மரணம், சித்தார்த் விரட்டப்படுதல் என்று சரசரவென்று ஓடி ‘இடைவேளை’ போடும்போது சர்ரென்று பிரமிப்பு ஏற்பட்டதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

இடைவேளை முடிந்தவுடன் பழைய குருடி கதவை திறடி கதைதான். முப்பதுகளின் கதை என்றால் மெதுவாகதான் எடுத்துத் தொலைக்க வேண்டுமென்று என்ன இலக்கணக் கண்ணறாவியோ தெரியவில்லை.

படத்தின் பெரிய பலவீனம் பிருத்விராஜ் – சித்தார்த் இடையே ஏற்படும் முரண். எல்லாம் தெரிந்தும் சித்தார்த் நல்லவராகவேதான் இருக்கிறார். கொலைவெறி வருமளவுக்கு இருவரிடையே முரண் ஏதுமில்லை. இரு நண்பர்களுக்குள் பிரச்சினை எனும்போது, ஒரு நண்பன் துரோகியாகதான் ஆகித்தொலைக்க வேண்டுமா? எத்தனை ரஜினிகாந்த் – சரத்பாபு காம்பினேஷனில் இதையே திரும்பத் திரும்ப பார்த்திருக்கிறோம். போலவே வடிவாம்பாளான வேதிகாவுக்கு, சித்தார்த்தை ஏன் அந்தளவுக்கு லவ் செய்துத் தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்றும் தெரியவில்லை. அதுவும் ‘உன்னோட பிள்ளையை என் வயித்துலே சுமக்கணும்’ என்று கெஞ்சுகிற அளவுக்கு காதல் ஏற்பட என்ன எழவு காரணமென்று புரியவில்லை. புத்தி சுவாதீனமுள்ள பெண்ணாக இருந்திருந்தால் பிருத்விராஜைதான் கல்யாணம் கட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
படத்தின் மெயின் கேரக்டர்களே திரும்பத் திரும்ப ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டிருப்பதால் மெகாசீரியல் வாசனை பலமாக அடிக்கிறது.

ஸங்கீதம் ஏ.ஆர்.ரகுமானாம். சம்பாஷணை ஜெயமோகன் என்று டைட்டில் போட்டிருந்தார்கள். பாட்டெல்லாம் கேட்கும்படி இருப்பதால் ஸங்கீதமே பரவாயில்லை. சம்பாஷணை படுமோசம். முன்பு தூர்தர்ஷனில் கல்கியின் ‘அலைஓசை’ தொடராக வந்தது. அதிலேயே சம்பாஷணை பிரமாதமாக இருந்த நினைவு.

திராவிட எழுத்தாளர்களை இளப்பமாக ஜெயமோகன் பேசுவார், எழுதுவார். அவர்கள் எல்லாம் இலக்கியவாதிகள் அல்ல. சும்மா அலங்கார நடையில் மக்களை உசுப்பேத்துகிறார்கள் என்பதாக அவர்களை பார்க்கிறார். திரள் மக்களை உசுப்பேத்துவது எவ்வளவு கடினமென்று காவியத்தலைவன் படத்தின் ரிசல்ட் மூலம் அவர் உணர்வார். தமிழின் ஆகச்சிறந்த நம் கால எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன், காவியத்தலைவனில் எப்படியெல்லாம் தடுமாறியிருக்கிறார் என்பதை பார்க்கும்போது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இதே சினிமாவில் வசனங்களால் அனல் கக்கிய அண்ணாவும், கலைஞரும், கண்ணதாசனும், திருவாரூர் தங்கராசும் எத்தனை மகத்தான எழுத்தாளுமைகள் என்பதை உணரமுடிகிறது.

ஒரு முயற்சி என்கிற வகையில் மட்டும் பார்க்கலாம். மற்றபடி தியேட்டரில் உட்காரும்போது அடிக்கடி வெளிவரும் கொட்டாவியை தடுக்கவே முடியவில்லை.

கருத்துகள் இல்லை: