திங்கள், 1 டிசம்பர், 2014

லிங்கா ! தமிழ் ரசிகர்களின் தலையில் அதிக விலையுள்ள மிளாகாய்

ரூ.150, ரூ.200க்கு டிக்கெட் விற்கப்பட்டாலும் கொடுக்கப்பட்ட டிக்கெட்டில் ரூ.50 என்று தான் இருக்கும். இல்லாவிட்டால் டிக்கெட்டில் விலையே இருக்காது.
 
மிழகத்தின் ஹாட் டாக் இப்போது 'லிங்கா' தான். இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் 'லிங்கா' திரைப்படத்தின் ஆடியோவின் உரிமை இத்தனை கோடி.. வெளிநாட்டு உரிமை இத்தனை கோடி... தொலைக்காட்சி உரிமை இத்தனை என கோடி...என  இந்த படத்தின் வியாபாரங்கள் மக்களிடம் முக்கிய விவாதப் பொருளாகி உள்ளது.
வரலாறு காணாத அளவுக்கு 'லிங்கா' படம் விற்றுவிட்டதாக சுவாரஸ்யத்துடன் பேசிவருகின்றோம். ஆனால் அது கடைசியில் படம் பார்க்க செல்பவர்களின் தலையில்தான் விடியும் என்பதை வசதியாய் மறந்து விட்டோம். தமிழகத்தின் சகல மீடியாக்களும் ஏகப்பட்ட பில்டப்புகளை கொடுத்து லிங்கா படத்தின்டிக்கெட்விலையைஉயர்த்துகிறார்கள்.கோடி கோடியாக  பேசப்படும்  லின்காவின் விலைஎல்லாம் சாதாரண ரசிகர்கள் பார்க்கும் டிக்கெட்டின் விலையை உயர்த்த கட்டி எழுப்பப்படும் பலூன் என்பதை மறக்கவேண்டாம் , இதற்காகத்தான் இவர் அரசியல் ஆசை என்ற மசாலைவையும் தூவுகிறார். இவர் ஒரு காரிய கிறுக்கன் தமிழ் ரசிக மகா ஜனங்களே தாராளமாக ஏமாறுங்க. சொன்னா கேக்கவா போறீங்க?


'லிங்கா' படத்தின் இந்த விற்பனை நம்மை எப்படி பாதிக்கும்? என்பதை பார்க்கலாம்.

வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டாலே விறுவிறுப்பு தானாக  தொற்றிக்கொள்ளும். டிசம்பர் 12-ம் தேதி ‘லிங்கா' படத்தின் வெளியீடு உறுதியாகிவிட்டதால் பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படம் தணிக்கை செய்யப்பட்டு ‘யு’ சான்றிதழும் கிடைத்துவிட்டது. பின்னணி இசை, கிராபிக்ஸ் என பல்வேறு இடங்களில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் ‘லிங்கா' குறித்து சேகரித்த சிறப்புத் தகவல் துளிகள் இவை...

விற்பனையில் இதுவரை இல்லாத சாதனை

ஒரு படத்தின் வணிக ரீதியிலான வெற்றி, தோல்வி என்பது, இப்போதெல்லாம் ரசிகர்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை. அது அந்தக்காலம். படம் வெளியாவதற்கு முன்னரே வேறு பல வழிகளில் முழு செலவையும் தாண்டி லாபம் பார்த்து விடலாம் என்பதுதான் இன்றைய நிலை. இதன் உச்சம் தான் 'லிங்கா'. படத்தின் ஆடியோ உரிமை, வெளியீட்டு உரிமை, வெளிநாட்டுக்கான உரிமைகள், சாட்டிலைட் உரிமை என படத்தின் உரிமைகள் கிட்டத்தட்ட 200 கோடி வரை விற்பனையாகிவிட்டதாக வெளிப்படையாகவே பேசத்துவங்கிவிட்டனர் திரைத்துறையினர். கூட்டி கழித்து பார்த்தால் எப்படியும் சில நூறு கோடிகளை எட்டிவிடும் என்பது தான் 'லிங்கா' வின் கணக்கு.
இவ்வளவு பெரிய தொகைகளுக்கு படத்தின் உரிமைகள் விலைபோனது 'லிங்கா'வுக்குத்தான். ரஜினியின் முந்தைய படங்கள் கூட ரிலீசுக்கு முன் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாகவில்லை.

படத்தின் விற்பனைத் தொகை ஒரு சாதனை என்றால், மற்றொரு சாதனை படம் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை. கிட்டத்தட்ட 5 ஆயிரம் திரையரங்குகளில் 'லிங்கா' வின் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த அளவை யாரும் நெருங்கியது கூட இல்லை.

தமிழகத்தில் '700 தியேட்டர்கள் லட்சியம். 600 தியேட்டர்கள் நிச்சயம்' என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ளது படத்தரப்பு. வெளிநாடுகளில் 200 தியேட்டர்களிலும் வெளியாகிறதாம் 'லிங்கா'.
அள்ளிக் கொடுக்கப்படும் ஊதியம்

தமிழகத்தின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஜனரஞ்சக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் என உச்சத்தில் உள்ளவர்களை கொண்டு தயாராகியுள்ளது 'லிங்கா'. இப்படி உச்சத்தில் உள்ளவர்களுக்கு அள்ளித்தரும் ஊதியம்தான் 'லிங்கா'வின் படத்தின் தயாரிப்பு செலவை கடுமையாக உயர்த்தியுள்ளதாம். எனவே அதில் இருந்து லாபம் வைத்து படத்தின் உரிமைகள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே சில நூறு கோடியில் இந்த படத்தை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.

படத்தின் வெளியீட்டு உரிமை நூறு கோடியை கடக்கும் போது, அதற்கேற்ப ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட வேண்டிய நிர்பந்தம் வினியோகஸ்தர்களுக்கு ஏற்படுகிறது. அப்படித்தான் 'லிங்கா' படம் 5 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசாக ஏற்பாடுகள் நடக்கின்றன. ரஜினி எனும் மூன்றெழுத்து மந்திரம் இந்த இமாலய விற்பனைக்கும், இத்தனை ஆயிரம் திரையரங்குகளில் 'லிங்கா' வெளியாகவும் காரணமாய் அமைந்து விட்டது.

வினியோகஸ்தர்களிடம் இருந்து தியேட்டர்களுக்கு

தமிழகம் முழுவதும் 2 நிறுவனங்கள் 'லிங்கா' படத்தை வெளியிடுகின்றன. கோவை ஏரியாவில் ஒரு நிறுவனமும், கோவையைத் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஒரு நிறுவனமும் 'லிங்கா' படத்தை வெளியிடுகிறது. ஒவ்வொரு ஏரியாவும் கோடிகளில் விற்பனையாகியுள்ளது. இதில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் லாபம் வைக்கப்பட்டு, தியேட்டர்களுக்கு விற்கப்படுகிறது. மினிமம் கியாரண்டி அடிப்படையில், ஒவ்வொரு தியேட்டர்களுக்கும் லட்சங்களில் இந்த படம் விற்பனை செய்யப்படுகிறது.
அதிக தியேட்டர்களில் வெளியானால்தான் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்பதால், தியேட்டர்களின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்த்தப்படுகிறது. அப்படித்தான் தமிழகத்தில் 650 தியேட்டர்களில் 'லிங்கா' வெளியாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் இருக்கும் மொத்த திரையரங்குகளே 950 தான். இதில் புதிய படங்கள் வெளியிடும் திரையரங்குகள் 800க்கும் குறைவு. இதில் 650 தியேட்டர்களில் 'லிங்கா' வெளியாக வாய்ப்புகள் உள்ளன. அப்படியானால் 80 சதவீதத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் 'லிங்கா' தான் ஓடும்.

தியேட்டர்களுக்கு நெருக்கடி தரும் 'எம்.ஜி.'


தியேட்டர்களில் திரைப்படங்கள், 'டேர்ம்ஸ்' அடிப்படையில்தான் திரையிடப்பட்டு வருகின்றன. திரைப்படங்களை திரையிடுவதால் கிடைக்கும் வசூலை, சதவீத அடிப்படையில் தயாரிப்பு தரப்பும், தியேட்டர் உரிமையாளரும் பிரித்துக்கொள்வதுதான் டேர்ம்ஸ் முறை.

ஆனால் 'லிங்கா' இந்த முறையில் வெளியாகவில்லை. 'லிங்கா' படம் தியேட்டர்களுக்கு எம்.ஜி. முறையில், அதாவது மினிமம் கியாரண்டி அடிப்படையில் விற்கப்படுகிறது. மினிமம் கியாரண்டி அடிப்படையில் வெளியாவதுதான் தியேட்டர்களுக்கு சிக்கல். அப்படி என்ன சிக்கல் என்கிறீர்களா?

மினிமம் கியாரண்டி அடிப்படையில் வெளியாகும் படங்களுக்கு, அந்த படத்துக்கு வினியோகஸ்தர்கள் நிர்ணயிக்கும் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும். உதாரணத்துக்கு 'லிங்கா' படம் ஒரு தியேட்டருக்கு 20 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டால், படம் வெளியாவதற்கு முன்னர் பணத் தை செலுத்தி, படத்தை பெற்றுக்கொள்ளலாம். அதன் பின்னர் அந்த தொகையை வசூல் செய்து கொள்ள வேண்டியது தியேட்டர்களின் பொறுப்பு.

மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்கும் இந்த படம், வாங்கிய விலை அளவுக்கு வசூலாகாவிட்டால், அதற்கு தயாரிப்பு நிறுவனங்களோ, வினியோகஸ்தர்களோ பொறுப்பாக மாட்டார்கள். அதனால் விற்ற தொகையை வசூலிக்க வேண்டியது தியேட்டர்களின் பொறுப்பாக மாறுகிறது.

கடைசியில் நமது தலையில்


80 சதவீதத்தும் அதிகமான தியேட்டர்களில் 'லிங்கா' தான் ஓடும் என்பதால், லட்சங்களில் வாங்கப்படும் படத்தை, தியேட்டர்களில் போட்ட சில தினங்களில் முழு வசூலையும் எடுக்க வேண்டிய கட்டாயம் தியேட்டர்களுக்கு. அதிக பட்சம் திரையிடப்பட்ட ஒரு வாரத்தில் இந்த பணத்தை எடுக்க வேண்டியது அந்த தியேட்டரின் பொறுப்பு. மிக பெரும்பாலான தியேட்டர்களில் 'லிங்கா' தான் ஓடும் என்பதால், எவ்வளவு சீக்கிரம் பணத்தை எடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு தியேட்டர் உரிமையாளர்களுக்கு நல்லது. இதனால் படத்தின் டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தினால் மட்டுமே லாபம் கிடைக்கும். இல்லாவிட்டால் தியேட்டர்களுக்கு நஷ்டம் தான்.

குறிப்பாக 20 லட்சத்துக்கு கொடுத்து 'லிங்கா' திரைப்படத்தை வாங்கினால், குறைந்த பட்சம் ரூ.200 முதல் ரூ.300 வரை டிக்கெட் விலையை நிர்ணயிக்க வேண்டும். 600 பேர் அமரக்கூடிய தியேட்டரில் சராசரியாக டிக்கெட் விலை ரூ.200 என்றால், ஒரு நாளில் 4 காட்சிகளில் 4.80 லட்சத்தை எடுக்க முடியும். படம் வெளியாகி முதல் நான்கு நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓட்டி விட்டால், போட்ட தொகையை எடுத்து விடலாம் என்பதுதான் நிலைமை.

எனவே கடைசியில் பார்வையாளர்களாகிய நம்மிடம்தான் அடித்து பிடுங்குகின்றனர். ஹீரோ சம்பளத்தில் துவங்கி, தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் என எல்லோருடையா லாபமும் ஒட்டுமொத்த சுமையாய் மாறி, டிக்கெட் விலையாக நமது தலையில்தான் விடிகிறது.

இத்தனை திரையரங்குகளில் வெளியாவது ஏன்?


இவ்வளவு சிரமத்துகிடையே 'லிங்கா' படத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியது ஏன்? என நீங்கள் கேட்கலாம். அதற்கும் காரணம் இருக்கிறது. ரஜினியின் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு என்பது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே தொடர்ந்து வருகிறது. ஓரிரு படங்களை தவிர படத்தைப் பற்றிய எந்த விமர்சனமும் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை குறைத்ததில்லை.
'லிங்கா'வுக்கு இதையெல்லாம் கடந்து ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. எனவே படத்தை வெளியிட்டால் அதிகபட்சம் முதல் ஒரு வாரத்தில் பணத்தை எடுத்து விடலாம். அதன் பின்னர் வருவதெல்லாம் லாபம் என்பது தியேட்டர் உரிமையாளர்களின் கணக்கு.

அடுத்து 'லிங்கா' வெளியாகும் டிசம்பர் 12 முதல் கிட்டத்தட்ட பொங்கல் பண்டிகை வரை வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை. அப்படி வெளியானால் அதை வினியோகிக்கவும், திரையிடவும் யாரும் இல்லை. எனவே லிங்காவை வெளியிட்டு லாபம் பார்ப்பது ஒன்றுதான் தியேட்டர் உரிமையாளர்களுக்கு வழி.

டிசம்பர் 12 முதல் ஜனவரி இரண்டாவது வாரம் வரை கிட்டத்தட்ட ஒரு மாதம் நீங்கள் விரும்பினாலும் 'லிங்கா'வை தவிர வேறு படங்களை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு தமிழகத்தில் மட்டும் 650 முதல் 700  தியேட்டர்களில் 'லிங்கா'தான் ஓடுமாம். வார வாரம் படத்துக்கு போகிறவர்கள், வார வாரம் 'லிங்கா'வை தான் தரிசிக்க முடியும். வேறு எந்த படங்களுக்கும் ஜனவரி வரை இடமில்லை.

ரூ.300க்கு விற்றாலும் ஆச்சரியமில்லை

'லிங்கா' திரைப்படத்தின் டிக்கெட் விலை குறைந்த பட்சம் ரூ.150ல் துவங்கி ரூ.300 வரை விற்கப்படும் என்கிறார்கள் திரைத்துறையினர். தமிழகத்தை பொறுத்தவரை சாதாரண தியேட்டரில் ஒரு திரைப்படத்தை வெளியிட்டால் குறைந்த பட்சமாக வகுப்பு வாரியாக ரூ10, ரூ.30, ரூ.50 என டிக்கெட் விலையை நிர்ணயிக்கலாம் என்பது விதி. ஆனால் லிங்கா வெளியாகி ஒரு சில தினங்களுக்கு எல்லா வகுப்புகளுக்கும் ரூ.150 முதல் ரூ.200 வரை டிக்கெட் விலை இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே எந்திரன் பட வெளியீட்டின் போது இதுதான் நடந்தது. ரூ.150, ரூ.200க்கு டிக்கெட் விற்கப்பட்டாலும் கொடுக்கப்பட்ட டிக்கெட்டில் ரூ.50 என்று தான் இருக்கும். இல்லாவிட்டால் டிக்கெட்டில் விலையே இருக்காது.

பல தியேட்டர்களை கொண்ட மல்டி பிளக்ஸ்கள் டிக்கெட் விலை யை உயர்த்த செய்யும் வித்தைகள் புது விதம். மல்டிபிளக்ஸ்களில் ஒரு டிக்கெட் விலை ரூ.85 முதல் ரூ.120 வரை விற்கலாம் என்கி றது சட்ட விதி. ஆனால் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய் வதன் மூலம் ரூ.200 வரை விற்க முடியும். கூடுதலாக பெறும் பணத்துக்கு, சிறிய குளிர்பான பாட்டிலோ அல்லது சிறிய பாப்கார்ன் பொட்டலமோ வழங்கப்படும். இது 100 ரூபாயா? என நீங்கள் கேட்க முடியாது. இந்த குளிர்பானத்தையோ, பாப்கார்னையோ மறுக்கும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படாது.

நடிகரின் சம்பளத்தால் தயாரிப்பு செலவு கூடுகிறது. தயாரிப்பு செலவு அதிகரிப்பதால், கூடுதல் விலைக்கு விற்க வேண்டியுள் ளது. கூடுதல் விலைக்கு பெறுவதால் தியேட்டர்களுக்கு அதிக விலைக்கு விற்க வேண்டியது கட்டாயமாகிறது. அதிக விலைக்கு படத்தை பெறுவதால் டிக்கெட் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எல்லோரும் லாபம் பார்க்க கூடுதல் விலைக்கு விற்கின்றனர். ஆனால் இதில் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு 3 மணிநேரம் நமது பொழுதை போக்க தியேட்டருக்குள் நுழையும் நாம் மட்டும், ஏன் வழக்கத்துக்கு மாறாக இது போன்ற சில படங்களுக்கு மட்டும் அநியாய விலை கொடுக்க வேண்டும். ரசிகர்கள் இதில் எல்லாம் கணக்கா பார்க்கிறார்கள் என்ற குருட்டு தைரியம்தான் இத்தனை பேரையும் இப்படி கூடுதல் விலைக்கு விற்க வைக்கிறது?.

ஆனால் இதைப்பற்றி எல்லாம் நமக்கென்ன கவலை?

"அட 'லிங்கா' படத்துக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சாப்பா? எவ்வளவா இருந்தாலும் பரவாயில்லை. ரெண்டு டிக்கெட் புக் பண்ணிரு.  தலைவர் படத்த முதல் நாள் முதல் ஷோ பார்க்கனும்ல! -ச.ஜெ.ரவி< விகடன்.com

கருத்துகள் இல்லை: