திங்கள், 1 டிசம்பர், 2014

அமெரிக்க ஆள் கடத்தலும் விசா மோசடியும் !

கோபி முத்துபெரியசாமி
கோபி முத்துபெரியசாமி மதுரையைச் சேர்ந்தவர். கணினி மென்பெருள் வல்லுனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழையும் பலரையும் போல் அமெரிக்க கனவுகளைக் கொண்டவர். அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும், அங்கே ஒரு நல்ல வேலையையும் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ளும் கனவுகள் அவருக்கு இருந்தது. அமெரிக்காவில் வேலை தேடி வந்த கோபிக்கு சாப்டெக் என்கிற நிறுவனத்தின் அறிமுகம் கிடைத்துள்ளது.
கோபி முத்துபெரியசாமி
2007-ம் ஆண்டு சாப்டெக் நிறுவனத்தில் வேலை கிடைத்து அமெரிக்கா சென்றுள்ளார் கோபி. சாப்டெக் நிறுவனத்தில் வேலை என்றால் அது சாப்டெக் நிறுவன வேலையல்ல – குழப்பமாக இருக்கிறதா? சாப்டெக் கிருஷ்ண குமார் என்பவரால் அமெரிக்காவில் நடத்தப்பட்டு வரும் ஒரு ’ஆள்பிடி’ நிறுவனம்.

ஒவ்வொரு ஆண்டும் வணிக நிறுவனங்களில் வேலை செய்ய வருபவர்களுக்கு 65,000 விசாக்களையும், அமெரிக்க பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு 20,000 விசாக்களையும் வழங்குவதற்கு சட்டம் வழி செய்கிறது. பல்கலைக் கழகங்களிலும் லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலை செய்வதற்கான விசாவுக்கு வரம்பு எதுவும் இல்லை. இது போன்ற நிறுவனங்களில் பணிபுரிய அயல்நாடுகளில் இருந்து வருபவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் விலக்கு உள்ளது.
ஆக, பல்வேறு (வேண்டுமென்றே போடப்பட்ட) ஓட்டைகளோடு உள்ள குடியுரிமைச் சட்டத்தின் படி, அமெரிக்க முதலாளிகள் ஆண்டு தோறும் லட்சத்திற்கும் அதிகாமான தொழிலாளர்களை அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். 2010-ம் ஆண்டில் 1.17 லட்சம் விசாக்களும், 2011-ம் ஆண்டில் 1.29 லட்சம் விசாக்களும் வழங்கப்பட்டன. 2012-ம் ஆண்டு மட்டும் அங்கீகரிக்கப்பட்ட புதிய குடியேற்ற விண்ணப்பங்கள் மற்றும் குடியேற்ற புதிப்பிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,62,569 ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி துவங்கி விண்ணப்பங்களை அமெரிக்க குடியுரிமைத் துறை ஏற்றுக் கொள்ளத் துவங்கும். குடியுரிமைத் துறை விண்ணப்பங்களை ஏற்கத் துவங்கிய ஓரிரு நாட்களுக்குள்ளாகவே லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்த அந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு அளவைக் கடந்து விடுகிறது. இவ்வாறு தங்களுக்கான ஹெச்1பி விசா ஒதுக்கீட்டு அளவுக்காக தொழில் நிறுவனங்கள் மாத்திரமின்றி கோபியை பணிக்கு அழைத்த சாப்டெக் போன்ற ஆள்பிடி நிறுவனங்களும் துண்டு போட்டு வைத்துக் கொள்கின்றன.
பின்னர் தமது ஒதுக்கீட்டின் கீழ் இந்தியாவில் இருந்து அமெரிக்க கனவுகளோடு மேற்கே வைத்த கண்ணை இமைக்காமல் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் அப்பாவி இளைஞர்களை ’வேலை கொடுத்து’ வரவழைக்கிறார்கள். இப்படி வரவழைக்கப்படும் இளைஞர்களை நகருக்கு வெளியே வாடகைக்குப் பிடித்த எலிபொந்துகளில் குவித்து வைத்து அவர்களின் திறனுக்கேற்ற வேலையைத் தேடத் துவங்குகிறார்கள்.
இவ்வாறு இந்தியாவில் இருந்து வரவழைக்கப்படும் இளைஞர்களின் தொழில்நுட்ப அனுபவ விவரக் குறிப்பில் (Resume) அவர்களுக்கு தெரியாத தொழில்நுட்பங்களைக் கூட தெரிந்தது போல் குறிப்பிட்டு போர்ஜரி செய்யும் ஆள்பிடி நிறுவனங்கள், அவற்றை வேலைச் சந்தையில் சுற்றுக்கு விடுகிறார்கள். இவ்வாறு ஆள்பிடி நிறுவனங்களால் அமெரிக்க வேலைச் சந்தைக்குள் தள்ளப்படும் பலியாடுகளை வெரிசான், கூகிள், ஐ.பி.எம், ஆப்பிள் போன்ற பகாசுர நிறுவனங்கள் தங்கள் தேவைக்கேற்ப தெரிவு செய்து கொள்ளும். அந்த சில மாத அல்லது சில வார இடைவெளிக்குள் அனுபவ விவரக் குறிப்பில் செய்யப்பட்டுள்ள போர்ஜரிகளுக்கு ஏற்ப தொழில்நுட்பங்களைப் படித்து அடிமைகள் தங்களைத் தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.
அமெரிக்க நிறுவனங்களைப் பொறுத்தவரையில் உள்ளூர் அமெரிக்கர்களைப் பணிக்கமர்த்தினால் குறைந்தபட்ச ஊதியமாக பெருந்தொகை கொடுக்க வேண்டியிருக்கும். ஹெச்1.பி விசா திட்டமே ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளங்களை குறைத்து லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் லாபியிங் மூலம் 1990-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது தான்.
அமெரிக்க நிறுவனங்களில் இவ்வாறு வேலை செய்ய ஹெச்1.பி விசாவில் வருபவர்களுக்கான சம்பளம் அதே மாநிலத்தில் அதே மாதிரியான வேலையைச் செய்யும் அமெரிக்கருக்கு கொடுப்பதை விட $13,000 குறைவு என்றும் மென்பொருள் நிரல் எழுதும் வேலைகளில் ஹெச்1.பி விசாவில் போகும் வெளிநாட்டு ஊழியர்களில் 85 சதவீதம் பேரின் சம்பள வீதம் சராசரி சம்பளத்தை விட குறைவாக இருக்கிறது என்றும், 4 சதவீத ஹெச்1.பி ஊழியர்கள் மட்டுமே உயர் சம்பளம் பெறும் 25% பேரில் இருக்கின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஹர்ஷல் வைத்யா
ஆள் பிடி நிறுவனங்களுக்கு எதிராக ஒரு இணைய மன்றத்தை ஆரம்பித்த ஹர்ஷல் வைத்யா
இந்த ஊழியர்கள் வெளி நிறுவனம் மூலம் வேலைக்கு வருபவர்கள் என்ற பேதமே இல்லாமல் அமெரிக்க நிறுவனத்தினுள் ஒரு அமெரிக்க ஊழியர் செய்து வந்த வேலையை செய்தாலும் அவர்களுக்கான சம்பளத்தை ஆள்பிடி நிறுவனமே வழங்குகிறது. தலைக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து அமெரிக்க நிறுவனத்திடம் பெரும் தொகையைப் பெற்றுக் கொள்ளும் ஆள்பிடி நிறுவனங்கள், அதில் தமது கமிஷனைக் கழித்துக் கொண்டு எஞ்சி சொற்ப தொகையை சம்பளமாக ஊழியர்களுக்குக் கொடுக்கிறார்கள்.
வருடத்திற்கு 51,000 டாலர்கள் (31 லட்சம் ரூபாய்) என்ற சம்பளத்திற்கு கோபி சாப்டெக் நிறுவனத்தின் மூலம் வேறு ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணியைத் துவங்கியுள்ளார். இந்திய மதிப்பில் அதிகமாகத் தோன்றும் இந்த சம்பளம், அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆடம்பர கேளிக்கைகளைச் சுருக்கிக் கொண்டு அத்தியாவசிய செலவுகள் மட்டும் செய்து நடுத்தர வாழ்க்கை வாழவே போதுமானது. இந்த நிலையில் மூன்றாண்டுகளைக் கழித்த கோபி, ஓஹியோ மாநிலத்தில் அதிக சம்பளத்திற்கு வந்த வேறு ஒரு வேலைக்கு மாறியிருக்கிறார்.
இந்நிலையில் தங்களோடு கோபி செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி விட்டார் என்று நீதிமன்றத்தை அணுகிய சாப்டெக், அதற்காக அவர் 20,000 டாலர் நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளது. இது கோபிக்கு மட்டுமே நேர்ந்த துரதிர்ஷ்டம் அல்ல.
ஹெ1.பி விசா மூலம் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்ய நூற்றுக்கணக்கான ஆள்பிடி நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சம்பளத்தை பிக்பாக்கெட் அடிக்கும் இந்நிறுவனங்கள், அதன் மூலம் லட்சக்கணக்கான டாலர்களைச் ஒவ்வொரு ஆண்டும் சுருட்டிக் கொள்கிறார்கள்.
இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வேலைகளுக்காக வரும் தொழிலாளர்களிடம் இருந்து சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களைப் பெற்று முடக்கி வைத்துக் கொள்ளும் ஆள்பிடி நிறுவனங்கள், அவர்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு தங்கள் நிறுவனத்திலேயே அடிமைகளாக இருக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். அமெரிக்காவுக்கு உயர்தர அடிமைகளை சப்ளை செய்யும் வேலையில் ஈடுபடும் பல ஆள்பிடி நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுபவை என்பது ஒரு உபதகவல்.
ஆள்பிடி நிறுவன்ங்கள் குறித்து சமீபத்தில் புலனாய்வு இதழியலுக்கான மையம் (Center for Investigative Journalism) என்ற அமைப்பு நடத்திய இரகசிய விசாரணை அறிக்கை இந்நிறுவனங்களைக் கொத்தடிமைக் கூடங்கள் என்றே அழைக்கிறது. அடிப்படை தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படும் ஹெச்1.பி ஊழியர்கள், அமெரிக்க சட்டங்களில் உள்ள சந்து பொந்துகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அடிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
ஒப்பந்தத்தை மீறி சுயேச்சையாக முயற்சி செய்து வேறு நிறுவனங்களில் வேலை தேடிக் கொள்ளும் கோபி போன்றவர்களை நீதிமன்றத்திற்கு இழுக்கிறார்கள். அமெரிக்க சட்டங்கள் பற்றிய அறிவோ, நீதி மன்ற நடைமுறைகள் குறித்த புரிதலோ இல்லாத ஊழியர்கள் பல வழக்குகளில் தங்களுக்காக வாதாட வழக்கறிஞர்களைக் கூட நியமிக்க வாய்ப்பில்லாமல் சொந்த முறையில் தங்களை நீதிமன்றத்தில் தற்காத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஊழியர்களுக்கு எதிராக அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளும் ஆள்பிடி நிறுவனங்கள் தான் வழக்குகளில் இயல்பாக வெல்கிறார்கள். சராசரியாக இருபதாயிரத்திலிருந்து இருபத்தைந்தாயிமாக விதிக்கப்படும் அபராத தொகையைக் கட்ட வழியில்லாத ஊழியர்கள் பலர் ஓட்டாண்டிகளாகி இந்தியாவுக்குத் திரும்புகின்றனர். சிலர் வேலையும் இழந்து ஆள்பிடி நிறுவனத்திற்கு கட்டிய இருப்புத் தொகையையும் இழந்து சொல்லாமல் கொள்ளாமல் இரகசியமாக அமெரிக்காவை விட்டு ஓடிவந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
கோபி முத்துபெரியசாமி ஒரு விதிவிலக்கு. கோபியின் தந்தை மதுரையில் தொழிற்சங்கம் ஒன்றில் தலைவராக இருந்துள்ளார். தனது தந்தையின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து தான் ஊக்கம் பெற்றதாகச் சொல்லும் கோபி, சாப்டெக் நிறுவனத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். வழக்கின் செலவை ஈடுகட்ட முடியாமல் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று சகலரிடமும் கடன் வாங்கி சுமார் 25000 டாலர்கள் வரை செலவு செய்து இறுதியில் வழக்கில் வென்றுள்ளார்.
மேலோட்டமாகப் பார்த்தால் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டுப் போன பேராசைக்காரர்கள் தானே என்ற முடிவுக்கு நாம் வந்து விட முடியும். வடமாநிலங்களில் இருந்து வாழ வழியற்று தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு அத்துக் கூலிகளாய் வந்து விழும் தொழிலாளர்களையும் கோபி உள்ளிட்டவர்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாது.
வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த ஊரில் பிழைக்க வழியேற்படுத்திக் கொடுக்காத அதே அரசு தான் கோபியைப் போன்ற படித்தவர்களுக்கும் உரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமல் நாட்டை விட்டு விரட்டுகிறது. அல்லது இந்நாட்டிற்கு தேவையான படிப்பு, சுதேசி பொருளாதாரத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பம் என்பதை புறக்கணிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகளுக்கேற்ற படிப்பு, மலிவான உழைப்புச் சந்தை என்பதே இதன் பின்னணி. இதில் வெளிநாடு சென்று சம்பாதித்து ஆடம்பரமாக வாழலாம் எனும் நுகர்வு கலாச்சார மோகத்தில் இப்படிப்பட்ட இளைஞர்கள் பலியாகிறார்கள்.
இந்திய முதலாளிகள் லாபம் சம்பாதிப்பதை வடமாநிலத் தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி எப்படி உத்திரவாதப்படுத்துகிறதோ அதே போலத் தான் அமெரிக்க முதலாளிகள் லாபம் சம்பாதிப்பதை மூளையுழைப்பு செய்யும் உயர்தரத் தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி உத்திரவாதப்படுத்துகிறது. அளவிலும் பரிமானத்திலும் இந்த இரண்டு போக்குகளுமே வேறுபட்டிருந்தாலும், சாராம்சத்தில் இரண்டுமே முதலாளிகளின் லாபவெறிக்கே சேவை செய்வதாக இருக்கிறது.
சட்டமும் விதிகளும் இந்தியாவில் மட்டுமின்றி . கோபியைப் போல் ஓரளவிற்காகவது சுரணை உள்ளவர்கள் இதை எதிர்த்த போராட்டத்தின் வரம்பை விரித்துக் கொள்ள வேண்டும். தங்களுடைய வாழ்க்கைக்கான போராட்டங்கள் என்று மட்டும் சுருக்காமல், தங்களைப் போல் பாரம்பரிய நிலத்திலிருந்து பிய்த்தெரியப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவுக்கு உள்ளேயும் விசிறியடிக்கப்படும் மக்களுக்காகவும் போராட முன்வர வேண்டும்.
- தமிழரசன். vinavu.com

கருத்துகள் இல்லை: