புதன், 3 டிசம்பர், 2014

பிளஸ் 2 மாணவன் அறைந்ததில் ஆசிரியை காது கிழிந்தது ! மதுரவாயலில்ஆஸ்பத்திரியில் சிகிச்சை

மதுரவாயலில் ஆசிரியை கன்னத்தில் அறைந்த பிளஸ்–2 மாணவனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கம்ப்யூட்டர் ஆசிரியை மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சென்னை புளியந்தோப்பு. வ.உ.சி. தெருவைச் சேர்ந்த லட்சுமி (வயது 38) என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் மாலை பிளஸ்–2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் வகுப்பு நடத்திக் கொண்டு இருந்தார். அப்போது வகுப்பறையில் இருந்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் கம்ப்யூட்டரை முறையாக அணைத்து வைக்கவில்லை என்று தெரிகிறது. இதை கண்ட ஆசிரியை லட்சுமி ‘கம்ப்யூட்டரை ஏன் முறையாக அணைக்கவில்லை?’ என்று கூறி கண்டித்து, அடித்ததாக கூறப்படுகிறது. சமுகத்தை குட்டி சுவராக்கும் சினிமா வன்முறை காட்சிகள் தான் இது போன்ற காட்டுமிராண்டிகளை உருவாக்கி விட்டுள்ளது
கன்னத்தில் அறைந்த மாணவன் சக மாணவர்கள் முன்னிலையில் தன்னை ஆசிரியை அடித்ததால் ஆத்திரம் அடைந்த மாணவர் திடீர் என்று ஆசிரியை லட்சுமியை கன்னத்தில் ’பளார் பளார்’ என சரமாரியாக அடித்தார்.

இதில் நிலை குலைந்து போன லட்சுமி செய்வது அறியாமல் அப்படியே கன்னத்தை பிடித்துக்கொண்டு அழுதபடி கீழே அமர்ந்தார்.

இதைக் கண்டதும் மாணவர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். வகுப்பறைக்கு வந்த ஆசிரியர்கள் காயம் அடைந்த லட்சுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் காண்பித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் வீடு திரும்பினார்.

நேற்று காலை ஆசிரியை லட்சுமியின் காதில் அதிக வலி ஏற்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் காதில் ‘சவ்வு’ கிழிந்து விட்டதால் ஆபரேசன் செய்ய வேண்டும் என்று மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாரி விசாரணை

மாணவரால் ஆசிரியை தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி சாமிநாதன் பள்ளிக்கு வந்து தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்ட சாமிநாதன் இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் கொடுக்கப்படும் என்றும், இதையடுத்து அந்த மாணவன் பள்ளியில் படிப்பை தொடர முடியுமா? அல்லது பள்ளியில் இருந்து நீக்கப்படுவாரா? என்பது தெரியவரும் என்றும் கூறினார்.

மேலும் ஆசிரியையை தாக்கிய மாணவர் நேற்று பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை அதுமட்டுமின்றி இந்த மாணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பள்ளி ஆசிரியர் ஒருவரை தாக்கியதாகவும், அதன்பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்த பிறகே மீண்டும் பள்ளியில் அனுமதிக்கப்பட்டு தனது படிப்பை தொடர்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மீண்டும் தற்போது ஆசிரியரை தாக்கியதால் அந்த மாணவரை பள்ளியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டு வருவதாக ஒரு தரப்பினர் தெரிவித்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பள்ளி முன்பு மதுரவாயல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: